விடாமுயற்சி வெற்றி தரும் கட்டுரை

vida muyarchi vetri tharum katturai in tamil

நாம் வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டுமாயின் விடாமுயற்சியானது அவசியமானதாகும். அதாவது விடாமுயற்சியுடன் செயற்படுகின்ற போதே வெற்றிகள் எம்மை வந்தடையும்.

நாம் கடினமான விடயங்களில் கூட விடாமுயற்சியோடு செயற்பட்டோமேயானால் நிச்சயம் வெற்றி எனும் இலக்கை அடைந்து கொள்ள முடியும்.

விடாமுயற்சி வெற்றி தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விடாமுயற்சியின் முக்கியத்துவம்
  • வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி
  • விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர்கள்
  • திருக்குறள் கூறும் விடாமுயற்சி
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சிறந்ததோர் முறைமையே விடாமுயற்சி. அந்தவகையில் சாத்தியமில்லாத விடயங்களையும் சாத்தியமாக்குவதற்கு விடாமுயற்சியே காரணமாகும். முயற்சி திருவினை ஆக்கும் முயற்சியின்மை புகுத்துவிடும் என்ற கூற்றானது விடாமுயற்சி பற்றியே தெளிவுபடுத்துகின்றது.

விடாமுயற்சியின் முக்கியத்துவம்

நாம் ஒரு விடயத்தில் வெற்றியீட்டுவதற்கு அவசியமானதொன்றாகவே விடாமுயற்சியானது காணப்படுகிறது.

பல்வேறு சாதனைகளை படைப்பதற்கும் தோல்வியை எதிர்கொள்ளவும் விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் வாழ்வில் எண்ணற்ற சாதனைகளை அடையவும் விடாமுயற்சியே முக்கியத்துவமிக்கதாகும்.

வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி

நாம் ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமாயின் விடாமுயற்சி எம்மிடம் காணப்பட வேண்டும். அதாவது விடாமுயற்சி இன்றேல் நாம் ஒரு விடயத்தை சாதிக்க முடியாது. கலை, இலக்கியம், ஆராய்ச்சி, ஆய்வு, அரசியல் என எத்துறையிலும் வெற்றியீட்டுவதற்கு முன்பு பல தோல்விகளையே கண்டு வந்திருப்பர்.

அவ்வாறு தோல்வியுற்ற பின்னரும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் செயற்படும் போதே வெற்றி எனும் கனியை சுவைக்க முடியும்.

விடாப்பிடியான அகிம்சை கொள்கையை காந்தி அவர்கள் கடைப்பிடித்ததன் மூலமே இந்திய மண்ணிற்கு சுதந்நிரம் கிடைக்கப் பெற்றது. அதுபோன்றே வறுமை நிறைந்த வாழ்க்கையில் விடாமுயற்சியோடு எழுதிய எழுத்தாற்றலே இன்று பெர்னாட்ஸாவை அறிஞராக்கியது எனலாம். இவ்வாறான சாதனைக்கு பிரதான காரணமே விடாமுயற்சியே ஆகும்.

விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர்கள்

விடாமுயற்சியின் மூலமாக வாழ்வில் வெற்றியீட்டியவர்கள் பலர் இன்று சிறந்த இடத்தினை பெற்றுள்ளனர்.

அந்தவகையில் நான் மெதுவாக நடப்பவன்தான், ஆனால் ஒரு போதும் பின்வாங்குவதில்லை என்று குறிப்பிட்டவரே அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன். இவர் தனது வாழ்வில் பல அடுக்கடுக்கான தோல்விகளை கண்டு வந்தபோதிலும் விடாமுயற்சியின் காரணமாக வெற்றி பெற்றவர் ஆவார்.

ஒரு வேளை உணவுக்காக போராடும் குடும்பத்தில் பிறந்து இன்று உலகிலேயே சிறந்த கால்பந்து வீரராக திகழ்பவரே கிறிஸ்டியானோ றொனால்டோ ஆவார். இவரது விடாமுயற்சியே வெற்றிக்கான திறவுகோளாகும்.

மேலும் தோமஸ் அல்வா எடிசன் மூலமாகவே இன்று நாம் ஒளிர்கின்ற வீட்டில் வாழ்கின்றோம். இவர் 999 தோல்விகளை கண்டதன் பின்னரே மின்குமிழை கண்டுபிடித்தார். இவ்வாறாக சாதனையாளர்களாக திகழ்கின்றமைக்கான காரணம் விடாமுயற்சியே ஆகும்.

திருக்குறள் கூறும் விடாமுயற்சி

தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பனவையே வாழ்வின் வெற்றிக்கான இரகசியம் என்றவகையில் “எண்ணித் துணிக கருமம் துணிந்த பின், எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற குறளானது இலட்சியத்தை அடைய வேண்டுமாயின் விடாமுயற்சி செய்ய வேண்டும் அவ்வாறு முயற்சி இல்லையாயின் துன்பமே நிகழும் என்பதனை எடுத்துரைக்கின்றது.

“தெய்வத்தான் ஆகா தென்னும், முயற்சிதான் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறளானது இறைவனால் சாத்தியமற்ற விடயமும் நாம் மேற்கொள்ளும் விடாமுயற்சியால் சாத்தியமே என்பதனை சுட்டிக்காட்டுகின்றது.

முடிவுரை

எமக்கானதொரு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதே விடாமுயற்சி ஆகும். அந்தவகையில் எந்தவொரு இலக்கையும் விடாமுயற்சியோடு மேற்கொள்கின்ற போதே அந்த இலக்கை சிறப்பாக அடைந்து வாழ்வில் வெற்றி பெற முடியும்.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும்