சுத்தம் சுகம் தரும் கட்டுரை

sutham sugam tharum katturai in tamil

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

சுத்தம் இன்றைய வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அவை என்றுமே மாறா உண்மை. இவற்றை கூறிய நம் முன்னோர் சுத்தத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லி தரவும் தவறவில்லை.

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுத்தத்தின் முக்கியத்துவம்
  • சுய சுத்தம்
  • சுற்றுச்சூழல்
  • சுத்தமின்மையின் பாதிப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

மக்கள் யாவரும் இன்பமான வாழ்க்கையை விரும்புகின்றனர். இன்பமான வாழ்வுக்கு உடல், உள்ளம் இரண்டுமே நலமாக இருத்தல் அவசியம். உள்ளம் நலமாக இருப்பதற்கு நல்லெண்ணம், நற்செயல், நல்லோரிணக்கம் என்பன உதவி புரியும்.

உடல் சுகமாய் இருப்பதற்கு தூயகாற்று, நிறையுணவு, சுத்தமான உடை, காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள வீடு, நற்பழக்கவழக்கங்கள், தூய சூழல் என்பன அவசியம்.

சுத்தத்தின் அவசியம்

நமது வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியமானதாகும். நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும்.

ஆரோக்கியமே ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான மனிதனின் வெற்றி ரகசியமாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை சந்தோசமாக வாழ முடியும். நாம் எம்மையும் சுத்தமாக வைத்து எமது சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.

சுய சுத்தம்

அதிகாலையில் நித்திரை விட்டெழுதல், பல் துலக்கி முகம் கழுவுதல், நன்னீரில் குளித்தல், இறைவனை வணங்குதல், இலகுவான உணவினை உண்ணுதல் என்பன காலையில் செய்யும் கடமைகளாகும்.

மதிய உணவு நிறையுணவாக அமைதல் வேண்டும். அதிலே மாம்பொருள், இலிப்பிட்டு, புரதம், தாதுப்பொருள் முதலியன இடம் பெற்றிருத்தல் வேண்டும். உண்ணும் முன்பும் உண்ட பின்பும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

அருந்தும் நீர் சுத்தமானதாய் அமைதல் வேண்டும். மாலை வேலைகளில் நல்ல காற்றும் சூரிய வெளிச்சமும் உள்ள இடங்களில் விளையாடுதல் வேண்டும். அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தல் வேண்டும்.

இரவு உணவு இலகுவானதாய் இருத்தல் வேண்டும். பால் நிறையுணவாகும். ஆதலால் தினமும் ஒரு வேளையாயினும் பால் பருகி வருதல் வேண்டும். உரிய நேரத்தில் நித்திரைக்கு செல்லுதல் வேண்டும். உடல் உறுப்புகளுக்கு நித்திரை ஓய்வு தருகிறது.

சுற்றுச்சூழல்

அசுத்தமான உடல், அசுத்தமான சூழல் என்பன மன மகிழ்ச்சியினையும் நோயையும் உண்டு பண்ணும். நமது உடலைமூடி இருக்கும் தோலுக்கு பல விதமான தொழில்கள் இருந்த போதும் உடலைப் பாதுகாப்பது அதன் முக்கிய பணியாக இருக்கின்றது.

நோய் கிருமிகள் உள்ளே புகாதவாறு தடுத்துக் கொள்ளுகின்றது. அளவு கடந்த வெப்ப தட்பங்களின் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கின்றது.

காலையிலும், மாலையிலும் வீட்டையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். டெங்கு நுளம்பை உருவாக்கும் வகையில் உள்ள பொருட்களை,பிரதேசங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

சுத்தமின்மையின் பாதிப்புக்கள்

சுத்தம் என்பது தனிப்பட்ட நபரை மையப்படுத்தியது அல்ல. ஒரு சமூகத்தை மையப்படுத்தி அமைந்துள்ள விடயம் ஆகும். அந்த சமூகத்தில் சுத்தம் இல்லை என்றால் அனைவருமே பாதிக்கப்பட இடமுண்டு.

தற்காலத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. அவைகளிலிருந்து வெளியாகும் நச்சுக்கள், விஷ இரசாயனங்கள் ஆறுகள், ஏரிகளில் கலந்து குடிக்கும் நீர் விஷமாகி பல கண்டறிய இயலாத நோய்கள் உருவாகின்றன.

அதுமட்டுமல்ல வீதியில் வாகன புகைகள் வெளியாவதனால் சுவாச பிரச்சினைகள் தோன்றுகின்றன.

அண்மை காலத்தில் உலகையே வாட்டி எடுத்த கொரோனா சுத்தமின்மையால் அதிகம் பரவிய நோயாகும்.

அதற்காக தான் அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், பொது இடங்களிலோ, தனிப்பட் இடங்களிலோ பலர் ஒன்று கூடாமல் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அதனை கட்டுப்படுத்த முடிந்தது. இங்கும் சுத்தம் வலியுறுத்தப்படுகின்றது.

முடிவுரை

முன்னோர்களின் சொற்கள் என்றும் பொய் ஆகாது என்பது தொற்றுநோய்கள் மூலம் தெளிவானது. எனவே சுத்தத்தை பேணி நம்மை மட்டுமல்லாமல் சுற்றுபுற சூழலையும், சமூகத்தையும் சுத்தமாக வைத்து பல்லாண்டு காலம் வாழ்வோமாக!

You May Also Like:

விவசாயம் நேற்று இன்று நாளை