சொற்கள் சரியாக அமைகின்ற போது தான் அச்சொற்கள் அர்த்தமுள்ளதாக அமைந்து காணப்படும். சொற்கள் சரியான இலக்கணத்துடன் அமையாது காணப்படும் போது அங்கு சந்திப்பிழை ஏற்படும். இதன் போது சந்திப்பிழையை நீக்கி எழுதுதல் அவசியமாகும்.
சந்திப்பிழை என்றால் என்ன
சந்திப்பிழை என்பது வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமலும் மிக கூடாத இடத்தில் வல்லினம் மெய் இட்டு எழுதுவதும் தவறாகும் இதனையே சந்திப்பிழை என குறிப்பிடலாம். அந்த வகையில் சந்தி எழுத்துக்களாக க், ச், ட், த், ப், ற் போன்றனவற்றை எழுத்துக்களாக கொள்ளலாம். சந்திப்பிழையை ஒற்றுப்பிழை எனவும் அழைப்பர்.
சந்திப்பிழையின் அவசியம்
நாம் சொல்ல வந்த பொருளினை அனைவரும் பிழையின்றி சரியாக விளங்கிக் கொள்ள சந்திப்பிழை அவசியமானதாகும். மேலும் வாக்கியத்தில் பிழை ஏற்படும் பட்சத்தில் அதனை தவிர்த்து சரிவர எழுதுவதற்கும் அவசியமாகும். தமிழை பிழையின்றி எழுதிக் கொள்வதற்கும் துணை புரிகின்றது.
சந்திப்பிழைகளை நீக்கி எழுதுதல்
சொற்கள் சிறப்புற அமைய வேண்டுமாயின் சந்திப்பிழையின்றி எழுதுதல் அவசியமாகும். அந்த வகையில் வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும். அதனை பின்வருமாறு நோக்கலாம்.
வல்லினம் மிகும் இடங்கள்
இரண்டாம் வேற்றுமை உருபு, நான்காம் வேற்றுமை உருபுகளில் வல்லினம் மிகுந்து வரும்.
உதாரணம்: நூலைப் படி (ஐ உருபு), தோட்டத்திற்குச் சென்றான்
இந்த, எந்த, எப்படி, அப்படி போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுந்து காணப்படும்.
உதாரணம்: அந்தச் சாலை, இந்தக் கிணறு, இந்தப் பையன்
சால, தவ போன்ற உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகுந்து வருவதை காணலாம்.
உதாரணம்: சாலச் சிறந்தது, தவச் சிறியது
வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினமானது மிகும்.
உதாரணம்: எழுதிப் பார்த்தேன், பத்துப்பாட்டு
உவமைத் தொகையில் வல்லினம் மிகுந்து ஒலிக்கும்.
உதாரணம்: பவளச் செவ்வாய்
வல்லினம் மிகா இடங்கள்
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாமல் காணப்படும்.
உதாரணம்: காய்கனி, தாய்தந்தை
விளித்தொடரில் வல்லினமானது மிகாமல் அமையப்பெறும்.
உதாரணம்: மாலா பாடு
இரட்டைக்கிழவி மற்றும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது இடம்பெறும்.
உதாரணம்: படபட, சலசல
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உதாரணம்: செய்தவம், பாய்புலி
வியங்கோள் வினைமுற்றிற்கு பின் வல்லினம் மிகாது காணப்படும்.
உதாரணம்: கற்க
சில, பல எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
உதாரணம்: பல குடிசைகள், சில சொற்கள்
மேற்குறிப்பிட்ட வகையில் வல்லினம் மிகும், மிகா இடங்களை சரிவர அறிந்து எழுதுவதன் மூலம் சந்திப்பிழை இடம்பெறாது.
சந்திப்பிழையும் பொருள் வேறுபாடும்
வேலை தேடினான் – வேலைத் தேடினான் இந்த வசனத்தினூடாக வேலை தேடினான் என்பது தனது பணியினை தேடுவதனையும் வேலைத் தேடினான் என்ற வசனமானது வேலினைத் தேடுவதாகவும் பொருளினை தருகின்றது.
கத்தி கேட்டான் – கத்திக் கேட்டான் இந்த வசனத்தினூடாக கத்தி கேட்டான் என்பது கத்தியினை சுட்டுவதாகவும் மற்றைய வசனமானது உரக்க கேட்டான் என்ற பொருளிலும் வேறுபட்டு காணப்படுவதை நோக்கக்கூடியதாக உள்ளது.
நிலா சோறு உண்டான் – நிலாச் சோறு உண்டான் இந்த வசனத்தில் ஒரு நிலாவானது பெயரினையும் மற்றைய வசனத்தில் அமைந்துள்ள நிலாவானது நிலவினை பார்த்து சோறு உண்பதனையும் குறிப்பிடுகின்றது.
You May Also Like: