“பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற வாசகத்துக்கு அமைவாக பெண்கள் கல்வி கற்பது நாட்டின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவே காணப்படும்.
இன்னும் சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் இந்த பெண் கல்வி அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
பெண் கல்வி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெண் கல்வியை வலியுறுத்தியவர்கள்
- பெண் கல்வியால் கிடைக்கும் நன்மைகள்
- பெண் கல்விக்கான தடைகள்
- இன்று பெண் கல்வியின் நிலை
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டில் பாலின சமத்துவம் நிலவுகின்றதா? என்பதனை பெண் கல்வியினை அடிப்படையாக வைத்து தெரிந்து கொள்ள முடியும்.
அதாவது அங்கு பெண் கல்வி மறுக்கப்படுகின்றது என்றால் அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றது என்றே புரிந்து கொள்ள முடியும்.
எனவே பெண்களும் சக மனிதர்களை என்பதனை புரிந்து கொண்டு, கல்வியின் பால் பெண்கள் உயர்ந்த இடங்களுக்கு செல்வதற்கு உதவ வேண்டும்.
பெண் கல்வியை வலியுறுத்தியவர்கள்
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என பாரதியார் ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் தான் எனவே அவர்களும் கல்வி கற்று எமது சமூகத்தை தலை நிமிரச் செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றார்.
மேலும் கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும் பெண்களின் கல்வியை வலியுறுத்தியவர்களாகவே காணப்படுகின்றனர்.
பெண் கல்வியால் கிடைக்கும் நன்மைகள்
பெண்கள் கல்வி கற்றுக் கொள்வதனால் அரசியல் பொருளாதார, சமூக ரீதியான பல்வேறு நன்மைகள் கிடைப்பதனை காணலாம். அரசியல் ரீதியாக ஆட்சி புரிவதற்கும், தங்களுடைய நலன்களை பெற்றுக் கொள்வதற்கும் உதவுகிறது.
மேலும் விளையாட்டு, கல்வித்துறைகளில் பெண்கள் சிறந்தவர்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது. உதாரணமாக பி.வி.பிந்து, கல்பனா சாவ்லா போன்றவர்களை குறிப்பிடலாம்.
இன்னும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றதன் மூலம் பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதினால் நாட்டின் பொருளாதார வளமும் வளர்ச்சி அடைகின்றது.
இவையாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் கொடுமைகள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான தைரியம் பெண் கல்வி மூலம் பெண்களுக்கு கிடைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பெண் கல்விக்கான தடைகள்
பெண்கள் தங்களுடைய கல்விகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு தடைகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அந்த வகையில் சில மூட நம்பிக்கைகளின் காரணமாக பெண்களை சில சமூகங்கள் கல்வி கற்பதற்கு அனுமதிப்பதில்லை.
இன்னும் சிலர் பெண்கள் திருமணம் ஆன பின்னர் குடும்பத்தை பராமரிக்கவே உதவுவோர், எனவே அவர்கள் கல்வி கற்று என்ன பயன் என்று கருதுகின்றனர். சில சமூகங்கள் அடக்கு முறையின் காரணமாக பெண்களை கல்வி கற்ற அனுமதிப்பதில்லை.
மேலும் வறுமையின் காரணமாகவும் சில கிராமப்புறங்களில் பெண்கள் கல்வியை தொடர முடியாமல் உள்ளனர் இவ்வாறாக பல்வேறு தடைகள் பெண் கல்விக்கு காணப்படுகின்றன.
இன்று பெண் கல்வியின் நிலை
பெண் கல்வியில் பல்வேறு தடைகள் காணப்பட்டாலும் அவ்வாறான தடைகளை தாண்டியும் பல பெண்கள் இன்று கல்வி கற்று உயர்ந்த நிலையில் உள்ளனர்.
இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். வணிகம், மருத்துவம், வானவியல், புவியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர் நாட்டின் தலைவர்களின் வரிசையில் கூட இன்று பெண்கள் அதிகமாகி வருகிறார்கள்.
எனவே இன்று பெண் கல்வியின் வளர்ச்சியினால் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர் எனலாம்.
முடிவுரை
இன்றைய உலகில் பல்வேறு மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டமையானது பெண் கல்விக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இதன் விளைவாகவே இன்று பல பெண்கள் கல்வியினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எனவே எமது வீட்டினதும், நாட்டினது முன்னேற்றத்துக்கும் பெண்கள் கல்வி கற்பது அவசியமான ஒன்றாகும். என்பதனை நாம் புரிந்து கொண்டு செயற்படுவோம்.
You May Also Like: