முதியோர் பற்றிய கட்டுரை

muthiyor katturai in tamil

முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்க முடியாத ஒரு நிலையாகும் என்றவகையில் எம்மை வழிநடாத்தி செல்பவர்களாக முதியவர்களே காணப்படுகின்றனர்.

முதியோரை மதித்து நடப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை சிறந்த முறையில் பராமரிப்பதும் எமது கடமையாகும்.

முதியோர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • முதியோர்களை பேணுதல்
  • முதுமையின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்
  • முதியோர்களும் இந்தியாவும்
  • இன்றைய காலகட்டத்தில் முதியோர்களின் நிலை
  • முடிவுரை

முன்னுரை

முதியோர்கள் என்பவர்கள் 60 வயதை கடந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். முதியோர்களை கௌரவமாகவும், கண்ணியமாகவும் நடாத்துவது அனைவரதும் கடமை என்பதை நினைவுபடுத்தும் விதமாக ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

எண்ணற்ற அனுபவங்களை கொண்ட முதியவர்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

முதியோர் நலன் பேணுதல்

சமூகத்திற்கு மத்தியில் மூத்த பிரஜையாக திகழும் முதியோர்களை மதிக்க பழக வேண்டும். இன்று பெரும்பாண்மையான முதியவர்கள் பார்வையற்றவர்களாகவும், ஓர் வேலையை செய்ய இயலாதவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

இத்தகைய சூழலில் இவர்களை சிறந்த முறையில் குடும்ப அங்கத்தவர்கள் பராமரித்தல் அவசியமாகும். இன்றைய காலப்பகுதியில் முதியோர்களை ஒரு பொருட்டாக மதிக்காது பலர் செயற்படுகின்றனர்.

எமது சிறுவயதில் எம்மை சிறந்த முறையில் பராமரித்த பெற்றோரை சிறு குழந்தையாக கருதி முதுமையில் பராமரிப்பதன் மூலமே முதியோர் நலனானது பேணப்படுகிறது.

மேலும் இன்று அரசாங்கமும் முதியோர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலன்களை கொண்டுவந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

முதுமையின் போது ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றங்கள்

ஒரு மனிதனானவன் முதுமை அடைகின்ற போது உடலியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

மூளை மற்றும் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறைவடைதல், இனப்பெருக்கத் தடை, புலன் குறைபாடு, உளவியல் பாதிப்புக்கள், தோல் சுருக்கம், தசை எடை குறைவு, ஞாபகசக்தியின்மை என பல்வேறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

மேலும் நோய் தொற்றுக்களுக்கு இலகுவில் ஆளாக கூடியவர்களாக முதியோர் காணப்படுவதோடு பக்கவாதம், மூட்டுவலி, புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் முதுமையில் அதிகளவு ஏற்படுகின்றது.

முதியோர்களும் இந்தியாவும்

இந்திய தேசத்தில் முதியோர்களின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இன்றைய இந்திய எண்ணிக்கையில் 8.2 சதவிகிதம் பேர் முதியோர்களாக காணப்படுகின்றனர்.

மேலும் 1996ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கையினை ஒப்பிட்டோமேயானால் 167 சதவிகிதம் அதிகரித்தே காணப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 12 கோடி பேர் இருப்பார்கள் என்பதோடு பலர் உணவு, உடையின்றி மன உளைச்சலுக்கு ஆளாகியே வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் முதியோர்களின் நிலை

இன்றைய காலகட்டத்தில் தமது பெற்றோர் முதிய வயதை அடைகின்ற போது அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்ற நிலையினை காணக்கூடியதாக உள்ளது.

அதாவது நாம் பெற்றோராகும் வரை எமது பெற்றோரின் அருமை பலருக்கு தெரிவதே இல்லை. இன்று தனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணியே நாட்கள் நகர்ந்து கொண்டிருப்பதோடு பெற்றோரை முதுமை வயதில் பராமரிப்பதற்கு மறந்து விடுகின்றனர்.

மேலும் முதிய வயதில் முதியோர் இல்லத்தில் அவர்கள் படும் துன்பத்தை பிள்ளைகள் உணருவதே இல்லை.

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் நாம் குழந்தையாக இருக்கும் போது எமக்காக பல துன்பங்களை தாங்கிக்கொண்டு எம்மை சிறந்த நிலைக்கு ஆளாக்கியவர்களே அவர்கள் அத்தகைய பெற்றோரின் தியாகத்திற்கு முன்னால் நாம் எவ்வளவு செய்தாலும் ஈடாகாது என்பதனை உணர்ந்து நாம் கண்ணியமாக முதியோர்களை நடாத்துதல் வேண்டும்.

முடிவுரை

இன்று ஒவ்வொரு தனிமனிதனும் தனது வாழ்வில் பல்வேறு சாதனைகளை புரிவதற்கு உந்துதலாக இருப்பவர்கள் முதியவர்களே. இத்தகைய முதியோர்களை பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் நடாத்துவது எமது தலையாய கடமையாகும் என்றவகையில் முதியோரை போற்றி நடப்போமாக.

You May Also Like:

உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை

கணினியும் அதன் பயன்பாடும் கட்டுரை