இந்த உலகின் மிக உன்னதமான உறவாக காணப்படுபவர் தாய் என்பவளே ஆவாள். காலங்கள் பல மாறினாலும் என்றும் மாற்றம் அடையாததும், அளவில் குறையாததுமான வேஷமற்ற அன்பை வாரி வழங்குவதாக தாய் என்பவளே காணப்படுகிறார்.
தாய்மையின் சிறப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தாய்மையின் விளக்கம்
- சேயின் வளர்ச்சியில் தாயின் பங்கு
- தாயின் பெருமைகள்
- தாய்மையின் உணர்வுகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் காணப்படும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வை பூர்த்தி அடைய செய்வது தாய்மை என்னும் ஒன்றாகும்.
தாய் என்பவள் இந்த உலகில் இல்லை என்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்க இயலாது என்பதனை, “தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்ற தொடரில் ஔவையார் சிறப்புற விபரித்துள்ளார்.
தாய்மையின் விளக்கம்
தாய்மை என்பதற்கு செந்தமிழின் சொற்பிறப்பியலில் பேரகரமுதலியானது, “அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாய் உள்ள முதல்நிதி” என்று பொருள் தருகிறது.
தமிழ் இலக்கியத்தின் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியத்தில் ஆம், ஞாய், அன்னை, ஈன்றாள் மற்றும் நற்றாய் என்ற பெயரில் தாய் அழைக்கப்படுகின்றாள். அதே போன்று அற இலக்கியங்களும் தாயார், ஈன்றாள் , அன்னை என்ற பெயர்களை குறிப்பிடுகிறது.
சேயின் வளர்ச்சியில் தாயின் பங்கு
தாயின்றி ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்ப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தையை பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து, பல வலிகளோடு குழந்தையை பிரசவிக்கின்றாள்.
அதன் பின்னர் தன் குழந்தையை அன்போடு அரவணைப்போடும் அவர்களுக்கு தேவையானவற்றையும் அறிந்து உரிய நேரத்தில் அவற்றை செய்து பாதுகாப்பான முறையில் அறிவுரைகளை வழங்கி சமூகத்தில் ஒரு நற்பிரஜையாக திகழப் பாடுபடுகிறார்.
தாயின் பெருமைகள்
தாய் என்பவள் தன்னுடைய வாழ்வு எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், பல கோபங்கள் இருந்தாலும் அதனை தன் குழந்தைகளிடம் வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சி படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் உடையவராக காணப்படுகிறார்.
பிரசவித்த தன் குழந்தைக்கு தன்னுடைய இரத்தத்தை பாலாக தந்த குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறார். எதிர்பார்ப்பற்ற தூய அன்பினை தன் குழந்தையின் மேல் காட்டி அரவணைப்போடு வளர்க்கும் மனித உலகில் வாழும் தெய்வங்களாக காணப்படுகின்றார்கள்.
தாய்மையின் உணர்வுகள்
இயற்கையானது பெண் குலத்திற்கு அளித்த வரமாக காணப்படும் தாய்மைக்கு மாத்திரமே உரிய உணர்வுகளாக அன்பு, அரவணைப்பு, ஆனந்தம், சுகமான சுமை தாங்கும் மனநிலை, மன தைரியம், கனிவு, விழிப்புணர்வு, தன் பிள்ளையை எண்ணி பெருமை, பொறுமை, மற்றும் நம்பிக்கை என்பன காணப்படுகின்றன. இந்த உணர்வுகள் தாய்மைக்கு அதிகமாகவே காணப்படுகிறது.
முடிவுரை
கலப்படம் இல்லாத தூய காதலை பாகுபாடின்றி வழங்கும் தாய்மை நிறைந்த நாள் முழுவதும் ஓய்வில்லாமல் தன்னுடைய குடும்பத்திற்காக உழைக்கின்றாள்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடைய சேவையை சிறப்புற செய்யும் ஒரே ஒருவர் தாய் மாத்திரமே. இந்த தாய்மையை போற்றி வணங்குதல் ஒவ்வொருவரின் கடமையாகும்.
You May Also Like: