சமய நல்லிணக்கம் கட்டுரை

samaya nallinakkam katturai in tamil

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் சமய நல்லிணக்கம் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றது. அதாவது ஒவ்வொரு சமயமும் அன்பையும், சமாதானத்தையும், ஒற்றுமையையுமே போதிக்கின்றன.

ஆனால் சில சுயநலவாதிகள் மத அடிப்படையில் மக்களுக்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். எனவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சமய நல்லிணக்கம் அவசியமான ஒன்றாகும்.

சமய நல்லிணக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சமயங்கள் உருவாக் காரணம்
  • சமயங்கள் கூறும் போதனைகள்
  • சமய நல்லிணக்கத்தின் அவசியம்
  • சமய நல்லிணக்கத்தினைப் பாதிக்கும் காரணிகள்
  • முடிவுரை

முன்னுரை

எனது இந்திய நாட்டில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய, பல்வேறு இன, மத பிரிவுகளை கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.

தற்காலங்களில் அதீத இன மற்றும் மதப் பற்றின் காரணமாக மக்களுக்கிடையே முரண்பாடுகளும், போராட்டங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. எனவே சமய ரீதியான நல்லிணக்கம் நாட்டில் நிலவினாலே நாடு சுமூகமாக இயங்கும் என்பதை நாம் அறிய முடிகின்றது.

சமயங்கள் உருவாக் காரணம்

மனிதப் பண்புகள் அற்றிருந்த மனிதனை நற்பண்புகள் உள்ளவனாகவும், நல்லொழுக்கம் கொண்டவனாகவும் மாற்றி அமைக்கவே உலகில் சமயங்கள் தோற்றம் கண்டன.

அதாவது மக்களுக்கு அறத்தைக் கற்றுக் கொடுப்பவையாகவே சமயங்கள் திகழ்கின்றன. இந்த வகையில் நாம் வாழும் சூழலில் இந்து சமயம், இஸ்லாம் சமயம், கிறித்தவ சமயம், பௌத்த சமயம் போன்றவற்றினைக் காணலாம்.

சமயங்கள் கூறும் போதனைகள்

ஒவ்வொரு மதமும் அன்பு, கருணை, ஒற்றுமை போன்ற நற்பண்புகளை போதிப்பவையாகவே காணப்படுகின்றன.

அந்த வகையில் ஏழைகளுக்கும், இல்லாதவருக்கும் உணவளித்தல் இறைவனுக்குச் செய்யும் தொண்டு என இந்து மதம் குறிப்பிடுகின்றது.

உன்னை போல் பிறரையும் நேசிக்க வேண்டும் என கிறிஸ்தவ மதம் குறிப்பிடுகின்றது. அன்பையும் அமைதியும் கொண்டு வாழ்பவனே சிறந்த பௌத்தனாவான் என பௌத்த மதம் குறிப்பிடுகின்றது.

மனிதன் காத்து வாழ்வதுவே இஸ்லாமியர்களது புனிதமான அறம் என இஸ்லாம் மதம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறாக எல்லா மதங்களும் அன்பு, அரவணைப்பு, சமாதானம், ஒற்றுமை என்பவற்றையே போதிக்கின்றன.

சமய நல்லிணக்கத்தின் அவசியம்

உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அறத்தையும், அன்பையும் போதித்த போதிலும், சில சுயநலவாதிகளினாலும், தீவிர இன, மத பிரியர்களாலும் தங்களுடைய மதம் மாத்திரமே சிறந்தது.

ஏனைய மதங்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணங்களை தோற்றுவிப்பதனால், இன்று மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.

எனவே தான் சமய நல்லிணக்கம் அவசியமாகின்றது. ஆகவே எமது சமயத்தைப் போலவே ஏனைய சமயத்தைப் பின்பற்றுபவர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும்

சமய நல்லிணக்கத்தினைப் பாதிக்கும் காரணிகள்

மக்களிடையே சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் காரணிகளாக பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.

தீவிர மதப்பற்று அதாவது தங்களுடைய மதங்களில் அதீத பற்றும் இனிய மதங்களில் ஏற்படும் கசப்புணர்வும், மேலும் மூடநம்பிக்கைகள், தீவிர மதவாத போக்குடைய தலைவர்களது போதனைகள், ஏனைய மதத்தவர்களை தீவிரவாதிகளாக கருதும் எண்ணம், தங்களது மதங்களை மாத்திரம் சிறப்புடையதாக கருதுதல் போன்ற அம்சங்களின் காரணமாக சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றன.

முடிவுரை

இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களும் மனிதத்தையே போதிப்பதாக காணப்படுகின்றன. எனவே அவை கூறும் நற்பண்புகளை நாம் எடுத்து நடக்க வேண்டும்.

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்று பழமொழிக்கு அமைய பல்லின சமயத்தைக் கொண்ட எமது நாட்டில், வெவ்வேறுபட்ட சமயத்து மக்கள் வாழ்ந்தாலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக கரம் கோர்த்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் எமது நாடும் வளர்ச்சி அடையும்.

You May Also Like:

ஒன்றே குலம் ஒருவனே தேவன் கட்டுரை