இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்

iyarkai thavam ena potrapadum nool

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் சீவக சிந்தாமணியாகும்.

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி நூலானது சங்ககாலத்திற்கு பின்னர் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இது சோழர் காலத்தில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ் காப்பிய நூலாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர் சமண முனிவராவார்.

இந்த சீவகசிந்தாமணி நூலானது மண நூல், முக்தி நூல், காம நூல், இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், தமிழ் இலக்கிய நந்தாமணி, முடி பொருள் தொடர்நிலை செய்யுள் என பல்வேறு பெயர்களை கொண்டமைந்ததாக காணப்படுகிறது.

சீவக சிந்தாமணியின் கதைச்சுருக்கம்

இந்த நூலானது சீவகன் என்பவனின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. சீவகனின் பெற்றோர் கச்சந்தன் மற்றும் விசையை என்பவர்கள் ஆவர்.

கட்டியங்காரன் எனும் அமைச்சர் ஏமாங்கத நாட்டை கைப்பற்றுவதற்காக சீவகனின் தந்தையான கச்சந்தனை கொன்று விடுகிறான். இதன்பின் சீவகன் கத்துக்கடன் எனும் வணிகனிடம் வளர்கிறார். மேலும் அச்சணத்தி எனும் ஆசிரியரிடம் கல்வி பயில்கிறார். சீவகனானவன் பல கலைகளை கற்று சிறந்த வீரனாக திகழ்கின்றான்.

பல கலைகளில் சிறந்து விளங்கிய சீவகன் பருவம் அடைந்த பிறகு ஏமாங்கத நாட்டை கைப்பற்றுவதற்காக தாயின் அறிவுறை மற்றும் கோவிந்தன் எனும் தாய் மாமனின் உதவியுடன் போர் செய்து ஏமங்கத நாட்டை கட்டியாங்காரனிடம் இருந்து கைப்பற்றுகிறான் என்பதனையும் சீவகனின் வாழ்க்கை பற்றியும் விரிவாக கூறும் நூலாக சீவக சிந்தாமணி காணப்படுகிறது.

சீவக சிந்தாமணி நூலின் சிறப்புக்கள்

விருத்தப்பாக்களால் எழுதப்பட்ட முதல் காப்பியமே சீவக சிந்தாமணியாகும்.

இந்நூலில் சீவகன் எட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கின்றான். அதனால் இந்நூலிற்கு மணநூல் என்ற சிறப்பு பெயர் உண்டு.

இந்நூலில் காப்பிய தலைவனின் வீரம், அழகு, அறம் போன்ற அனைத்து கருத்துக்களும் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளன.

சத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி ஸ்ரீபுராணம் போன்ற வடமொழியில் எழுதப்பட்ட நூல்களில் சீவகன் கதையை திருத்தக்க தேவர் தமிழில் தழுவி சீவகசிந்தாமணி எனும் பெரும் காப்பியத்தை தமிழுக்கு தந்துள்ளமை போன்ற விடயங்கள் அந்நூலின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

சீவக சிந்தாமணி கூறும் அரசியல் கருத்துக்கள்

சீவக சிந்தாமணியின் கதை பின்னணி அரசியல் சார்ந்ததாக காணப்படுகிறது. அதன் காரணமாகவே அரசு சார்ந்த கருத்துக்கள் இந்த காப்பியத்தில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன.

அதாவது தன்னை ஆக்கிய அரசனை கொல்வான் குலமும் திருவும் கெடும் மன்னன் உறங்கினாலும் அவன் ஒளி உலகை காக்கும், தேவர்கள் விழித்திருந்தாலும் அவர்களை போற்றும் உலகத்தாரை காக்க இயலார்.

எனவே தேவரின் உயர்ந்தவர் மன்னர் போன்றவற்றின் ஊடாக அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவதனை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் சீவகனுக்கு அவன் தாய் கூறும் அரச நீதியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதாவது நீதியால் மக்களிடம் வரி பெறல் வேண்டும்.

பழம்பகையை நெஞ்சில் நிறுத்த வேண்டும், கற்ற அமைச்சரை கண் என போற்ற வேண்டும், சுற்றத்தினரை திறன் ஆய்ந்து போற்றுதல் வேண்டும் என சீவக சிந்தாமணியில் பல்வேறு அரசியல் ரீதியான விடயங்கள் கூறப்படுகின்றது.

மேலும் சீவக சிந்தாமணியின் சமயம் சார்ந்த சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பிற்குரியதாகும். அதாவது சமணசமயத்தின் தத்துவங்களையும், வழிபாட்டினையும் எடுத்துரைப்பதாக இக்காப்பியமானது அமைந்துள்ளது.

சீவக சிந்தாமணி காப்பியமானது தன்னகத்தே பல்வேறு அறக் கருத்துக்களை கொண்டமைந்ததாக காணப்படுவதோடு மாத்திரமல்லாமல் ஒரு சிறந்த காப்பியமாகவும் திகழ்கின்றது.

You May Also Like:

சோழர்களின் தலைநகரம் எது

செப்பேடுகள் என்றால் என்ன