சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

பல இன்னல்களை எதிர்கொண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்திய நாடானது இன்று பல துறைகளிலும் வளர்ச்சி கண்டு சிறந்த நிலையில் காணப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பொருளாதார வளர்ச்சி
  3. விண்வெளி ஆய்வு வளர்ச்சி
  4. தொழில்நுட்ப வளர்ச்சி
  5. கிராமப்புற வளர்ச்சி
  6. முடிவுரை

முன்னுரை

பல கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்திய திருநாடானது வடக்கே இமய மலையையும், தெற்கே கடலோர சமவெளிகளையும்,மேற்கே தார்பாலைவனத்தையும், கிழக்கே கங்கா நதியையும் கொண்டு அமைந்துள்ளது.

இது பிரித்தானிய காலனித்துவத்தில் 200 ஆண்டுகள் முடங்கிக் கிடந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் சுதந்திரம் அடைந்து தனித்துவமான நாடாக செயல்பட ஆரம்பித்தது. அதன் பிறகு இந்தியா பல துறைகளிலும் பாரிய வளர்ச்சிகளை கண்டது.

பொருளாதார வளர்ச்சி

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரான பொருளாதார வளர்ச்சியை பற்றி நோக்குகின்ற போது, இந்தியாவின் நாணய மதிப்பின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1950களில் 1.3 பில்லியன் டொலர்களில் இருந்தது. ஆனால் தற்போது ட்ரில்லியன் டொலராக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்திய நாடு மிகப்பெரிய ஏற்றுமதி பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒருவருக்கு ரூ.6443 ஆக காணப்பட்டது. ஆனால் அது தற்போது அதாவது, 2020களில் ரூ. 180,736 ஆக உயர்வடைந்துள்ளது.

விண்வெளி ஆய்வு வளர்ச்சி

சுதந்திரத்தின் பின்னர் இந்தியா தனது தடத்தை  விண்வெளியில் பதித்திருக்கிறது. விண்வெளி ஆய்வில் தலை சிறந்த ஐந்து நாடுகளில் ஒரு நாடாகவும் காணப்படுகிறது.

“இஸ்ரோ” எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு துறையின் மூலம் “மங்கல்யான், சந்திராயன்” போன்ற விண்வெளி ஓடங்களை செவ்வாய், சந்திரன் போன்றவற்றுக்கு அனுப்பி இருந்தது.

ஒற்றை ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கே உரியதாக காணப்படுகிறது. முதன் முதலில் சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்ததும் இந்திய நாடு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சி

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா தொழில்நுட்ப துறையில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

இந்தியாவில் காணப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகபட்ச வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அத்துடன் ஆட்டோமொபைல் சந்தையில் நான்காவது இடத்தில் இந்தியா காணப்படுகிறது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சின் விளைவால் கணினி தொழில்நுட்பம், தொலைபேசிகள் வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம், வாகனங்களின் வடிவமைப்பு, பொறியியல் துறை, இராணுவ துறை மற்றும் மருத்துவ துறை என அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.

கிராமப்புற வளர்ச்சி

சுதந்திரத்துக்கு முன்னர் அதாவது 1950 களில் இந்தியாவில் 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மாத்திரமே காணப்பட்டது. ஆனால் தற்போது 55 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத்தில் மின்சாரங்களின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டுகள் 110 கோடி  வீடுகள் வரை எட்டியுள்ளது.

கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்யும் நோக்க தண்ணீர் தாங்கிகள் அமைத்தல், அரச கட்டடங்கள் அமைத்தல், பாடசாலை அமைத்தல், தொழிற்சாலைகளை அமைத்து வறிய மக்களுக்கு தொழில்களை வழங்கல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, 1947 களில் பிரித்தானியர் நாட்டை இந்திய தலைவர்களிடம் ஒப்படைத்த விட்டு செல்லும்போது இந்தியாவில் காணப்பட்ட வறுமை 70 சதவீதம் ஆகும். ஆனால் 2018 ஆம் ஆண்டுகள் அது 3.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

முடிவுரை

சுதந்திரத்திற்குப் பிறகு இவ்வாறு பல துறைகளில் இந்திய நாடானது வளர்ச்சி கண்டாலும் சாதி, மத பாகுபாட்டின் காரணமாக மக்களிடையே பல ஏற்றத்தாழ்வுகள் இன்று வரை நிலவி வருவது கவலைக்கு உரிய விடயமாக காணப்படுகிறது.

இந்த வேறுபாடுகளை கலைந்து இந்திய நாடானது மேலும் பல துறைகளில் வளர்ச்சி அடைய ஒற்றுமையாக செயற்படுதல் வேண்டும்.

You May Also Like:

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை