அறிவை விரிவு செய் கட்டுரை

arivai virivu sei in tamil

அறிவு என்பது பொருள் சார்ந்த கோட்பாடு அல்லது நடைமுறை ரீதியான புரிதலை குறிக்கலாம்.

இந்த அறிவு ஒவ்வொருவருக்கும் மறைமுகமானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, அதிகளவானதாகவோ அல்லது குறைந்த அளவிலானதாகவோ, மரபு ரீதியானதாகவோ அல்லது முறைப்படியானதாகவோ இருக்கலாம். ஆகவே நாம் அறிவை விரிவு செய்து கொள்ள முடியும்.

அறிவை விரிவு செய் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறிவு என்றால் என்ன
  • அறிவின் அவசியம்
  • அறிவினை விரிவு செய்யும் வழிமுறை
  • அறிவினை விரிவு செய்வதனால் கிடைக்கும் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

ஒருவருடைய அறிவினால் ஏற்படக்கூடிய ஆற்றல்களானது, ஏனையவர்களிடம் எம்மை மேன்மையானவர்களாக காட்டுவதற்கு உதவுகின்றது.

“நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை தான் அறிவு” என பிளேட்டோ வரையறை செய்கின்றார். எனவே அறிவு என்பது மிக பெரிய செல்வமாகும். அந்த அறிவை விரிவு செய்வது எமக்கு நன்மை பயக்கும்.

அறிவு என்றால் என்ன

அறிவு என்பது பிரித்து அறிகின்ற திறன் தெளிவான விவேகத்திறன் என்பவற்றின் வெளிப்பாட்டின் மூலம் புலப்படுகின்றது.

அதாவது திருவள்ளுவர் “எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என இந்த உலகில் பலவிதமான கருத்துக்கள் பலரின் வாயிலாக கிடைக்கப்பெற்றாலும் அவற்றில் உண்மையான கருத்தினை தெளிவாக புரிந்து கொள்வதே அறிவு என்கின்றார்.

அறிவின் அவசியம்

“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பிழை செறுவார்க்கும் செய்தல் அரிது” என்ற குறளின் மூலமாக, அறிவற்றவர்கள் தமக்குத்தாமே செய்து கொள்ளும் துன்பமானது, அவர்களது எதிரிக்கு கூட செய்ய மாட்டார்கள் என திருவள்ளுவர் அறிவின் அவசியத்தை உணர்த்துகிறார்.

எனவே அறிவு என்பது மிகப்பெரிய ஒரு செல்வமாகும் அதனைக் கொண்டு எல்லாச் சூழ்நிலையையும் ஒருவனால் சமாளித்து வாழ முடியும்.

அறிவினை விரிவு செய்யும் வழிமுறை

அறிவை விரிவு செய்யும் மிகப்பெரிய ஆயுதம் புத்தகங்களாகவே காணப்படுகின்றன. அதாவது நாம் புதிய ஒரு விடயத்தை கற்றுக் கொள்வதற்கும் புதிய ஒரு விடயம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்கும் புத்தகங்கள் எமக்கு உதவுகின்றன.

இன்று சிறந்த நூல்களை நூலகங்களில் மாத்திரம் இன்றி இணையதளங்களில் கூட இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவினை விரிவு செய்வதனால் கிடைக்கும் பயன்கள்

“அறிவினான் ஆகுவ துண்டோ பிரிதின்நோய் தம்நோய் போல் போற்றாக் கடை” எனும் குறளின் ஊடாக அறிவின் பயன்பாடானது தனக்கு மாத்திரம் உடையது அன்று, தன்னை சுற்றி இருக்கக்கூடிய அனைவருக்கும் உதவக் கூடியதாக இருக்க வேண்டும் என திருவள்ளுவர் கருதுகின்றார்.

எனவே அறிவு உடையவர்கள் மூலம் இச்சமூகத்திற்கு இரக்க குணமும், நல்ல செயல்களுமே வெளிப்படுத்தப்படும். இன்னும் கல்வி, செல்வம், வீரம் போன்ற அனைத்தையும் அறிவை விரிவு செய்வதன் மூலம் ஒருவர் அடைந்து கொள்ளும் பயன்களாகும்.

முடிவுரை

“அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என தூங்கிக் கொண்டிருந்த மக்களை தட்டியை எழுப்பினார் பாரதிதாசன்.

இவரது கருத்துக்கு அமைய நாம் ஒவ்வொருவரும் எமக்கு இருக்கக்கூடிய அறிவை மென்மேலும் விரிவு செய்து அதன் மூலம் பயன்களை பெறக்கூடியவர்களாக மாற வேண்டும்.

You May Also Like:

சிகரம் தொட சிலேட்டை எடு கட்டுரை