மீனவர்கள் வாழ்க்கை கட்டுரை

meenavargal katturai in tamil

ஐந்நிலங்களில் ஒன்றான நெய்தல் பிரதேசத்தில் வாழக்கூடியவர்களே மீனவர்கள் என அடையாளம் காணப்படுகின்றனர். அதாவது கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

இந்த பிரதேசங்களில் வாழக்கூடிய மக்கள் கடலினை நம்பி தங்களுடைய ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

மீனவர்கள் வாழ்க்கை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மீனவர்கள் வாழ்க்கை முறை
  • மீனவர்கள் வாழ்க்கைச் சூழல்
  • மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
  • மீனவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
  • முடிவுரை

முன்னுரை

பொதுவாக கடற்கரை பிரதேசங்களை அண்டி வாழக்கூடிய மக்கள் கூட்டமானது மீனவச் சமூகமாக நாம் வாழும் சூழலில் அடையாளம் காணப்படுகின்றது.

இந்த மீனவச் சமூகத்தினுள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள், தெருக்களில் மீனை வியாபாரம் செய்பவர்கள், சுழியோடிகள், உப்பு விளைவிப்பவர்கள் போன்ற தொழில்களில் ஈடுபடக் கூடியோர் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறாக நோக்கும்போது கடலை முழுமையாக நம்பி தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை இந்த மீனவ சமூகம் என்ற சொல் சுட்டுவதனைக் காண முடியும். அந்த வகையில் இவர்களது வாழ்வியல் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

மீனவர்கள் வாழ்க்கை முறை

முழுமையாக கடல் வளத்தை நம்பி வாழ்க்கை நடத்தக்கூடியவர்களையே மீனவர்கள் ஆவர். அதாவது அன்றன்று உழைக்கும் சம்பளத்தை அன்றன்றே செலவு செய்யக் கூடிய மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழக்கூடியவர்களே இவர்களாவர்.

கடலில் கால் வைத்தால் தான் இவர்களால் ஒவ்வொரு நாளும் உணவு தேவையை நிறைவேற்ற முடியும். பொதுவாகவே பல மீனவ குடும்பத் தலைவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை மது பாவணையால் வீண் விரையம் செய்வதை காண முடிகின்றது.

அதாவது காலையில் இருந்து மாலை வரையும் வெயில், மழை என அனைத்தையும் எதிர்கொண்டு உழைக்கும் மீனவர்கள் மாலையில் தாம் உழைத்த பணத்தை போதையில் வீணாக்குவதால் வீட்டில் பஞ்சம் பட்டினி ஏற்படுவதையும் பார்க்க முடியும்.

இவ்வாறாக மீனவர்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானதாகவும், துயர் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

மீனவர்கள் வாழ்க்கைச் சூழல்

பொதுவாகவே மீனவர்கள் கடலை மையமாகக் கொண்டு தம்முடைய தொழில்களை மேற்கொள்வதனால், அவர்கள் வசிக்கக் கூடிய சூழலானது கடற்கரை ஓரங்களை மிகவும் அண்டிய பிரதேசங்களாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான பிரதேசங்களைப் பொறுத்தவரைக்கும் குடிநீர் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினையை போன்றன நிறைந்ததாகவே காணப்படுகின்றன.

மேலும் மீனவர்கள் வாழக்கூடிய வீடுகள் பொதுவாகவே ஓலை அல்லது தகர கொட்டில்களாகவே காணப்படுகின்றன.

வெயில் காலங்களில் தாங்க முடியாத அளவு வெயிலையும், மழைக்காலங்களில் வெள்ளமும் ஏற்படக்கூடிய பெரும்பாலான பிரதேசங்களிலேயே மீனவர்களின் வசிப்பிடங்கள் காணப்படுகின்றன.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

பொதுவாக கடலினுள் ஏற்படக்கூடிய தாழமுக்கம், சூறாவளி, புயல் மற்றும் சுனாமி போன்றவற்றினால் அதிகமாக பாதிப்படைய கூடியவர்கள் இந்த மீனவர்களே ஆவர்.

அதாவது இவ்வாறான பேரிடர்கள் மூலம் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாமலும் தங்களுடைய இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாமலும் மீனவர்கள் துயரப்படுவதனைக் காண முடியும்.

மேலும் முறையான உறையுள் வசதிகள் இல்லாமை, முறையான சுகாதார பராமரிப்புகள் இல்லாமை, குடிநீர் வசதிகள் போதுமான அளவு இல்லாமை மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கான விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாகவே இந்த மீனவர் சமூகம் காணப்படுகின்றது.

மீனவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்

பொதுவாகவே ஏழை மக்களாக காணப்படக்கூடிய மீனவர் சமூகத்தை உயர்த்தும் நோக்கிலேயே பல்வேறு அரசு சார் அமைப்புக்களும், தனியார் நிறுவனங்களும் செயற்பட்டு வருவதனை காணலாம்.

இந்த வகையில் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படுதல், சூறாவளி, வெள்ளம், சுனாமி போன்ற காலப்பகுதிகளில் நஷ்ட ஈடுகள் வழங்குதல், மீனவர்களுக்கான வீட்டு திட்டங்களை நிர்மானித்து வழங்குதல், பல்வேறு மீனவர் சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் மக்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருதல் மற்றும் மீனவர்களது செயற்பாட்டை அதிகப்படுத்துதல் மேலும் மீன் பிடிப்பதற்கு தேவையான படகு வசதிகளை வழங்குதல்.

இவ்வாறான பல்வேறு செயல்பாடுகள் இன்று மீனவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவியாய் அமைந்துள்ளன.

முடிவுரை

மக்கள் எந்த சூழலில் வாழ்கின்றார்களோ அந்த சூழலுக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை முறையும் வேறுபாட்டு அமைவதனை நாம் அவதானிக்க முடியும்.

இந்த வகையில் கடல் மற்றும் கடலோடு சார்ந்த பகுதிகளில் வாழக்கூடிய மக்களது வாழ்வியல் ஏனைய மக்களது வாழ்வியலிலும் பார்க்க சற்று வித்தியாசமாக அமைவதனைக் காண முடியும்.

குறிப்பாக இவர்கள் மீனவச் சமூகம் என அடையாளம் காணப்பட்ட போதிலும் இன்றைய காலகட்டங்களில் பல்வேறு தொழில் நிலைகளில் இந்த மக்கள் தங்களுடைய கால் தடங்களை பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like:

பெண் விடுதலை கட்டுரை

மீண்டும் மஞ்சப்பை கட்டுரை