பாலின சமத்துவம் கட்டுரை

palina samathuvam katturai in tamil

நாம் வாழக்கூடிய சமூகமானது ஆண், பெண் என இரு பாலினரை கொண்டதாகவும், தற்காலங்களில் மூன்றாம் பாலினம் என்பதும் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாலினர்களுக்கு இடையில் சமத்துவமான தன்மை பேணப்படுவதே பாலின சமத்துவம் எனப்படுகின்றது. சிறந்ததொரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு நிச்சயமாக பாலின சமத்துவம் பின்பற்றப்படுவது அவசியமாகும்.

பாலின சமத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாலின சமத்துவம் என்றால் என்ன
  • பாலின சமத்துவத்தின் அவசியம்
  • பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள்
  • பாலின சமத்துவத்தின் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

அனைத்து உயிரினங்களிலும் ஆண், பெண் என்ற பாலினம் காணப்படுகின்றது. ஏன் தாவரங்களில் கூட காணப்படுகின்றது. மனிதர்களில் ஒரு படி மேலாக பாலினம் மூன்று பிரிவாக உள்ளது.

பாலினம் எதுவாக இருந்தாலும் அது ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினமாகவோ காணப்பட்டாலும் சமத்துவம் என்பது பேணப்பட்டு அனைவரும் சமமாக நடத்தப்படுதல் அவசியமானதாகும்.

பாலின சமத்துவம் என்றால் என்ன

பாலின சமத்துவம் எனப்படுவது ஆண், பெண், மூன்றாம் பாலினம் என்ற எந்தவித பாகுபாடுகளும் இன்றி அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டு சமமான முறையில் நடத்தப்படுவதனையே குறிப்பதாகும்.

“ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்போருக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட்டு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு சமமாக நடத்தப்படுகின்றமையே பாலின சமத்துவம்” என யுனிசெப் அடையாளப்படுத்தியிருப்பதனைக் காணலாம்.

பாலின சமத்துவத்தின் அவசியம்

சமூகத்தில் காணப்படுகின்ற அனைத்து பாலினரும் தங்களுக்குரிய திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களுடைய விருப்பங்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிறைவேற்றிக் கொள்வதற்கும் பாலின சமத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதாவது ஆண்கள், பெண்கள் என்பவர்களுக்கு இடையே சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கு இந்த பாலின சமத்துவம் அடிப்படையாகின்றது.

இதற்கு மேலதிகமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதற்கும், மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த பாலின சமத்துவம் அவசியமாகும்.

பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள்

இன்று நாம் வாழும் உலகில் பாலின சமத்துவம் பற்றி எவ்வளவு தான் பேசப்பட்டாலும் அவை நடைமுறையில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.

சமூகங்களுக்கிடையில் பாலின சமத்துவமின்மை நிலவுவதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.

கல்வி அறிவின்மை, ஆண் ஆதிக்கம், இளவயது திருமணம், வரதட்சணை, பெண் அடக்கு முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற காரணிகள் பாலின சமத்துவமின்மைக்கு அடிப்படையாகின்றன.

பாலின சமத்துவத்தின் நன்மைகள்

பாலின சமத்துவம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதனால், இந்த பாலின சமத்துவம் முறையாக பின்பற்றப்படக்கூடிய சமூகங்களில் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது அதன் பாரிய நன்மையாகும்.

அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு ஆயுதமாக தொழிற்படல், பாலினங்களுக்கு மத்தியில் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் சம உரிமைகள், அந்தஸ்துக்கள் என்பவற்றை வழங்குதல் போன்றன பாலின சமத்துவத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும்.

முடிவுரை

ஒரு நாட்டின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒன்றாகவே பாலின சமத்துவம் காணப்படுகின்றது. இந்த உலகினில் பாலினங்களின் அடிப்படையில் யாரும் யாரை விடவும் குறைந்தவர்கள் அல்ல என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தோடு மனிதனை சக மனிதனாக மதிக்கும் தன்மையையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் செயல்படுவோமே ஆனால் இந்த பாலின சமத்துவத்தை இலகுவாகவே கடைப்பிடிக்க முடியும்.

You May Also Like:

வள்ளலார் ஒரு புரட்சியாளர் கட்டுரை

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை