வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன

வாழ்நாள் நீடித்த கல்வி

கல்வி என்பது ஒருவனுடைய அறிவினை விருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை பெற்றுக் கொள்ள உதவுகின்றது.

உலகில் பல செல்வங்கள் காணப்பட்ட போதிலும் கல்விச் செல்வமே சிறந்த செல்வமாகும் இது ஈடு இணையில்லாத அழியாச் செல்வமாகும். மன்னனுக்கு தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு ஆனால் கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறப்படுகின்றது.

வாழ்நாள் நீடித்த கல்வி

ஒரு மனிதன் தான் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை தன்னால் இயலுமான விடயங்களை கற்பானாயின் அது வாழ்நாள் நீடித்த கல்வி ஆகும்.

இந்த கல்வியை கற்பதற்கான காலம் வயது என்பவற்றை கணக்கிட முடியாது. சோக்ரட்டிஸ் கூறும் போது, “நான் இளைஞனாக இருக்கும் போது எனக்கு எல்லாம் தெரியும் என நினைத்தேன். முதுமை நிலை அடையும் போதே எனக்கு எதுவும் தெரியாத என்று அறிந்தேன்” எனக் கூறுகின்றார்.

ஒரு மனிதன் பள்ளிப்பருவ் ஆரம்ப நாள் முதல் தான் இறக்கும் தருவாய் வரை அறிந்து வைக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. நமது வாழ்வு தேடலில் தொடங்கும் போது அது சிறப்பு மிக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் நிச்சயமாக மாறும்.

வாழ்நாள் நீடித்த கல்வியின் நோக்கமும் பெறும் வழிகளும்

ஒருவன் தனது வாழ்நாளில் தான் கற்றது போதும் என நினைக்கும் போது சிறப்பான எதிர்காலத்தை இழக்கின்றான். எவன் ஒருவன் தனது வாழ் நாள் சிறக்க வேண்டும் என கற்றலின் அவசியத்தை உணர்கின்றானோ அவன் நிச்சயம் தனது வாழ்நாளை அர்த்தமுள்ளதாக மாற்றி அமைத்துக்கொள்கின்றான். அவ் வாழ்க்கை அவனுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

வாழ்நாள் நீடித்த கல்வியை ஒருவர் பாடசாலை சென்று மாத்திரம் கற்று விட முடியாது முறைசார்ந்த வழியிலோ அல்லது முறைசாரா வழியிலோ கற்றலினை தொடர்கின்றோம்.

முறைசார்ந்த கல்வி என்பது குறிப்பிட்ட திட்டமிடலுக்கு அமைய ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்து பல்கலைக்கழகம், கல்லூரிகள் செல்வது மற்றும் உயர் கல்வி கற்பது என வரைவிலக்கணப்படுத்தலாம். முறைசார்ந்த கல்வியை ஒரு குழந்தை பிறந்து வளர ஆரம்பிக்கும் போது முதலில் தன் தாயிடம் கற்க ஆரம்பிக்கின்றது.

பின் தந்தை , பாட்டி , பாட்டன், சகோதரர்கள் என தனது குடும்பத்தாரிடம் கற்க ஆரம்பிக்கின்றது. பாடசாலை சூழலை தாண்டி குறிப்பிட்ட வயது வரும் போது தனது சமூகத்திடம் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள ஆரம்பிக்கின்றது.

சிலர் தொழில் மூலமும் கற்கின்றனர். பின் குடும்பமாகி தனது பிள்ளையிடம் கற்க ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு ஒரு தனி மனிதன் பாடசாலை மற்றும் புத்தக வாழ்க்கை தவிர தனது வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை பல வகைகளில் அறிந்துக் கொள்கின்றான்.

“கல்வி கரையில் கற்பவர் நாள்சில:
மெல்ல நினைக்கின் பிணிபல- தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுன் குருகின் தெரிந்து.”

கல்வி எனும் கரையில் நாம் எவ்வளவு படித்தாலும் ஏதோ ஒன்றை நாம் இன்னும் அறியவில்லை படிக்கவில்லை என்ற நிலையை உருவாக்குவதே கல்வியின் சிறப்பாகும்.

வாழ்நாள் நீடித்த கல்வியின் அவசியம்

நாம் வாழ் நாள் நீடித்த கல்வியை பெறும் பட்சத்தில் சிறந்த பண்புள்ள பலர் மதிக்கத்தக்க தனித்துவமான வாழ்க்கையினை பெறுவோம் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

ஒருவர் காலம் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கும் போது சிறந்த அறிவினை பெற்றுக்கொள்ள முடியும். தனது தகமைகளை வளர்த்து கொண்டு சிறந்த தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் தனது வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள முடியும்.

தீர்மானங்கள் எடுக்கும் போது பகுப்பாய்வு செய்து சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள முடியும். நற்பிரஜையாக வாழ வழி அமைக்கும். புதிய புதிய விடயங்களை பற்றி சிந்திக்கும் ஆளுமை உருவாகும். நல்லது கெட்டதை அறிந்து சமூகத்தினை வழிநடத்த தேவையான அறிவு கிடைக்கும்.

நம்மை எத்தனை செல்வங்கள் கைவிட்டாலும் நாம் கற்ற கல்வி நம்மை எப்போதும் கைவிடாது. ஒருவருக்கு வாழ்நாள் நீடித்த கல்வி என்பது அவசியமான ஒரு விடயமாகும்.

You May Also Like:

அறிவை விரிவு செய் கட்டுரை