ஆரோக்கியமான உணவு கட்டுரை

arokiyamana unavu katturai in tamil

உணவே மருந்து எனும் அளவுக்கு, மனிதர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அவர்கள் உண்ணக்கூடிய உணவு மிகுந்த செல்வாக்கு செலுத்துகின்றது. பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களையும், இயற்கையோடு கூடிய உணவு முறைமைகளையும் கடைபிடிப்பதன் மூலம் எம்முடைய ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க முடியும்.

ஆரோக்கியமான உணவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவின் அவசியம்
  • நன்மை தரக்கூடிய உணவு பழக்க வழக்கம்
  • உணவு கலாச்சாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
  • தீய உணவு பழக்கவழக்கங்களினால் ஏற்படக்கூடிய நோய்கள்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகில் வாழக்கூடிய அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றி அமையாத தேவையாக உணவு காணப்படுகின்றது. உணவு இல்லையேல் உயிரினங்கள் இல்லை என குறிப்பிடலாம். அந்த அளவுக்கு இந்த உணவின் மகத்துவம் காணப்படுகின்றது.

அதாவது சிறந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே ஆரோக்கியமான உணவு பற்றி அறிந்து கொள்வோம்.

உணவின் அவசியம்

உணவின் அவசியம் பற்றி திருவள்ளுவரின் குறள் ஒன்றின் மூலமாக புரிந்து கொள்ள முடியும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

அதாவது நாம் தினமும் உண்ணக்கூடிய உணவில் எமக்கு பொருத்தமான உணவை தேர்ந்தெடுத்து உண்பது ஆனது எமது ஆரோக்கியத்துக்கு சிறந்த மருந்தாக அமைந்து விடும் என வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

இதன் மூலமாக நாம் சிறந்த உணவுகளை உட்கொள்வது எமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு போதுமானது என்பது தெளிவாகின்றது. உயிர் வாழ்வதற்கு அவசியமான இத்தகைய உணவை சிறந்த முறையில் தெரிவு செய்து உண்பது அவசியமானதாகும்.

நன்மை தரக்கூடிய உணவு பழக்க வழக்கம்

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒன்றாகவே உணவு காணப்படுகின்றது. எனவே ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவு உட்கொள்வது சிறந்ததாகும். அதாவது காலை, பகல், இரவு என மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை உணவு உடல் சுறுசுறுப்புக்கு மிகவும் அவசியமானதாகும். பகல் உணவு ஒரு முழுமையான உணவாகவும், இரவு உணவானது எளிமையாக சமிபாடு அடையக்கூடிய மெல்லிய உணவுகளாகவும் இருத்தல் வேண்டும்.

துரித உணவுகள் நவீன காலத்திய மேற்கத்திய உணவுகள் போன்றவற்றை உண்பதனை நாம் அதிகமாகவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் உடல் நோய்கள், குடல் புண், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடலாம்.

எனவே நாம் எம்முடைய பாரம்பரிய உணவுகளையும் எமது முன்னோர்கள் காட்டிய வழி இயற்கையான உணவுகளையும் உண்பது சிறந்ததாகும்.

உணவு கலாச்சாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்

இன்று எமது சமூகம் மேற்கத்திய நாகரீக மயமாக்கத்துக்கு உட்பட்டு தமக்கான அடையாளங்களை மறந்து வாழ்வதனை காணலாம். அதாவது எம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மறந்து மேற்கத்திய துரித உணவு பழக்கவழக்கங்களை இன்று நாம் பின்பற்றுவதனை காண முடிகின்றது.

அதாவது அதிக நிறமூட்டிகள், அதிக சுவையூட்டிகள், அதிக கொழுப்பு, அதிக சீனி போன்றன நிறைந்த பீட்சா, பர்கர், பெப்சி, கொக்கா கோலா, சப்மெரின் போன்ற துரித உணவுகளையே இன்று நாம் அதிகம் உண்கின்றோம்.

இவ்வாறான உணவுப் பழக்க வழக்கங்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகமான தீமைகளே கிடைக்கின்றன. என்பதை உணர்ந்து, உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

தீய உணவு பழக்கவழக்கங்களினால் ஏற்படக்கூடிய நோய்கள்

நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய உணவு கட்டுப்பாடுகளை மீறி, சுவை என்ற பெயரில் ஆரோக்கியமற்ற மேற்கத்திய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது தான், இன்று எங்களுடைய ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறாக எம்முடைய தீய உணவு பழக்கவழக்கங்களினால் அதிகமான உயிரிழப்புக்களும், புற்றுநோய், மன அழுத்தம், உடல் பருமன் அதிகமாதல், சலரோகம், உயர் குருதி அமுக்கம், குடல் புண் மற்றும் குடல் சார் நோய்கள் போன்றன அதிகமாக உருவாகின்றன.

எனவே இவ்வாறான நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் சிறந்த உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

முடிவுரை

உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த மருந்து உணவாகும். எனவே மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் ஆரோக்கியங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சிறந்த உணவு, உணவு பழக்க வழக்கம் மற்றும் சிறந்த உணவு பழக்க வழக்கங்களினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் போன்றவற்றினை அறிந்து கொண்டு செயல்படுவது மிகவும் அவசியமானதாகும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் சிறந்த உணவுகளை உட்கொண்டு எமது ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.

You May Also Like:

தீ விபத்து கட்டுரை

சமுதாயம் என்றால் என்ன