சிகரம் தொடு கட்டுரை

sigaram thodu katturai in tamil

சிகரம் தொடு கட்டுரை

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அவ்வாறான அவனுடைய முயற்சி தோல்வியில் கூட முடியலாம். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், எல்லா சூழ்நிலைகளிலும் “என்னால் முடியும்” என நம்பிக்கையோடு முயற்சித்தால் மட்டுமே சிகரத்தினை எட்ட முடியும்.

சிகரம் தொடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்
  • இலக்கில் உறுதியும், நேரான எண்ணமும்
  • தடைகளை தகர்த்தல்
  • சிகரம் தொட்டவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென ஒவ்வொரு இலக்கு காணப்படும். அந்த இலக்கின் மூலம் சிகரத்தை அடைந்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.

அதன் அடிப்படையில் ஒருவர் சிகரத்தை தொட வேண்டுமாயின் தன்னுடைய இலக்கில் உறுதியும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தடைகளை தகர்த்தல், நேரான எண்ணம், மன தைரியம் என்பன காணப்பட வேண்டும் அவற்றினை பின்வருமாறு தெளிவாக நோக்கலாம்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்

நாம் சிகரத்தை தொட பயணிக்கும் போது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் உன்னால் இதனை சாதிக்க முடியாது என்று கூறினாலும் நமது தன்னம்பிக்கையில் உறுதியோடு செயல்படுவதோடு, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

புரட்சியாளரான சேகுவாரா வின் கருத்துப்படி “விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்” என்பதற்கு இணங்க, நாம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

எமது முயற்சிகள் எம்மைக் கைவிட்டாலும், நாம் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதை கைவிடக்கூடாது. எனவே சிகரத்தை தொட வேண்டுமானால் விடாமுயற்சியே வெற்றி அளிக்கும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இலக்கில் உறுதியும், நேரான எண்ணமும்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென தனித்தனியான இலக்குகள் காணப்படும். அந்த இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது தோல்விகள் பல ஏற்பட்டாலும், அத்தோல்விகளினால் விரக்தி அடையாது, எம்முடைய இலக்குகளில் உறுதியாக இருந்தால் மாத்திரமே சிகரத்தினை அடைந்து கொள்ள முடியும்.

மேலும் எமது இலக்கினை நாம் எப்போதேனும் அடைந்து கொண்டே தீருவோம் என நேரான எண்ணம் கொண்டவர்களால் எம்முடைய இலக்குகளை அடைய முடியும்.

ஏனெனில் அவர்களுக்கு, அவர்களுடைய நேரான எண்ணம் உத்வேகமும், ஆற்றலும் அளித்து அவர்களுடைய இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். எம்மால் முடியுமா? முடியாதா? என்ற எதிர்மறையான சந்தேக எண்ணமானது எம்மை வீழ்த்தி விடும்.

எனவே எங்களுடைய இலக்குகளில் உறுதியும், எண்ணங்கள் நேரானதாகவும் காணப்பட வேண்டும்.

தடைகளை தகர்த்தல்

நாம் சிகரத்தை தொடுவதற்கு பயணிக்கும் போது எமது வாழ்வில் பல்வேறு ஏமாற்றங்களும், தோல்விகளும், தடைகளும் வந்தே தீரும். ஆனால் அவற்றினை கண்டு துவண்டு போகாமல் எம்முடைய பயணத்தினை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

அதாவது எம்முடைய இலக்கினை அடிப்படையாகக் கொண்டு நாம் பயணிக்கும் போது எமக்கான சவால்கள், தடைகள் வரும். அத்தடைகளை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை நாம் காண வேண்டும்.

எமது இலக்குகளுக்கு எதிராக வரும் தடைகளை தகர்த்தெறிந்து தடம் பதிக்க வேண்டும். அப்போதுதான் எமது சிகரம் தொடுதல் எனும் பயணம் வெற்றி அளிக்கும்.

சிகரம் தொட்டவர்கள்

தங்களுடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றின் ஊடாக சிகரத்தினை தொட்டவர்களை உதாரணமாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

அந்த வகையில் உலகுக்கு வெளிச்சத்தை தந்த ”தோமஸ் அல்வா எடிசன்” 999 தடவைகள் தோல்விகளை சந்தித்த, ஆயிரமாவது தடவை தான் மின்குமிழை கண்டுபிடித்துள்ளார்,

வீடுகளுக்கு பத்திரிகை போட்டவர் பிற்காலத்தில் இந்தியாவை விண்வெளியில் தலை நிமிரச் செய்த ”டாக்டர் அப்துல் கலாம்”,

வறிய குடும்பத்தில் பிறந்து மூன்று தடவைகள் தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வென்ற ”உசைன் போல்ட்”

மற்றும் ஒரு வேலை உணவுக்கே போராடும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று கால்பந்து உலகின் சிறந்த வீரராக திகழும் “கிறிஸ்டியானோ ரொனால்டோ” போன்றவர்கள் தங்களுக்கான இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் பயணித்ததன் விளைவாகவே இன்று சிகரத்தை எட்டி உள்ளனர்.

முடிவுரை

தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதற்கு இணங்க எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், எமது இலக்குகளில் உறுதி தன்மையோடு விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

அதாவது “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என்பதற்கு இணங்க தங்களுடைய மனதை கட்டுப்படுத்தி, தியாக உணர்வோடு இலக்கை நோக்கி நேரான திசையில் ஓடினால் மாத்திரமே சிகரத்தை தொட முடியும். என்பதனை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி