திருமணத்தை குறிக்கும் ஒரு சொல்லாக வரைவு காணப்படுகின்றது. இந்த வரைவு என்ற சொல்லானது திருமணம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளை குறித்து நிற்பதாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றது.
வரைவு என்றால் என்ன
வரைவு என்பது களவுப் புணர்ச்சி தொடர்ந்து நிகழும் போது பகற்குறியிலோ அல்லது இரவுக்குறியிலோ அதனை பிறர் அறியக் கூடிய சூழல்கள் ஏற்படும். அதன் பின்னரோ அல்லது களவானது வெளிப்படுவதற்கு முன்னரோ தலை மக்கள் மேற்கொள்ளும் திருமண நிகழ்ச்சியினை வரைவு என கூறலாம். வரைவு என்பதானது திருமணத்தினை சுட்டி நிற்கின்றது.
வரைவின் வகைகள்
வரைவானது இரு வகைகளாக காணப்படுகின்றது. அதாவது களவு வெளிப்படும் முன் வரைதல் மற்றும் களவு வெளிப்பட்ட பின் வரைதல் என்பனவாகும்.
களவு வெளிப்படும் முன் வரைதல்
களவு வெளிப்படும் முன் வரைதல் என்பது யாதெனில் இயற்கை புணர்ச்சி முதலான நான்கு வகை புணர்ச்சிகளிலும் தலைவன் தலைவியோடு மகிழ்வான். இவ்வாறு மகிழ்ந்த தலைவன் இதன் பின் களவை நீடிக்க விரும்பாமல் தலைவியை திருமணம் செய்து கொள்ள முற்படுவான் அல்லது பாங்கனாலோ பாங்கியாலோ அறிவுறுத்தப்பட்டு தெளிவு பெற்று வரைவு கொள்வான் இதுவே களவு வெளிப்படும் முன் வரைதல் ஆகும்.
களவு வெளிப்பட்ட பின் வரைதல்
களவு வெளிப்பட்ட பின் வரைவானது மூன்று நிலையில் நிகழக் கூடியதாக காணப்படும். அதாவது காதல் வாழ்க்கை பலருக்கு தெரிய வரும் போது இவ் வரைவானது நிகழும்.
அந்த வகையில் தலைவனும் தலைவியும் சேர்ந்து ஊரை விட்டு புறப்பட்டு சென்று வேறு ஊரில் திருமணம் செய்து கொள்ளல்.
ஊரை விட்டு உடன் போக்காக சென்றவர்கள் மீண்டும் வந்து தலைவன் ஊரிலோ தலைவி ஊரிலோ வரைவு மேற்கொள்ளல்.
உடன் போக்கின் இடையே தலைவியை அவளது தமர் (உறவினர்) அழைத்து செல்ல தலைவன் அவர்களை வழிபட்டு உடன்பட செய்து வரைவினை மேற்கொள்ளல் என 03 நிலைகளில் களவு வெளிப்பட்ட பின் வரைதலானது இடம் பெறும்.
வரைவு கடாதல்
களவு வாழ்க்கையை தொடர வழியில்லாமல் காதல் உறவு நிலைக்க வழிதேடும் தலைவியும் தோழியும் வரைவு மீது விருப்பம் கொண்டு அதனை தலைவனிடம் புலப்படுத்தி வலியுறுத்துவர். அவளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மணம் செய்து கொள்ள கேட்பார் இதுவே வரைவு கடாவுதலாகும்.
வரைவு கடாதலின் வகைகள்
வரைவு கடாதல் ஆனது நான்கு வகைகளாக காணப்படுகின்றது. அவற்றை பின்வருமாறு காணலாம்.
பொய்த்தல்: தலைவன் தலைவியை மணந்து கொள்ளும் படி செய்ய நினைத்த தோழி தலைவனிடம் பொய்யான சில செய்திகளை தானே புனைத்து கூறுவது பொய்த்தல் எனப்படும். இவ்வாறே வரைவு நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும். அதாவது அயலார் தலைவியை பெண் கேட்டு வந்தனர் என கூறுவதினூடாக இவ் பொய்த்தலானது நிகழும்.
மறுத்தல்: தலைவன் பகற்குறி அல்லது இரவுக்குறியில் தலைவியை சந்திக்க வருவதனை தோழி வெளிப்படையாகவோ குறிப்பாகவோ மறுத்து பேசுதல் மறுத்தலாகும். அதாவது இரவில் வரும் தலைவனை பகலில் அழைத்தல், பகலில் வரும் தலைவனை இரவில் வரவைத்தல் போன்றனவாகும்.
கழறல்: கழறல் என்பது நேரடியாக குறிப்பிடல் ஆகும். அதாவது நீ தலைவியை மணந்து கொள்ளாமல் தொடர்ந்து களவு முறையிலேயே இருத்தல் உன் நாட்டுக்கு ஏற்றதன்று என்று தோழி நேரடியாக தலைவனிடம் கூறுதலாகும். அதாவது தலைவனின் நாடு, மரபு, குலம் போன்றவற்றின் பெருமைகளை எடுத்து கூறி தலைவியை மணந்து கொள்ள கோரலாகும்.
மெய்த்தல்: தோழியானவள் தலைவனுக்கு உண்மைத் தன்மையை எடுத்துக் கூறுதலே மெய்த்தல் ஆகும். அதாவது தலைவியை மணந்து கொள்வதற்கான காலம் வந்து விட்டது எனக் கூறல், பிரிவை பொறுத்து கொள்ள முடியாத தலைவியின் துன்பத்தை போக்கும் விதத்தில் திருமணம் செய்துகொள் என கூறுவதினூடாக காணப்படுகின்றது.
இவ்வாறாக வரைவானது இலக்கியங்களில் இடம் பெற்று காணப்படுகின்றது.
You May Also Like: