காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்

kaatru masupadu thadukkum muraigal

மனிதன் உயிர்வாழ அடிப்படையானது காற்றாகும். இத்தகைய நாம் சுவாசிக்கும் காற்று இன்று அதிகம் மாசடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த நூற்றாண்டில் பெருகிவரும், சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தித் திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனிதச் செயற்பாடுகளாலும், எரிமலை வெடிப்பு, புயல், காட்டுத் தீ போன்ற இயற்கைக் காரணங்களாலும் காற்று மாசுபாடு ஏற்படுகின்றது.

இதனால் ஏற்படும் பின் வளைவுகளானது நோய் நொடிகளைத் தாண்டி மரணம் வரை கொண்டு செல்கின்றது.

எனவே காற்று மாசுபாட்டினைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமையில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதனை மனித குலம் கருத்திற் கொள்ள வேண்டும்.

காற்று மாசுபாடுஎன்றால் என்ன

இரசானயப் பொருட் கலவைகள், தூசுப் பொருட்கள் மற்றும் உயிரியற் பொருட்கள் வளிமண்டலத்தில் கலந்து காற்றை அசுத்தப்படுத்துவது காற்று மாசுபாடு எனப்படுகின்றது.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்

காற்று மாசடைவானது மனிதனை நேரடியாகப் பாதிக்கும் ஓர் காரணியாக உள்ளது. அதிலும் குறிப்பாக நகர்ப்புற மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

காற்று மாசுபாடு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் ஆபத்து அதிகமாகி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

காற்று மாசுபாடானது தாவரங்களையும், விலங்குகளையும் கூட அதிகம் பாதிப்படையச் செய்கின்றன.

சுவாச மாசுக்களால் சுவாச நோய்களான, ஆஸ்துமா, சுவாசப்புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் பாரிசவாதம் என்பன ஏற்படுகின்றன.

அமில மழை, ஓசோன் படலம் ஓட்டை போன்ற இயற்கைப் பாதிப்புக்கும் வளி மாசடைவு காரணமாகின்றது.

ஏரிகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றன.

ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிப்புக்குள்ளாகின்றது.

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்

எமது சூழலின் வளியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது கூட்டு முயற்சியாக அமைய வேண்டும்.

வாகன நெரிசல்கள் இல்லாத பாதைகளைப் பயன்படுத்த வேண்டும். குறைவான தூரங்களிற்குச் செல்லும் போது நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ செல்லலாம்.

அதிக புகை வரும் வாகனங்களை கட்டுப்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் சூழலில் வளி மாசடையும் அளவினைக் கண்காணித்தல் வேண்டும்.

மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தலாம். தேவையற்ற வாகனப் புகையினைக் குறைத்தல் சிறந்தது.

வளி மாசடைதலானது பாரியதொரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு அவசியமானதாகும். எனவே இதனை தனிப்பட்ட ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் வாகனங்களைத் தடை செய்ய வேண்டும். சிறந்த எரிபொருட்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுபாட்டை ஓரளவு தடுக்கலாம்.

காற்றினைத் தூய்மைப்படுத்துவதில் தாவரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தாவரங்களானவை காபனீரொட்சைட் போன்ற கெடுதியான வாயுவை உறிஞ்சக் கூடியனவாகும். எனவே காடழிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேவேளை அதிகளவான மரங்களை நட வேண்டும்.

You May Also Like:

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன