மின்மாற்றி என்றால் என்ன

மின்னியல் துறையில் மிகவும் இன்றியமையாத சாதனமாக மின்மாற்றி திகழ்கின்றன. இதனுடைய வடிவமானது மிகவும் எளிமையானது என்பதால் இதனை வடிவமைப்பதும் மிகவும் இலகுவானதாகும். மின்மாற்றியானது Power System, power Transmission, Distribution ஆகிய இடங்களில் மிகவும் இன்றியமையாததாகவுள்ளது. மின்மாற்றி ஏற்று மின்மாற்றி (Step up Transformer), இறக்கு மின்மாற்றி (Step Down Transformer) என இரண்டு வகைப்படும்.

மின்சார உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக தொலைதூரங்களுக்கு கம்பிகளின் வழியாக அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மின்னழுத்தத்தின் அளவு 230 வோல்டேஜ் ஆக இருக்க வேண்டும்.

அதற்கான செலவுகள், அதே போல் மின் சக்தி விரையம் போன்றன அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட மின்சக்தி விரயத்தை தடுப்பதற்காகவும், பல்வேறு நடைமுறை சிக்கல்களை தடுப்பதற்காகவும் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மின்சாரமானது உயர் மின் அழுத்தம் அதாவது பல்லாயிரம் வோல்ட் மின்னழுத்தத்தில் மின் கம்பிகளின் வழியாக அனுப்பப்படுகின்றது.

இவ்வாறு உயர் மின்னழுத்தத்தில் அனுப்பப்படுகின்ற மின்சாரத்தை அப்படியே வீடுகளில் உள்ள மின் உபகரணங்களுக்கு கொடுத்து விட முடியாது. மீறி கொடுக்கும் பட்சத்தில் அந்த உபகரணங்கள் அனைத்தும் வெடித்து சிதறும்.

காரணம் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் 220 – 250 வோல்ட் அளவு வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதேயாகும். இங்குதான் இந்த மின்மாற்றிகள் அவசியமாகின்றன.

பல்லாயிரம் வோல்ட் மின்னழுத்தத்தில் உயர் மின் வழித்தடங்களில் கொண்டு செல்லப்படும் மின்சாரம் இந்த மின்மாற்றிகளின் மூலம் குறைந்த அதாவது வாடிக்கையாளர்களுக்கு தேவையான மின் அழுத்த அளவில் மாற்றிக் கொடுக்கின்றது.

மின்மாற்றி என்றால் என்ன

மின்மாற்றி ஆனது ஆங்கிலத்தில் Transformer என அழைக்கப்படுகின்றது. பெயருக்கு ஏற்றார் போல் மின்சாரத்தை மாற்றித் தருவதுதான் அதன் செயற்பாடாக உள்ளது.

அதாவது மின்சாரத்தை உயர்மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கும் அதேபோல் குறைந்த மின்னழுத்தத்தில் இருந்து உயர் மின் அழுத்தத்திற்கும் மாற்றித் தரும் சாதனம் மின்மாற்றி எனப்படுகின்றது.

மின்மாற்றி செயற்படும் விதம்

மின்மாற்றியின் உள்ளே இரும்பு பட்டை அல்லது கோர் (Core) என்ற ஒரு பகுதி அமைந்திருக்கும். அந்த இரும்பு பட்டையில் இரண்டு எதிர் எதிர் பக்கங்களில் காப்பிடப்பட்ட முறுக்கு கம்பிகள் அதாவது காயின்கள் கட்டப்பட்டிருக்கும். ஒன்று முதன்மை முறுக்கு கம்பி அல்லது பிரைமரிக்காயின் ஆகும். மற்றொன்று இரண்டாவது முறுக்கு கம்பி அல்லது செகண்ட் காயின் எனப்படும்.

மின்சாரத்தை உட்செலுத்தும் காயின் பிரைமரிக்காயின் என்றும் மின்சாரத்தை வெளியேற்றும் பகுதி செகண்டரி காயின் என்றும் அழைக்கப்படும். படிக்குறைப்பு மின்மாற்றிகளில் அல்லது மின்னழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும் மின்மாற்றிகளில் முதன்மை முறுக்கு செகண்டரி முறுக்கின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். படி உயர்த்தி மின் மாற்றிகளில் அது அப்படியே மாறுபடும்.

ஒரு மின் கம்பியின் வழியாக மாறுதிசை மின்னோட்டம் கொடுக்கப்படும் போது அந்த மின் கம்பியில் மாறுதிசை காந்தப்புலம் உண்டாகும். அவ்வாறு மாறுதிசை காந்தப்புலம் உண்டாகும் போது அதன் அருகே மின்கடத்தி இருந்தால் அதில் மின்சாரம் தூண்டப்படும். அது மின்காந்த தூண்டல் எனப்படும். அந்த அடிப்படையிலேயே மின்மாற்றியும் செயல்படுகின்றது.

You May Also Like:

இணையம் என்றால் என்ன