நாட்டின் எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பினை செய்பவர்களாக இளைஞர்களே திகழ்கின்றனர். அதாவது இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்ற கூற்றானது இளைஞர்களின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுவதாகவே காணப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் பிரதான பங்குதாரர்களாக இளைஞர்களே திகழ்கின்றனர். பல்வேறுபட்ட சமூக சேவைகள் கண்டுபிடிப்புக்கள் என பல சாதனைகளை படைத்த இளைஞர்களானவர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதனை காணலாம்.
இன்று இளைஞர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதானமான காரணமாக சமூக வலைத்தளங்களை குறிப்பிட முடியும். அந்த வகையில் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பின்வருமாறு நோக்கலாம்.
மன அழுத்தம்
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரதானமானதொரு பிரச்சினையாக மன அழுத்தம் காணப்படுகின்றது.
அதாவது இளைஞர்களானவர்கள் தமது நேரத்தை அதிகளவில் சமூக வலைத்தளங்களிலே செலவழிப்பதோடு அதனிலே தனது முழு நேரத்தையும் செலவிடக் கூடியவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் நவீன தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல், சிறந்த தூக்கமின்மை, சமூக வலைத்தளத்தில் பிறருக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றி கொள்ள முயற்சி செய்து முடியாவிட்டால் துன்பத்திற்கு உள்ளாதல் போன்றவற்றின் காரணமாக மன அழுத்தத்திற்கு உட்பட்டு வருகின்றனர்.
போதைப் பாவனை
போதைப் பாவனையானது இன்றைய இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் ஓர் உயிர் கொல்லியாகவே காணப்படுகிறது. அதாவது திரைப்படங்கள் மற்றும் தவறான நண்பர்களின் பொய்யான பேச்சிற்கு மயங்கி போதைப் பாவனையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு போதைக்கு அடிமையான பின்னர் பல்வேறு உளப் பாதிப்பிற்கும் உடல் நோய்களுக்கும் ஆளாகின்றனர். மேலும் பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இதற்காக பணத்தினை சம்பாதித்து போதைப் பொருளை வாங்குகின்றனர்.
இதனால் சமூகத்திற்கு மத்தியில் ஓர் மதிப்பற்றவராக திகழ்வதோடு மாத்திரமல்லாது தனது வாழ்வையும் தொலைக்கின்றனர்.
வேலையில்லா பிரச்சினை
இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரிதொரு பிரச்சினையாக வேலையில்லா பிரச்சினையை கருத முடியும். அதாவது இன்று கல்வி கற்றும் அதற்குரிய சரியான வேலை கிடைக்கப் பெறாமை என்பது அதிகரித்து கொண்டே காணப்படுகின்றது. இதன் காரணமாக பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
மேலும் கல்வி கற்று வேலையா கிடைக்கப் போகின்றது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் கல்வியை விட எதிர்கால வேலை பற்றியே சிந்தித்து கல்வியை தொடராது வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக செல்கின்றனர்.
சமூக ஊடகங்களின் தாக்கம்
இன்றைய இளைஞர்கள் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வட்சப் என பல சமூக ஊடகங்களின் ஆதிக்கத்திற்கே உட்பட்டு காணப்படுகின்றனர்.
சமூக ஊடகங்கள் ஒருவரையொருவர் இணைத்துக் கொள்ள சிறந்த வழியாக இருந்தாலும் பல்வேறு வகையில் பிரச்சினைகளையே ஏற்படுத்துகின்றன.
அதாவது சமூக ஊடகங்களினூடாக இன்றைய இளைஞர்கள் சைபர் புல்லிங், சைபர் கிரைம் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக பாதிப்படைந்து வருகின்றனர்.
உடலியல் பிரச்சினைகள்
இன்றைய சமுதாயத்தில் உடலியல் பிரச்சினைகள் மிக விரைவாக இளைஞர்களை ஆட்கொள்ள கூடியதாக காணப்படுகின்றன.
ஏனெனின் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாது துரித உணவுகளை உண்ணுதல், சிறந்த உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களினால் இலகுவாக நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் இன்று பல தொழில்நுட்ப ரீதியான ஒன்லைன் வேலை வாய்ப்புக்கள் இடம் பெறுவதனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டே வேலையினை செய்கின்றனர். இதனால் உடலுக்கு தேவையான சிறந்த உடற்பயிற்சி கிடைக்காது உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே பல உடலியல் பிரச்சினைகளை இளைஞர்களானவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.
எனவேதான் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதோடு மாத்திரமல்லாமல் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் துணைபுரிய வேண்டும். இதனூடாகவே எமது நாடானது சிறந்த பாதையை நோக்கி செல்லும்.
You May Also Like: