தமிழின் இனிமை கட்டுரை

tamilin inimai katturai in tamil

உலகில் தோன்றிய செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது.

தமிழின் இனிமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழ்மொழி தோற்றம்
  • தமிழ்மொழியின் சிறப்பு
  • தமிழ்மொழியின் இனிமை
  • பாரதிதாசன்
  • முடிவுரை

முன்னுரை

ஒருவர் தம் எண்ணங்களை பிறருக்கு தெரியப்படுத்துவதற்கும், பிறருடைய உணர்வுகளை தாம் அறிந்து கொள்ளவும் உதவும் ஊடகம் மொழியாகும். நாகரீகம் வளர வளர பேச்சு வழக்கில் காணப்பட்ட மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றென.

உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றியும், அழிந்தும், சில இன்று வரை நிலைபெற்றும் காணப்படுகிறது. அந்த வகையில் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியான தமிழ்மொழி பற்றியும், அதன் இனிமை பற்றியும் இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

தமிழ்மொழி தோற்றம்

தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்த திராவிட மொழியாகும். இது முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனும் முச்சங்கங்கள் அமைத்து தமிழ்மொழி வளர்க்கப்பட்டது.

அத்துடன் சேர, சோழ, பாண்டிய எனும் மூவேந்தர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு பல பாரிய பணிகளைப் புரிந்து இன்றுவரை தமிழ்மொழி சிறப்புற்று திகழ்வதற்கு பல உதவிகள் புரிந்துள்ளனர்.

தமிழ்மொழியின் சிறப்பு

தமிழ்மொழியானது தொன்மை வாய்ந்த மொழியாகவும் உலகில் தோற்றம் பெற்ற மொழிகளில் மூத்த மொழியாகவும் காணப்படுகிறது. உலகில் காணப்படும் பிரதான இலக்கியம் சார்ந்த நூல்கள் தமிழ்மொழியிலே அதிகளவில் காணப்படுகிறது.

தமிழுக்கு “முத்தமிழ்” என்று பெயர் காணப்படுகிறது. அவை இயல், இசை, நாடகம் என்பவற்றை குறிக்கிறது. இதில் இயற்றமிழ் என்பது எண்ணத்தை வளர்ப்பதாகவும், இசை தமிழ் என்பது உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச் செய்வதாகவும், நாடகத் தமிழ் என்பது நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்துவனவாகவும் அமைந்து காணப்படுகின்றது.

சைவ சமய நாயன்மார்களுள் ஒருவரான ஞானசம்பந்தர் தமிழ்மொழியின் சிறப்பை அறிந்து தனது பெயரின் அடைமொழியாக தமிழ் என்பதை இணைத்து “தமிழ் ஞானசம்பந்தன்” என குறிப்பிட்டுக் கொண்டார்.

மற்றும் வைணவ ஆழ்வார்கள் தமிழ்மொழியை தமிழென கூறாது,”விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலித் தமிழ், திருவரங்க தமிழ், நல்லிசைத் தமிழ், நல்லியல் இன்தமிழ்” என பல்வேறு அடைமொழிகள் கொண்டு அழைப்பதும் தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது.

உலக கலாச்சாரங்களின் தொட்டில், உலக நாகரிகங்களின் தொட்டில் என்று எல்லாம் தமிழ்மொழி சிறப்பாக அழைக்கப்படுகிறது.

தமிழ்மொழியின் இனிமை

“செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும், இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியினையும் வெல்லவல்லது தமிழ்மொழி. தமிழ் என்ற சொல்லே இனிமை என்று பொருள்படுத்துவதற்கு ஏற்ப அவனிடத்தில் கேட்டாரை தன் வயமாக்கும் இனிமை பொருந்தி இருப்பதில் ஐயமில்லை”

என்று மேலைநாட்டு அறிஞரான வினக்லோ அவர்களின் கூற்றாகும் உலகில் காணப்படுகின்ற எல்லா மொழிகளையும் விட தமிழ்மொழி அதிக இனிமை பொருந்திய மொழி என்பதனை இது விவரிக்கிறது.

தமிழ் என்பதற்கு இனிமை என்றும் ஒரு பொருள் காணப்படுகிறது. இது எழுதுவதற்கும், படிக்கவும், பேசுவதற்கும் மிகவும் எளிமையானதாக காணப்படுவதாலும் தமிழ்மொழி இனிமையான மொழி என கூறப்படுகிறது.

தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதியாரின் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்னும் வரிகள் தமிழ்மொழியின் இனிமையை விவரிக்கிறது.

பாரதிதாசன்

தமிழ் கவிஞர்களால் ஒருவரான பாரதிதாசன் என்பவர் தன்னுடைய “தமிழின் இனிமை” எனும் கவிதையில் உலகில் தோன்றிய எல்லாவற்றையும் விட தமிழ் மொழியானது இனிமையான மொழி என்பதனை கனியில் உள்ள சுவை, கரும்பிலுள்ள சாறு, மலரில் உள்ள தேன், காய்ச்சிய வெள்ளப்பாகில் உள்ள சுவை, பசுவில் கிடைக்கும் பால், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் இவற்றை எல்லாவற்றையும் விட மிக்க இனிமையானது என விபரிக்கின்றார்.

மேலும் தமிழ்மொழியானது இசையுடன் உயிரும் போல இணைந்திருக்கின்றன என்றும் பெற்ற தாயை விட நெருங்கிய உறவு தமிழ் மொழி என்றும் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே எனவும் பாரதிதாசன் தன்னுடைய “தமிழின் இனிமை” என்ற கவிதை பரப்பிலே மிக அழகாக சித்தரிக்கின்றார்.

முடிவுரை

ஆரம்ப முதல் தற்காலம் வரை சிறப்பு பெற்று விளங்குகின்ற, ஏனைய மொழிகளை காட்டிலும் அதீத இனிமை பொருந்திய தமிழ்மொழியானது அந்நிய மொழிகளின் கலப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனை எதிர்காலத்திலும் சிறப்புடன் பேணிப் பாதுகாப்பது தமிழ் இனத்தவராகிய எம் ஒவ்வொருவரது கடமையாகும்.

You May Also Like:

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை