மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

marabu kavithai thotramum valarchiyum katturai

செம்மொழியான தமிழ் மொழியில் கவிதைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவை மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என்பனவாகும். இந்த வகையில் மரபுக் கவிதை என்பது தொண்டு தொட்டு வரும் பழமையான இலக்கிய நயம் மிக்க கவிதைகளை குறிப்பதாகும்.

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மரபுக் கவிதையின் தோற்றம்
  • மரபுக் கவிதைகளின் நோக்கம்
  • மரபுக் கவிதைகளின் வரலாற்று வளர்ச்சி
  • மரபுக் கவிதைகளின் இன்றைய நிலை
  • முடிவுரை

முன்னுரை

மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை இலக்கிய நயம் ததும்ப அழகாக எடுத்துச் சொல்லும் முறையே கவிதை எனப்படும். அந்த வகையில் ஆரம்ப காலங்களில் இலக்கியங்களில் தோற்றம் பெற்ற கவிதைகளையே நாம் மரபுக் கவிதை என்கின்றோம்.

அதாவது இவை காலத்தால் முந்தியவையாகும். இவ்வாறான மரபு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை தொடர்பாக இக்கட்டுரையில் காணலாம்.

மரபுக் கவிதையின் தோற்றம்

மரபுக் கவிதையின் தோற்றம் பற்றி நோக்கும் போது தமிழ் இலக்கியங்களில் 3000 வருடங்களுக்கு மேலாக மிகவும் தொன்மையான நூலாகிய தொல்காப்பியத்தில் செய்யுள் தொடர்பான சொல், எழுத்து, அகம், புறம், யாப்பு, அணி என்பன பற்றி எல்லாம் குறிப்பிட்டுள்ளமையானது செய்யுள் எனும் மரபுக் கவிதை வடிவத்தின் பழமையையே எடுத்துக்காட்டுகின்றது.

அந்த வகையில் பல்வேறு அறிஞர்களின் கருத்துப்படி மரபுக் கவிதையின் தோற்றம் 5000 வருடங்களுக்கு மேலானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரபுக் கவிதைகளின் நோக்கம்

பொதுவாக சங்க காலங்களில் தோன்றிய மரபுக் கவிதைகள் மன்னர்களது வீரம், கொடை, காதல், ஆட்சி சிறப்பு போன்றவற்றை எடுத்து கூறும் நோக்கம் கொண்டதாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் பக்தியின் மறுமலர்ச்சியின் காரணமாக அக்காலத்திய கவிதைகளின் நோக்கமானது இறைவனை பற்றியதாகவும், இறைவன் குடி கொண்டிருக்கக் கூடிய திருத்தலங்களைப் பற்றியதாகவும் அமைந்திருந்தது.

அதனை அடுத்த காலங்களில் மருத்துவம், தத்துவம் சார்ந்ததாகவும் கவிதைகள் எழத் தொடங்கின. இந்த வகையில் மரபுக் கவிதைகள் அந்த அந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய நோக்கங்களை கொண்டிருந்தமையைக் காணலாம்.

மரபுக் கவிதைகளின் வரலாற்று வளர்ச்சி

ஆரம்ப காலம் தொட்டு சுமார் 19 ஆம் நூற்றாண்டுக்கு வரைக்கும் இலக்கியம் என்றாலே மரபுக் கவிதை தான் எனும் அளவுக்கு மரபுக் கவிதைகளின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது.

சங்க காலங்களில் அகவல் பாவம், நீதி இலக்கியங்களில் வெண்பாவும் கொண்டு காணப்பட்ட மரபு கவிதைகள், பிற்பட்ட காலங்களில் குறிஞ்சி, விருத்தம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் பெற்று சிந்துபாவினை கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இவ்வாறாக மரபுக் கவிதைகள் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் புதுக்கவிதைகளின் தோற்றம் வரையிலும் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பெற்று வந்திருப்பதனைக் காணலாம்.

மரபுக் கவிதைகளின் இன்றைய நிலை

புதுக்கவிதைகளின் போக்கு இன்றைய காலகட்டங்களில் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்ற போதிலும், இன்னும் சில அறிஞர்கள் இன்றும் கூட மரபுக் கவிதைகளின் பாங்குகளில் தங்களுடைய கவிதைகளை வடிவமைப்பதனை காணலாம்.

அந்த வகையில் பாரதியார் பிள்ளைத்தமிழ், காமராசர் பிள்ளைத்தமிழ், சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் மற்றும் மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய எனும் நூல் போன்றவற்றில் இன்றும் மரபுக் கவிதையின் செல்வாக்கு காணப்படுகின்றது.

முடிவுரை

இலக்கிய விதிகளையும், ஓசை நயங்களையும் சிதைவிடாமல் கவிதை அமைக்கும் முறையே மரபுக் கவிதைகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில் தமிழ் மொழியில் இலக்கிய, இலக்கணங்களின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாகவே மரபு ரீதியான கவிதைகள் காணப்படுகின்றன.

You May Also Like:

கவியரங்கம் என்றால் என்ன

புதுக்கவிதை என்றால் என்ன