சுய ஒழுக்கம் என்றால் என்ன

suya olukkam in tamil

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும், பயனுள்ள திறன்களில் சுய ஒழுக்கமும் ஒன்றாகும். இது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அவசியமான மற்றும் பயனுள்ள திறமையாகும்.

தன்னடக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, செயல்படும் முன் சிந்திப்பது, செய்யத் தொடங்கியதை முடிப்பது என பல்வேறு வடிவங்களில் சுய ஒழுக்கம் தோன்றும். சுய ஒழுக்கம் என்பது சுதந்திரத்தின் ஒரு வடிவம் எனலாம்.

முற்காலத்தில் எல்லா மக்களும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதி அதைக் கடைப்பிடித்தார்கள். ஆனால் இன்று பலரும் சுய ஒழுக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள்.

மனிதர்களால் சுய ஒழுக்கம் பேணப்படாமையின் காரணமாகத்தான் இன்றைய காலப்பகுதியில் நிகழும் அனேக சமூகப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ளது. எனவே சமூகத்தில் ஒழுங்கு வேண்டும் என்றால் அது தனிமனிதர் ஒவ்வொருவரது சுய ஒழுக்கம் மூலமாகவே கொண்டுவர முடியும்.

சுய ஒழுக்கமுள்ள நபராக இருப்பது எளிதான காரியமல்ல. சுய ஒழுக்கம் நாம் செய்யும் செயல் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையைத் தர வல்லது.

இதனை மனிதர்கள் யாவரும் உணர்ந்து சுய ஒழுக்கத்துடன் வாழப்பழகும் போது, சமூகச் சீரகேடுகள் களையப்படுவதுடன் மனித குலம் ஒழுக்கத்தின் வழி திகழும்.

சுய ஒழுக்கம் என்றால் என்ன

சுய ஒழுக்கம் என்பதனை கேம்பிரிட்ஜ் அகராதியின் வரையறை “நீங்கள் விரும்பாதபோதும் நீங்கள் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த விடயங்களைச் செய்யும் திறனே சுய ஒழுக்கம்” என்கின்றது.

மெரியம் வெப்ஸ்டர் அகராதியின் வரையறை “முன்னேற்றத்திற்காக தன்னைத் திருத்திக் கொள்ளுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் சுய ஒழுக்கம்” என்கின்றது.

எனவே பொதுவாக நோக்கின், சுய ஒழுக்கம் என்பது சுய கட்டுப்பாடு, உள் வலிமை மற்றும் உங்களையும் உங்கள் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்துதல் எனலாம்.

மேலும் சுய ஒழுக்கம் என்பது ஒருவருக்கான சொல் தூய்மை, செயல் தூய்மை, அகத்தூய்மை புறத்தூய்மை இவையாவற்றையும் பேணுவதே சுய ஒழுக்கம் எனலாம்.

சுருங்கக் கூறின், நெறிமுறைகள் தவறாத தனி மனிதக் கட்டுப்பாடுதான் சுய ஒழுக்கம் ஆகும்.

சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம்

சுய ஒழுக்கமுள்ள ஒருநபர் தனது வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

சுய ஒழுக்கமானது ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்க்கை விவகாரங்களை திறன் படக் கையாளுவதற்கும், இலக்குகளை அடைவதற்கும் இன்றியமையாததாகும். சுய ஒழுக்கமானது மன உறுதியுடன் சோம்பேறித்தனத்தை மட்டுமன்றி உறுதியற்ற மனத்தன்மையை அடக்கவும் உதவும்.

மேலும் நாம் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும், பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும் புரிந்துணர்வுடனும், அக்கறையுடனும் இருக்க உதவுகின்றது.

ஒருவர் தனது வாழ்க்கையில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காது விடின், அதுவே அவரது வாழ்வில் குறைந்த சுயமரியாதை ஏற்படுத்திவிடும். எனவே சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அனைவரும் சுய ஒழுக்கத்துடன் வாழப்பழக வேண்டும்.

You May Also Like:

படபடப்பு குறைய வழிகள்

முகத்தில் உள்ள மங்கு மறைய டிப்ஸ்