இயற்கை அனர்த்தங்கள் பொதுவாக பல அழிவுகளை ஏற்படுத்துகின்றன. மனிதன் இயற்கைக்கு எதிராக நடந்து கொள்ளும் போது இயற்கை தனது எதிர்வினையை காட்டுகின்றது.
நாம் அனைவரும் இயற்கையை பாதுகாத்து இயற்கையுடன் ஒன்றி வாழும் போது பல இயற்கை அனர்த்தங்களை தவிர்க்க முடியும்.
புயல் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- புயல்
- புயலுக்கு பெயரிடல்
- புயல் எச்சரிக்கை கூண்டுகள்
- புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை
தமிழகத்தின் பதின்மூன்று கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கடந்த காலத்தில் பல புயல் சீற்றங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக ராமேஸ்வரம் புயல், நிசா புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா புயல் ஆகியன பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் அறிவிக்கப்படும் போது பொருத்தமான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சேதங்களை குறைக்க முடியும்.
புயல்
ஒரு புயலானது தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக மூன்று நிலைகளில் நடக்கிறது.
கடற்பரப்பில் 26° செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் போது காற்று வேகமாக வெப்பமடைந்து மேல்நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது.
மேலே செல்லும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதன்காரணமாக தாழ்வுநிலை உண்டாகி அதனால் அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் நிலையே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது.
புயலுக்கு பெயரிடல்
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனி பெயர் சூட்டும் நடைமுறை 2004 ஆம் ஆண்டில் தொடங்கியது.
உலக அளவில் வெப்ப மண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்கு பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம் பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும், பகுதியளவிலான வெப்ப மண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை விளங்குகிறது.
புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது அறிவியல் துறையை சேர்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத்துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணுவது,
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகும் பல சூறாவளிகள் பற்றிய குழப்பத்தை நீக்குவது, ஒவ்வொரு சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது, மக்களுக்கு விரிவான எச்சரிக்கையை வழங்குவது என்பவற்றை நோக்கமாக கொண்டது.
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும், வேறு சில வானிலை அமைப்புக்களும் இணைந்து வகுத்த வழிமுறைகளின் படி இந்த பெயர்கள் வழங்கப்படுகின்றன.
புயல் எச்சரிக்கை கூண்டுகள்
புயல் வீசும் போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப்பகுதிகளாகும். ஆகையால் துறைமுகங்கள், துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள், கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்கள் மற்றும் மீனவர்களுக்கு புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்க பயன்படும் சிக்னல்களே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஆகும்.
இதற்காக கடலில் இருந்து காண ஏதுவாக துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிவப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கை கூண்டுகளில் 11 நிலைகள் இருக்கின்றன.
நிலைமையின் தீவிரம் அதிகரிக்க, அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகும். இந்த நிலைக்கு இந்த கூண்டு என்பதனை இந்திய வானிலை மையம் தீர்மானித்து வைத்துள்ளது.
புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
வானிலை மையம் புயல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கும் போது பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள அதற்கான முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியமாகிறது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
புயல் தாக்கும் நேரங்களில் வீட்டில் உள்ள மின்சார உபகரணங்களை நிறுத்தி விடுதல் வேண்டும். அத்துடன் அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்து கொள்ளுதல் சிறந்தது. புயல் பாதிப்பு இல்லை என்று அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
முடிவுரை
புயலின் போது உண்டாகும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் மற்றும் கனமழை ஆகியவற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புயலின் போது ஏற்படும் பலத்த காற்றானது கடல் மட்டத்தை உயர்த்திட வழிவகுப்பதால் கடற்கரையை அண்மித்த வீடுகளுக்கு பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதுடன் மரங்களையும் வேரோடு சாய்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
புயல் உருவாகும் இடம், செறிவு, புயல் உருவாகும் திசை, புயல் ஏற்படின் பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டங்கள் குறித்தும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் தகவல்களை கருத்தில் கொண்டு செயற்படுவதனூடக பேரிடர் கால ஆபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும்.
You May Also Like: