மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்படும் வளியானது இன்று மனிதனின் பல்வேறு செயல்பாடுகளினால் மாசுபடுத்தப்படுகின்றன.
அதாவது காற்று மாசடைதல் என்பது இன்றைய உலகளாவிய பிரச்சினைகளில் பாரியதொரு பிரச்சினையாகவே காணப்படுகின்றது. மனித சமுதாயத்திற்கு பாரியதொரு அச்சுறுத்தலாகவே இந்த காற்று மாசுபாடு காணப்படுகின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காற்றின் முக்கியத்துவம்
- காற்று மாசுபாடு என்றால் என்ன
- காற்று மாசுபாடுக்கான காரணங்கள்
- காற்று மாசுபாடினால் ஏற்படும் விளைவுகள்
- காற்று மாசடைதலைத் தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்று உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சனைகளுள் காற்று மாசுபாடும் ஓர் முக்கியமான பிரச்சினை ஆகும்.
அதாவது மனிதனை நேரடியாகவே பாதிக்கக் கூடியதும் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதுமாகவும் இந்த காற்று மாசுபாடு காணப்படுகின்றது.
நகர்ப்புறங்களில் அதிகமாக காற்று மாசுபாடு இடம் பெறுவதனை காணலாம். எனவே நாம் மனித செயற்பாடுகளினால் காற்று மாசுபடுவதனைத் தடுக்க வேண்டும்.
காற்றின் முக்கியத்துவம்
இந்த உலகில் வாழக்கூடிய மனிதன் விலங்குகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் சுவாசிப்பதற்கு காற்று மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் மருத்துவ செயற்பாடுகளிலும், மின்சார உற்பத்திகளிலும் கூட இந்த காற்று பயன்படுத்தப்படுவதானது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
காற்று மாசுபாடு என்றால் என்ன
காற்றானது நைட்ரசன், ஒட்சிசன், காபோனிரொட்சைட் போன்ற பல்வேறு வாயுக் கலவைகளைக் கொண்டு தன்னுடைய இயற்கைத் தன்மையுடன் காணப்படுகையில் மனித செயற்பாடுகளால் வளிமண்டலத்தில் திடமான துகள்கள், தூசுகள் போன்றன வெளியிடப்பட்டு காற்றின் இயற்கைச் சமநிலையை பாதிக்கும் வகையில் காற்று நஞ்சுத் தன்மையாக மாறுதல் காற்று மாசு எனப்படுகின்றது.
காற்று மாசுபாடுக்கான காரணங்கள்
காற்றினை மாசுபடுத்தும் செயற்பாடுகளில் மனிதனே அதிகமாக ஈடுபடுகின்றான். அதாவது அணு மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், மின்சார நிலையங்கள் போன்றவற்றிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுப் புகைகள்
மற்றும் சாம்பல் என்பனவும் வாகனப் புகைகள், காடழிப்பு மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் இருந்து வெளிவரக்கூடிய தூசு, துணிக்கைகள் போன்ற மனித செயற்பாடுகளின் விளைவுகள் காற்றை மாசுபடுத்தும் காரணிகளாகும்.
மேலும் இயற்கையாக இடம்பெறக்கூடிய காட்டு தீ, எரிமலை வெடிப்பின் மூலமாக வெளிவரும் சாம்பல் போன்றனவும் காற்றினை மாசுபடுத்துகின்றன.
காற்று மாசுபாடினால் ஏற்படும் விளைவுகள்
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகம் இடம்பெறும் நகராக டில்லி காணப்படுகின்றது. காற்று மாசுபடுதல் மூலம் மனிதனுக்கு சுவாச சிக்கல், தோல் நோய்கள், சுவாசப் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பல்வேறு கொடிய உயிர் கொல்லி நோய்கள் ஏற்படுவதோடு ஓசோன் படை சிதைவடைதல், உலகம் வெப்பமடைதல், அமில மழை உருவாதல் போன்ற பல்வேறு விளைவுகளும் காற்று மாசு காரணமாக ஏற்படுகின்றன.
காற்று மாசடைதலைத் தடுக்கும் வழிமுறைகள்
காபனீரொட்சைட் போன்ற கெடுதலான வாய்ப்புகளை மரங்கள் உறுஞ்சுவதனால் அதிகமாக மரங்களை நடுதல், தொழிற்சாலைகள் மூலம் வெளிவரக்கூடிய நச்சுப் புகைகளை வளிமண்டலத்தில் கலக்க விடாமல் காற்று வடிகட்டிகளை பயன்படுத்தல்,
எரிபொருள் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக சூரிய வலு மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாறுதல், குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக குப்பைகளை மண்ணில் புதைத்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் காற்று மாசடைவதனை தடுக்கலாம்.
முடிவுரை
ஆரோக்கியமான வாழ்க்கையையே நாம் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம். எனவே எமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காற்றினை மாசுபடுத்துவது எமது உயிர்களுக்கே அச்சுறுத்தலான ஒரு விடயம் என்பதைப் புரிந்து கொண்டு நாம் ஒவ்வொருவரும் இன்றைய, நாளைய ஆரோக்கிய வாழ்வுக்காக காற்றை மாசுபடுத்தும் செயற்பாடுகளில் இருந்து விலகி நடக்க வேண்டும்.
You May Also Like: