தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் வணங்குவதற்கு தகுதியானவர்கள் என சான்றோர் சிலரை வர்ணித்துள்ளனர். அந்த வகையில் அதனில் முதன்மைப்படுத்தப்பட்டவர்களாகவே பெற்றோர்கள் காணப்படுகின்றனர்.
எமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவர்களே வணங்குவதற்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர் இவற்றுள் மாதா-பிதா என முதன்மைப்படுத்தப்பட்டவர்களாக பெற்றோர்களே காணப்படுகின்றனர்.
நாம் வாழும் உலகில் பெற்றோர்களின் சிறப்பு அளப்பெரியது என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெற்றோரின் சிறப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெற்றோரின் முக்கியத்துவம்
- ஊதியமில்லா ஊழியர்கள் பெற்றோர்கள்
- பெற்றோருக்கான மதிப்பு
- தற்காலங்களில் பெற்றோரின் நிலை
- முடிவுரை
முன்னுரை
“பிறருக்கு வெளிச்சம் தருவதற்காக மெழுகுவர்த்தி தன்னைத் தானே உருக்கிக்கொள்கின்றது” இதுபோலவே பெற்றோர்களும் தங்களுடைய ஆசை, கனவு, லட்சியம் என்பவற்றையெல்லாம் கடந்து தங்களுடைய பிள்ளைகளுக்காக தங்களுடைய வாழ்க்கையினை முழுவதுமாக அர்ப்பணம் செய்யும் தியாகிகளாகவே காணப்படுகின்றனர்.
தியாகத்தின் வெளிப்பாடாக சிறப்புற்று விளங்கும் பெற்றோர்களின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பெற்றோரின் முக்கியத்துவம்
அன்பையும்-பண்பையும், பாசத்தையும்-நேசத்தையும் ஊட்டும் பெற்றோர்களைப் பெற்ற ஒவ்வொரு குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகளே. தாய் தந்தையை இழந்த அனாதை பிள்ளைகளின் கண்ணீரில் நாம் பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற ஔவையாரின் கூற்றுக்கு இணங்க இந்த உலகில் தாயை விட வணங்குவதற்கு உயர்வானது எதுவும் இல்லை அதேபோல் தந்தையின் வார்த்தைகள் விட உயர்வான வார்த்தைகள் எதுவுமே இல்லை.
ஊதியமில்லா ஊழியர்கள் பெற்றோர்கள்
கண் இமை போல் ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்பவர்களே பெற்றோர்கள் ஆவர்.
அதாவது தங்களுடைய குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது, எந்தவித துன்பங்களும் சூழ்ந்து விடக்கூடாது என தங்களுடைய முழு வாழ்க்கையும் குழந்தைகளிற்காக செலவழிக்கும் தியாகிகளே பெற்றோர்கள் ஆவார்.
எந்தவித ஊதியமும் இல்லாமல் முழு நேரமும் கடமையாற்றக் கூடிய ஊழியர்களாக பெற்றோர்கள் உள்ளனர்.
அதன் அடிப்படையில் தங்களுடைய குழந்தைகளின் வாழ்வுக்காக தங்களுடைய வாழ்வை சம்பாதித்தல், செலவழித்தல், கற்பித்தல், உணவு, உடை, உறையுள் வழங்குதல் போன்ற ஊழியத்திலேயே கழிக்க கூடிய பெற்றோர்கள் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
பெற்றோருக்கான மதிப்பு
ஒவ்வொரு குழந்தையினதும் தலையாயக் கடமையாக பெற்றோருக்கு மதிப்பளித்தல் என்பது காணப்படுகின்றது. அதாவது நாம் வாழக்கூடிய இந்த உலகில் உயர்ந்த நிலையை அடைந்த ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய பெற்றோர்களை மிகவும் சிறந்த முறையில் மதித்து நடந்தவர்களே ஆவர்.
பெற்றோருக்கான கௌரவம், மதிப்பு என்பன அவர்களுடைய எந்த வயதிலும் அளிக்கப்பட வேண்டும். சிறுவயதில் எமக்கு அன்பு செலுத்தி வளர்த்த பெற்றோருக்கு, அவர்களின் வயோதிபத்தின் போது மதித்து கௌரவம் அளிப்பது எம்முடைய கடமையாகும்.
தற்காலங்களில் பெற்றோரின் நிலை
நாம் வாழக்கூடிய உலகமானது பல்வேறு நவீன மாற்றங்களை உட்கொண்டு புதியதொரு சூழல் அமைப்பு பிரதிபலிப்பதனை காணலாம். அதன் வெளிப்பாடாகவே இன்று அதிகமான முதியோர் இல்லங்கள் அல்லது முதியோர் காப்பு நிலையங்கள் உருவெடுத்துள்ளதை காண முடியும்.
தற்காலங்களில் அதிகமான பிள்ளைகள் தங்களை வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கிய பெற்றோர்களை அவர்களுடைய வயோதிபத்தின் காரணமாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறான அவல நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுவது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயலாகும்.
முடிவுரை
தான் கண்ட உலகை விட சிறந்ததொரு உலகை தன் பிள்ளை காண வேண்டும் என அயராது உழைக்கக்கூடிய நல் உள்ளங்களே பெற்றோர்கள் ஆவர். இவ்வாறான பெற்றோர்களின் நிலை இன்று கவலைக்குரியதாகவே காணப்படுகின்றது.
தங்களுடைய குழந்தைகளுக்காக முழு நேரமும் பாடுபடக்கூடிய பெற்றோர்களை, பிள்ளைகள் வளர்ந்து ஆளானவுடன் பெற்றோரின் வயோதிபம் மற்றும் இயலாமை என்பவற்றை காரணம் காட்டி முதியோர் இல்லங்களில் சேர்ப்பது மிகவும் கீழ்த்தரமான ஒரு செயல் என்றே குறிப்பிடலாம்.
பெற்றோர்கள் ஒவ்வொரும் குழந்தைகளுக்கும் ஆற்றக்கூடிய அளப்பெரிய சேவையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பெற்றோரது சிறப்புக்களை விளங்கி, அவர்களை கௌரவப்படுத்த வேண்டியது தலையாய கடமையாகும்.
You May Also Like: