பொடுகு என்பது உச்சந்தலையில் உள்ள ஒரு வகையான இறந்த சருமமாகும். இது சருமத்தில் செதில்களாகத் தோன்றும். இன்று பலரும் எதிர்நோக்கும் மிகப் பெரிய தொல்லையாக இந்த பொடுகுத்தொல்லை உள்ளது.
இதற்கு சிகிச்சை அளிக்காதவர்கள் தோல் அழற்சி, அரிப்பு ஏற்படுவதுடன் காது, மூக்கு, மார்புப் பகுதிகளிலுள்ள சருமத்தையும் பாதிப்படையச் செய்யும். மற்றும் முடி உதிர்தல் ஏற்படுவதற்கும் பொடுகு காரணமாகின்றது.
பொதுவாக பொடுகுப் பிரச்சினை ஒரு வகைத் தூய்மைப் பிரச்சினையே என்றாலும் பொடுகு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொடுகு வர காரணம் என்ன
வறண்ட சருமத்தால் ஏற்படுகிறது
உடலின் வறட்சி காரணமாகத் தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும்.
நோய்கள்
“பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு ஏற்படலாம். மேலும் எக்ஸீமா (Eczema), சொரியாஸிஸ் (Psoriasis) போன்ற தோல் நோய்களும் பொடுகு வர காரணமாலாம்.
மன அழுத்தம்
இன்று பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை பொடுகை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாகும்.
ஹார்மோன் மாற்றங்கள்
பருவமடைதல் அதாவது பொதுவாகவே பூப்படைந்த வயதிற்கு பின் உள்ள வாழ்வுக் காலங்களில் ஆண், பெண் பாரபட்சமின்றி இந்த பொடுகு பாதிப்பு ஏற்படுகிறது.
மற்றம் மாதவிடாய், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் கோளாறுகள் மற்றும் ஹார்மோன் மருந்துகளை குறிப்பாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் காரணத்தினாலும் பொடுகு ஏற்படுகின்றது.
சுத்தமின்மை
எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பதும் பொடுகு ஏற்படுவதற்கு காரணமாகும். தலையில் உள்ள எண்ணெயுடன் வெளியில் செல்லும் போது சூழலில் உள்ள தூசுகள் படிந்து தலை அசுத்தமாகின்றது. இதுவும் பொடுகு ஏற்படுவதற்கு காரணமாகும்.
அவசரமாகத் தலைக்குக் குளிப்பதனாலும், முறையாகத் தலையை சுத்தம் செய்து தலைக்கு குளிக்காமையினாலும் பொடுகு தலையில் அதிகம் ஏற்படுகின்றது.
தினசரி கூந்தலை வாராமல் இருப்பதாலும் பொடுகு ஏற்படும். தினமும் தலை வாருவதன் மூலம் உச்சந்தலையில் உள்ள அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. ஆனால் தினமும் தலை வாராமல் இருந்தால் இவை தலையில் படிந்து பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தும்.
முடிக்குப் பயன்படுத்தும் பொருட்கள்
இன்று சந்தையில் பலவிதமான முடிக்குப் பயன்படுத்தும் ஷாம்பூக்கள் மற்றும் திரவங்கள் பொடுகுப் பிரச்சினையைப் போக்கும் என விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் இவை எல்லோருக்கும் உகந்ததாவதில்லை. சிலருக்கு இவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அதிகளவில் பயன்படுத்தும் போது அவற்றின் ஒவ்வாமை எதிர்வினைகள் கூட பொடுகு ஏற்படுவதற்கு காரணமாகும்.
உணவு முறை
மனித ஆரோக்கியத்திற்கு உணவு இன்றியமையாதது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல், சில உணவு வகைகள் கூட சருமப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ், விற்றமின்கள் குறைந்த உணவுகள், பொரித்த உணவுகள் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றாலும் பொடுகு ஏற்படலாம்.
காலநிலை
குளிர் மற்றும் உலர்ந்த குளிர்காலச் சூழ்நிலைகளும் கூட பொடுகு ஏற்படக் காரணமாகின்றன. குளிர்காலங்களில் வியர்வை இன்றி இருப்பதும், வெப்ப காலங்களில் அதிகமாக வியர்வை ஏற்படுவதும் பொடுகு ஏற்படக் காரணமாகும்.
You May Also Like: