தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை

tamil mozhiyin thani thanmai

மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பாடல் செய்வதற்கான ஒரு ஊடகமாக மொழி காணப்படுகின்றது. அதாவது ஒருவர் தன்னுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு தெரிவிக்கவும், பிறரது உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும் உதவும் ஒரு ஆயுதம் மொழி எனலாம்.

இந்த வகையில் மனித நாகரீகம் வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய பேச்சு வழக்கில் காணப்பட்ட மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடைக்கப்பெற்றன. இவ்வண்ணம் ஆதிகால மனிதனின் அற்புத மொழியாகவே தமிழ்மொழி விளங்குவதனை நாம் அவதானிக்கலாம்.

தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழ் மொழியின் பழமை
  • செம்மொழியாம் தமிழ் மொழி
  • தமிழ் மொழியின் சிறப்புக்கள்
  • தமிழ் மொழியின் தனித்துவம்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழக்கூடிய நவீன தொழில்நுட்ப யுகத்தில் ஏறத்தாழ ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்ட வண்ணமே உள்ளன.

இவற்றுள் மொழிகளில் மூத்த மொழியான தமிழ், கிரேக்கம் பாபிலோனிய மொழி போன்றன மிகவும் பழமையான வரலாற்றை கொண்ட மொழிகளாக காணப்படுகின்றன.

உலகின் மூத்த மொழியாக போற்றப்படும் தமிழ் மொழியின் தனித்தன்மைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

தமிழ் மொழியின் பழமை

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி பிறந்த மூத்த குடி” என தமிழர்களின் பெருமையை புராணங்களின் வழி குறிப்பிடப்படுவதன் ஊடாக இந்த உலகம் தோற்றம் பெற்ற பொழுதே தமிழும் தோன்றி விட்டதாக நம்பப்படுகின்றது.

இந்த வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியம் அவர்களின் கருத்துப்படி மாறுபடாத ஒரு இலக்கிய மரபோடு தமிழ் ஒரு பேச்சு மொழியாக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதோடு, கி.மு 3ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே காணப்பட்டாலும் மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளில் பதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக 4,5ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எத்தனையோ பனை ஓலைச் சுவடிகள் மற்றும் குடவறைகளில் தமிழ் எழுத்துக்கள் காணப்பட்டமை அதன் தொன்மையையே எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடுகின்றார்.

செம்மொழியாம் தமிழ் மொழி

மொழியலாளர்கள் செம்மொழிக்குரிய பண்புகளாக சிலவற்றை வகுத்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே என் தாய் மொழியான தமிழ் மொழி செம்மொழியாக பரிணமிக்கின்றது.

இந்த வகையில் தமிழ் மொழியின் தொன்மை, பிறமொழி தாக்கமின்மை, இலக்கிய வளமை, இலக்கண செழுமை, நடுநிலைமை, உயர்ந்த விழுமிய சிந்தனைகள், கலை இலக்கியத் தன்மையை, மொழிக் கோட்பாட்டு தன்மை போன்றவாரான பண்புகளைக் கொண்ட ஒரு மொழியாக தமிழ் மொழி விளங்குவதானாலேயே அது செம்மொழியாக நோக்கப்படுகின்றது.

தமிழ் மொழியின் சிறப்புக்கள்

நூற்றாண்டுகள் பல மாறினாலும், நாடுகள் பல அபிவிருத்தி அடைந்தாலும், வீழ்ச்சி கண்டாலும். என்றும் வீழாத சிறப்படைய மொழியாக தமிழ் மொழி திகழ்கின்றது. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழாய் வளர்ந்து கன்னித்தமிழாய், செந்தமிழாய், பைந்தமிழாய் வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும்.

“மதுரமான மொழி தமிழ்” என கவிச்சக்கரவர்த்தி கம்பர் குறிப்பிட்டமை, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” மற்றும் “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என பாரதியார் குறிப்பிட்டமை. போன்றன தழிழ் மொழியின் சிறப்புக்களையே எமக்கு உணர்த்துகின்றன.

தமிழ் மொழியின் தனித்துவம்

இந்திய தேசமானது பல்வேறு மொழிகளை தன்னகத்தே கொண்டுள்ள போதிலும், இங்கு தமிழ் மொழி ஏனைய மொழிகளை விட தனித்துவம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

இந்த வகையில் ஏனைய அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு காணப்படுகின்ற போதிலும் தமிழ் இலக்கியங்கள் சமஸ்கிருத செல்வாக்குக்கு முன்னரே தோன்றி விட்டன.

அதாவது சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வுகளை காட்டுவதாக தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றமையும் அதன் தனித்துவத்தை எமக்கு உணர்த்துகின்றன.

முடிவுரை

காலத்தால் அழியாத செழுமை பொருந்திய செம்மொழியாகவே தமிழ் மொழி விளங்குகிறது.

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என பாரதிதாசன் குறிப்பிட்டதற்கு இசைவாக நாம் எம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை போற்றி பாதுகாப்பதோடு, அதன் தனித்தன்மையையும் பாதுகாக்க வேண்டும்.

You May Also Like:

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை