பெண் விடுதலை கட்டுரை

pen viduthalai katturai in tamil

பெண்களே நாட்டின் கண்கள் என்றடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்குதாரர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். இன்று பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று திகழ்பவர்களாக பெண்கள் விளங்குகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

பெண் விடுதலை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பெண் விடுதலைக்கு பங்காற்றியவர்கள்
  • பெண் உரிமையில் பாரதியாரின் பங்கு
  • சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
  • இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு
  • முடிவுரை

முன்னுரை

பெண்களுக்கெதிரான அடக்குமுறை, வன்முறை, புறக்கணிப்பு போன்றவற்றிற்கு எதிராக பெண்களின் நீதி வேண்டி உருவானதே பெண் விடுதலையாகும். இன்று பெண்கள் சிறந்து விளங்க பெண் விடுதலையே காரணமாகும்.

இக்கட்டுரையில் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமான பெண் விடுதலை பற்றி நோக்கலாம்.

பெண் விடுதலைக்கு பங்காற்றியவர்கள்

பெண்களுக்கெதிரான அநீதிகள் பல்வேறுபட்ட வகையில் இடம் பெற்ற போதும் பெண்களும் ஆண்களைப் போன்று சுதந்திரமாக திகழ வழியமைத்து தந்தவர்களே பாரதி, தந்தை பெரியார், திலகர் போன்றவர்கள்.

இவர்கள் பெண் விடுதலைக்காக போராடியதோடு மட்டுமல்லாமல் பெண் விடுதலைக்கு காரணமானவர்களாகவும் திகழ்கின்றனர். அதாவது ஆரம்ப காலங்களில் சமூகத்திற்கு மத்தியில் காணப்பட்ட பெண் அடிமைத்தனம், சிறுவயது திருமணம், கல்வி மறுப்பு என பல்வேறுபட்ட அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்தவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள்.

பாரதியார் பெண்களுக்கான சுதந்திரத்திற்கு வித்திடும் வகையில் கவிதைகள் மற்றும் பாடல்களை படைத்ததோடு பல்வேறு புரட்சிகளையும் மேற்கொண்டார்.

பெண் உரிமையில் பாரதியாரின் பங்கு

பாரதியார் தனது கருத்துக்கள் பலவற்றில் பெண்கள் உரிமைகள் பற்றியே பேசுகின்றார். அந்த வகையில் பாரதியார் பெண்களுக்கான சில உரிமைகளை கூறியுள்ளார்.

அதாவது, பெண்ணிற்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொடுக்க கூடாது, கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்ய அனுமதித்தல், பெண்களுக்கு உயர்தர கல்வி கற்க வாய்ப்பளித்தல், பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சம பங்கு கொடுக்க வேண்டும், பெண் வயதுக்கு வரும் முன் திருமணம் செய்து கொடுக்க கூடாது என பல பெண் உரிமைகள் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ளதோடு இவ்வாறு பெண் உரிமை பேணப்படுகின்ற போதே சமூகம் முன்னேற்றமடையும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றார்.

சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

பெண்களானவர்கள் உடல், உள அளவில் மென்மையானவர்களாக காணப்படுகின்றார்கள் என்றடிப்படையில் சமூகத்தில் பலமிக்கவர்களாக திகழும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பினையே காண முடிகின்றது.

பெண்களானவர்கள் சீதனம், பெண்ணடிமைத்தனம், கல்வி மறுப்பு, சுதந்திரமின்மை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

மேலும் இன்று பல பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே கடமை என்று எண்ணி அவர்களது கனவை துச்சமாக கருதுகின்றனர். இதன் காரணமாக இன்று பல பெண்கள் தனது கனவுகளை குடும்பத்திற்காக தியாகம் செய்கின்றவர்களாக காணப்படுகின்றனர்.

இந்நிலை மாற அனைவரும் துணை செய்வதோடு ஆண்களைப் போன்று அவர்களுக்கும் உரிமை வழங்குவதனூடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு

இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது அரிதாகவே காணப்படுகின்றது. அதாவது பெண்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்குவதனூடாகவே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

மேலும் ஆண்களானவர்கள் பெண்களை மதித்து நடப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கான சுதந்திரமான சூழலை உருவாக்க முன் வர வேண்டும்.

முடிவுரை

பெண் விடுதலையின் பிரதான பங்குதாரர்கள் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே ஆவர். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை முதலில் பெற்றோர்களே வழங்க வேண்டும்.

பெண் விடுதலை இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

You May Also Like:

பெண் கல்வி கட்டுரை

பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை