இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரியும் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் இந்த நிலத்துடன் பின்னிப்பிணைந்த தொடர்பு கொண்டவையாகவே காணப்படுகின்றன.
நாம் மட்டுமல்லாது எமது வருங்கால சந்ததியினரும் மற்றும் ஏனைய பிற ஜீவராசிகளும் எந்தவித சிரமமும் இன்றி வாழ்வதற்கு நில வளத்தினை பாதுகாப்பது எம் அனைவரதும் கடமையாகும்.
நிலவளம் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நிலம் வளம்
- நில வளத்தின் முக்கியத்துவம்
- நில வளத்தை பாதிக்கும் காரணிகள்
- நில வளத்தை பாதுகாக்கும் வழிகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கை நமக்கு அளித்த அருட்கொடைகளில் மிகவும் முக்கியமான வளமாக நிலவளம் காணப்படுகின்றது. உலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களும் இந்த நிலத்தைச் சார்ந்தே வாழ்கின்றன.
நிலத்தின் வளத்தை பாதுகாப்பது அத்தியாவசியமானதாகும். வளமான நிலமே செழுமையான உலகை உருவாக்கும். நிலவளத்தை பாதுகாப்பது பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
நில வளம்
நிலம் எனப்படுவது வெறுமனே ஒரு கூறு மட்டுமல்ல அதில் பல்வேறு நுண்ணுயிர்கள் கலந்திருப்பதனை காணலாம். இவ்வாறு உயிரோட்டம் மிக்க நிலமானது வளமானதாக காணப்பட்டால் அது நிலவளம் எனப்படுகின்றது.
நிலவளம் என்பது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயிர்களை முளைக்கச் செய்து இந்த உலகையே பசுமையாக்க கூடிய நிலத்தையே வளமான நிலம் என நாம் அடையாளப்படுத்துகின்றோம்.
நில வளத்தின் முக்கியத்துவம்
இன்றைய சூழலில் மக்கள் தொகை பெருக்கமானது மிகவும் துரிதமாகவே வளர்ச்சி கண்டு வருகின்றது. ஆகையினால் மக்களுக்கான உணவு தேவையோ மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
மக்களுக்கான உணவு தேவைகளை நிறைவு செய்வதற்காக வளமான நிலங்கள் முக்கியப்படுத்தப்படுகின்றன.
நிலவளம் நன்றாக காணப்பட்டால் தான் விவசாயம் செழித்து வளர்ந்து, நாட்டில் மக்களுடைய உணவு தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். மேலும் உலகில் காணப்படக்கூடிய அனைத்து தாவரங்களின் வளர்ச்சிக்கும் நலமான நிலவளம் மிகவும் அவசியமானதாகும்.
நில வளத்தை பாதிக்கும் காரணிகள்
இன்றைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் காரணமாக விவசாயத் துறையில் பல்வேறு நவீன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் பல்வேறு இரசாயன பதார்த்தங்களும், பூச்சிக்கொல்லிகளும், கிருமி நாசிகளும் நவீன விவசாய முறைகளில் அதிகமாக பயன்படுத்துவதனால் இவை மண்ணில் கலந்து மண்ணில் காணப்படக்கூடிய நுண்ணியர்கள் இறந்து போக காரணமாக அமைவதோடு நிலத்தின் வளத்தையும் சீர் கெடுக்கின்றது.
மேலும் எரிபொருள் மற்றும் எண்ணெய் கழிவுகளை நிலத்தில் சேர்த்தல், மக்காத குப்பைகளான பொலித்தீன், பிளாஸ்டிக் போன்றவற்றை நிலத்தில் சேர்த்தல் போன்ற காரணிகளாலும் நிலவளம் பாதிக்கப்படுவதனை காணலாம்.
நில வளத்தை பாதுகாக்கும் வழிகள்
நிலவளம் பாதிக்கப்படுமாயின் அது பாரியதொரு சவாலாகவே சமூகத்தில் நோக்கப்படும். நிலவளத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கைக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மண்ணரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகமான மரங்களை நிலத்தில் நடுதல், இரசாயன கலவைகள் அற்ற இயற்கை முறை விவசாயத்தை விவசாயிகள் நாடுதல், தொழிற்சாலைகள் மூலம் வெளியாகும் கழிவுகளை நிலத்துடன் கலக்காமல் பாதுகாத்தல்.
பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற மங்காத குப்பைகளை நிலத்துடன் கலக்காமல் செய்தல் மற்றும் இயற்கை பசளை முறைகளான மண்புழு உரம், எரு உரம், தொழு உரம் போன்ற மங்கும் உரங்களை இடுவதன் மூலமும் நிலவளத்தை பாதுகாக்கலாம்.
முடிவுரை
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்நாள் காலம் முழுவதும் இந்த நிலத்திலேயே எம்முடைய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளோம்.
நாம் வாழக்கூடிய இந்த நிலத்தின் வளங்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளில் இருந்து நாம் முழுமையாக தவிர்த்து நடக்க வேண்டும்.
அப்போதுதான் எமக்கும் எமது சந்ததியினருக்கும் வளமான நிலத்தை பெற முடியும். நிலவளம் பாதுகாப்பது எம் அனைவரதும் கடமை என உணர்ந்து, செயல்படுவது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
You May Also Like: