திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை

thirukkural katturai in tamil

மனித வாழ்வுக்கு தேவையான மற்றும் எல்லா காலத்துக்கும் பொருத்தமான அற நெறிகளை கூறக்கூடிய ஒரு நூலாகவே திருக்குறள் காணப்படுகின்றது.

திருக்குறளானது அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாகவே இந்த திருக்குறள் மதச்சார்பற்ற தன்மையை கொண்டுள்ளமையினையும் கூற முடியும்.

திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திருக்குறளின் சிறப்புகள்
  • திருக்குறளும் சமயமும்
  • திருக்குறளின் மதச்சார்பின்மை
  • சமயம் கடந்து மனிதன் சார் கருத்துக்கள்
  • முடிவுரை

முன்னுரை

உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளானது, மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்கு அறக்கருத்துக்களை எடுத்துக் கூறும் மனித சமுதாயத்தின் ஒரு வழிகாட்டியாகும்.

திருக்குறள் பல்வேறு குறட்பாக்களையும் அதிகாரங்களையும் கொண்டு காணப்படினும் அவை மதச்சார்பற்ற தன்மையினையே கொண்டுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள்

மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம், இன்பம், பொருள் ஆகிய அடிப்படை கோட்பாடுகளை தெளிவுபடுத்தும் ஒரு நூலாக திருக்குறள் காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் திருக்குறள் உலகத்தார் ஏற்றுக்கொள்ளக்கூடிய உலகப் பொதுமறையாக காணப்படல், அதிகமான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருத்தல் மற்றும் வி.கல்யாண சுந்தரம் கூறுவது போல் குறித்த ஒரு வகுப்பினருக்கோ, குறித்த ஒரு இனத்துக்கோ, குறித்த ஒரு மொழி இருக்கோ, குறித்த ஒரு மதத்தினருக்கோ அல்லது குறித்த ஒரு நாட்டுக்கோ உரியதன்று உலகத்தார் அனைவருக்கும் பொதுவாகக் காணப்படுகின்றமை திருக்குறளின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றன.

திருக்குறளும் சமயமும்

இந்த உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களையும் ஒரே குடும்பமாக கருதியவர் வள்ளுவர். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எல்லா சமூகத்தினருக்கும் பொருத்தமுடையதாகவே காணப்படுகின்றன.

அதாவது எல்லா சமயங்களையும் பின்பற்றக்கூடிய நபர்களுக்கும் பொருந்தும் வகையிலேயே திருக்குறள் அமையப்பெற்றுள்ளது. அத்தோடு திருவள்ளுவர் எந்த சமயம் சார்ந்தவராகவும் கருத்துக்கள் கூறவில்லை. எனவே திருக்குறளை குறிப்பிட்ட ஒரு சமயத்துக்கான நூல் என நாம் குறிப்பிட முடியாது.

திருக்குறளின் மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மதித்து நடக்கும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது அனைத்து மதங்களுக்கும் நடுநிலைத் தன்மையை பேணுவதே மதச்சார்பின்மை என குறிப்பிடலாம்.

இந்த வகையில் திருக்குறளை பார்ப்போமே ஆனால் திருக்குறளில் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும் சார்ந்திராத தன்மையை காண முடியும்.

திருக்குறளின் முதலாவது அதிகாரமான கடவுள் வாழ்த்தில் “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு” என்ற குறள் “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” போன்றவாரான பல்வேறு குறள்களில் கடவுளைப் பற்றி குறிப்பிடையில் பகவான் ஆதி, இலான், மலர்மிசை, ஏகினான், வலாரிபன் போன்றவாரான பொதுத்தன்மை பெயர்களையே குறிப்பிடுகின்றமையானது திருக்குறளின் மதச்சார்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.

சமயம் கடந்து மனிதன் சார் கருத்துக்கள்

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அதன் ஆகுலே நீர பிற” என்ற திருக்குறளின் மூலமாக வள்ளுவர், ஒருவர் மனதளவில் குற்றமற்றவராக இருப்பதுவே உண்மையான அறம் மற்றவை எல்லாம் ஆரவாரமே என குறிப்பிடுகின்றார்.

இதனடிப்படையில் அறம் என்பது சமயத்தைச் சார்ந்ததோ அல்லது புறம் சார்ந்ததோ அல்லாமல் அது மனித மனம் சார்ந்தது என திருவள்ளுவர் தெரிவிப்பதைக் காண முடியும்.

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவராக அறியப்பட்டாலும் மனிதனை முன்னிலைப்படுத்தும் தன்மையை, அவருடைய திருக்குறள்களின் ஊடாக அறிய முடிகின்றது.

முடிவுரை

தமிழர்களின் மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளானது இன்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையோடு ஒரு மதச்சார்பற்ற தன்மையையும் பறைசாற்றும் இலக்கியமாக காணப்படுகின்றது.

திருக்குறள் குறித்தது ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ மட்டும் உரியது என சொந்தம் கொண்டாட முடியாது. இது ஒரு மதச்சார்பற்ற இலக்கியம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

You May Also Like:

திருக்குறள் குறிப்பு வரைக

மாணவர் ஒழுக்கம் கட்டுரை