தைப்பூசம் பற்றிய கட்டுரை

thaipusam katturai in tamil

தமிழர் பண்பாட்டில் பல்வேறு சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்றாகவே இந்த தைப்பூசமும் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தைப்பூசமானது இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலக வாழ் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஓர் விழாவாகவே காணப்படுகின்றது.

தைப்பூசம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தைப்பூசம் என்றால் என்ன
  • தைப்பூசத்தின் சிறப்புகள்
  • தைப்பூசத்தின் விரத முறை
  • தைப்பூச விரதத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவில் வாழக்கூடிய தமிழ் மக்கள் பல்வேறு கொண்டாட்டங்களையும், விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாகவே இந்த தைப்பூசமும் காணப்படுகின்றது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகவே இந்த தைப்பூசம் காணப்படுகின்றது.

திருஞானசம்பந்தர் பாடியுள்ள “பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்ற தேவாரப் பதிவுகளின் மூலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னறே தைப்பூசம் கொண்டாடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

தைப்பூசம் என்றால் என்ன

முருகனுக்கு உகந்த தினம் தைப்பூசம் என வருடா வருடம் முருக கடவுளுக்காக கொண்டாடப்படும் ஓர் விழாவாகவே தைப்பூசம் காணப்படுகின்றது. ஆறு நபர்களது சக்தியும், ஆட்சியிலும் ஒருங்கிணைந்து தோன்றிய ஒருவனாகவே முருகப்பெருமான் விளங்கினார்.

இவர் கலைகளிலும் பல வித்தைகளிலும் சிறந்தவராவார். அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுக்காலம் தோன்றிய போது பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலினை அன்னைப் பார்வதி வழங்கினார். அவ்வாறு ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூசம் ஆகும்.

அந்த ஞானவேல் கொண்ட கந்தன் அசுரர்களை வதம் செய்து தேவர்களை காத்து அருளினார். இதனை நினைவு கூறும் தினமாகவே இந்த தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தின் சிறப்புகள்

தமிழர்களின் கடவுளாகிய முருகன் என்றால் அழகு என்று பொருள்படும். தைப்பூசத்தில் இந்த முருகன் வழிபாடானது மிகுதியான பலன்களை தரும் ஒரு நாளாகும். தைப்பூசம் அன்று தான் உலகம் தோன்றியது என்ற ஐதீகமும் இந்நாளுக்குரிய சிறப்பாகும்.

மேலும் சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடி தரிசனம் அளித்த நாளும் இந்த தைப்பூச நாளாகும். ராணியவர்மன் எனும் மன்னன் நடராஜரை நேருக்கு நேராக தரிசித்த நாளும் இன் நாளாகும்.

எனவே சிவன் கோயில்களில் தைப்பூசத்துக்கு என சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்படுவதனைக் காணலாம்.

தைப்பூசத்தின் விரத முறை

தைப்பூசம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபட்டு விரதத்தை ஆரம்பித்தல் வேண்டும்.

வீட்டில் விளக்குகள் ஏற்றிவிட்டு முருகப்பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்ற முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையில் இருந்து மாலை வரை படித்தல் மற்றும் காலை மற்றும் மதியம் ஆகிய வேலைகளில் மட்டும் பழங்களை உண்ணுதல் போன்றவாறு விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.

முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால்குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு கோயிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்நாளில் மக்கள் கோயில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கமாக காணப்படும்.

தைப்பூச விரதத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

தைப்பூச நாளன்று முருகனை வழிபட்டு அவருக்காக காவடி எடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் எந்த வித தீய சக்திகளும், மாந்தீரம், பில்லி சூனியம், ஏவல் என எதுவும் எம்மை நெருங்காது.

வாழ்க்கையில் பல்வேறு துன்பங்கள் காணப்படுகின்ற நிலையில் தைப்பூச விரதம் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை சிறப்புறுவதனை காண முடியும்.

ஆரோக்கியமான வாழ்க்கையினையும், பசிப்பிணி அற்ற நோயற்ற ஒரு வாழ்வினையும் பெற்றுக் கொள்வதற்கு தைப்பூச நாளில் விரதம் இருந்து வழிபடுவதனால் கிடைக்கின்றது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் தைப்பூசத்தின் மூலம் கிடைக்கின்றது.

முடிவுரை

இன்று நாம் வாழும் நவீன உலகில் நம் இளம் தலைமுறையினர் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களை மறந்து வாழ்கின்றனர்.

அந்த வகையில் இறைவழிபாடு, விரதம் என்பவை எம்மை ஒழுக்கமுடையவர்களாகவும், நற்பண்புமிக்க மனிதர்களாகவும் மாற்றுவதற்காகவே ஆகும். என்பதனை புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும்.

தைப்பூச நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி, வழிபட்டு அனைத்து வளங்களையும் பெற்று இன்புற்று வாழ்வோமாக.

You May Also Like:

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை