இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்றடிப்படையில் ஒவ்வொரு சிறுவர்களினதும் பாதுகாப்பானது எமக்கு அவசியமானதாகும்.
ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பல துஷ்பிரயோகங்களுக்குட்பட்டே வருகின்றனர். இத்தகைய நிலையை மாற்றி சிறுவவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சிறுவர் துஷ்பிரயோகம் என்பது
- சிறுவர்களது பாதுகாப்பு
- எதிர்கால தேசத்திற்கான அடித்தளம் சிறுவர்களே
- சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வு
- முடிவுரை
முன்னுரை
இன்று உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றே சிறுவர் துஷ்பிரயோகமாகும். அந்த வகையில் சிறுவர்களை துன்புறுத்தல், அடித்தல் என பல்வேறு கொடுமைகள் இன்று வரை இடம் பெற்றுக் கொண்டே வருகின்றது.
சிறுவர்களானவர்கள் அதிகமாக இன்று பாதிப்படைந்தே வருகின்றனர். இதன் காரணமாக சிறுவர்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் நிலையே உருவாகியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது யாதெனில் சிறுவர்களை தவறான பாதையில் வழி நடாத்தும் அனைத்து செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. மேலும் எதுவுமறியாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தனது பாலியல் செயற்பாடுகளுக்கு இரையாக்கும் செயற்பாட்டினையும் சிறுவர் துஷ்பிரயோகம் என்றே கூற முடியும்.
இன்று சிறுவர் துஷ்பிரயோகமானது பாரிய குற்றமாக காணப்பட்டாலும் துஷ்பிரயோகமானது இடம் பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் காரணமாக ஆபாச சினிமாக்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் போன்றனவாகும்.
சிறுவர்களானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதன் மூலமாக பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களால் சிறந்த முறையில் செயற்பட முடியாத ஒரு நிலையே உருவாகின்றது.
சிறுவர்களும் அவர்களது பாதுகாப்பும்
நவீனமயப்படுத்தப்பட்ட உலகில் சிறுவர் பாதுகாப்பானது மிகவும் முக்கியமானதொன்றாகும். அதாவது சிறுவர்களின் பாதுகாப்பு என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு சிறுவர்களின் உரிமையாகும். நாட்டின் எதிர்காலத்தை மாற்றக் கூடிய சக்தி சிறுவர்களிடமே உள்ளது.
அந்த வகையில் சிறுவர்களை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறையோடு செயற்படுதல் வேண்டும். இன்று சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம், போதை பாவனை என தவறான பாதைக்கு சிலர் இட்டுச் செல்லுகின்றனர்.
இதன் காரணமாக இன்றைய சிறுவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் கல்வியை இடை நிறுத்துகின்றனர். இவ்வாறாகவே சென்று கொண்டிருந்தால் எதிர்காலத்தில் நாடானது அபிவிருத்தியில் பின் தங்கியே செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சிறுவர்களின் பாதுகாப்பானது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் என அனைவரினாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு சிறுவரை தன் குழந்தையாக எண்ணி அவர்களை பாதுகாருங்கள் நாளை அவர்கள் நம்மை காக்கும் தலைவர்களாக உருவாகுவார்கள்.
எதிர்கால தேசத்திற்கான அடித்தளம் சிறுவர்களே
சிறுவர்களின் பெருமைகளை அனைவரும் உணர்ந்து செயற்படுதல் கட்டாயமானதாகும். அதாவது நாளைய தேசத்தின் எதிர்காலமே எம் சிறுவர்களே என்றடிப்படையில் சிறுவர்களை நாம் பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நல்ல விடயங்களை கற்றுக் கொடுத்து வழி நடாத்துவது அவசியமானதாகும்.
சிறுவர்களை நல்வழிப்படுத்துவதனூடாகவே எமது எமது எதிர்கால தேசத்தை சிறப்பாக மாற்ற முடியும். அந்த வகையில் ஓர் நாடானது சிறுவர்களை பாதுகாப்பதிலும், சிறந்த கல்வியை வழங்குவதிலும் கவனம் செலுத்துதல் கட்டாயமானதாகும். சிறுவர்கள் சிறப்பாக வழிநடாத்தப்படுவதன் மூலமே நாம் சிறப்பாக வாழ முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வானது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாகும். அந்த வகையில் சிறுவர்கள் பற்றியும் அவர்களது உரிமைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் காரணங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும் சிறுவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தன்னை தற்காத்து கொள்வதற்கான திறனையும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்லி வளர்த்தல் வேண்டும்.
முடிவுரை
இந்த உலகில் பிறந்த அனைவரதும் பிரதான கடமை சிறுவர்களை பாதுகாப்பதாகும். அந்த வகையில் சிறுவர்களை உடல், உள ரீதியில் பாதிப்பிற்குற்படுத்தி அவர்களது வாழ்வை சீரழிக்காது அவர்களது எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்தல் வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக குரல் கொடுப்போம் அனைத்து சிறார்களையும் காப்போம்.
You May Also Like: