வீதி விபத்து கட்டுரை

veethi vibathu katturai in tamil

தற்காலங்களில் அதிகமான உயிர்களை காவு கொள்ளும் ஒரு நிகழ்வாகவே, இந்த வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதாவது மனிதனுடைய போக்குவரத்துக்கான வீதி அல்லது பாதை நெடுகிலும் இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வாகனங்கள் நடமாடுவதனை காணலாம்.

இவ்வாறாக மனித பெருக்கமும், வாகன பயன்பாடுகளின் ஆதிக்கமும் இன்று அதிகமான வீதி விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

வீதி விபத்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வீதி விபத்து என்றால் என்ன
  • வீதியின் ஒழுக்க நெறிமுறைகள்
  • வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
  • வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் அன்றாடம் தன்னுடைய போக்குவரத்துக்காக பயன்படுத்தக்கூடிய வீதிகளில், நிகழக்கூடிய விபத்துக்கள் இன்று பெருமளவில் அதிகரித்துள்ளமையை காணலாம். இதனை சர்வதேச நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

வீதி விபத்துக்களின் மூலம் வருடம் ஒன்றில் பல இலட்சம் மக்கள் உயிரிழப்பதுடன் அவர்களுள் அதிகமானோர் இளம் வயதினராகவும் காணப்படுகின்றனர். வீதி விபத்துக்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

வீதி விபத்து என்றால் என்ன

பொதுவாகவே நாம் வீதிகளில் நடக்கக்கூடிய விபத்துக்கள் அனைத்தையும் வீதி விபத்து எனக் கொள்ள முடியும்.

அதாவது வீதியில் நடந்து செல்லும் ஒருவருக்கு வீதியில் செல்லும் வாகனம் ஒன்றின் மூலம் ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள், வீதியில் பயணம் செய்யும் இரு வாகனங்களுக்கு இடையிலான விபத்துக்கள், வீதியில் பயணம் செய்யும் ஒரு வாகனம் வேறொரு சடப்பொருளில் ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள் போன்ற வீதியில் நடக்கும் அனைத்து விபத்துகளையும் நாம் வீதி விபத்துக்கள் என்ற கண்ணோட்டத்தில் வரையறை செய்து கொள்ளலாம்.

வீதியின் ஒழுக்க நெறிமுறைகள்

நாம் ஒவ்வொருவரும் வீதிகளில் பயணம் செய்யும்போது அதற்கென தனியான ஒழுக்க நெறிமுறைகள் காணப்படுகின்றன.

அதாவது நடந்து பயணிக்கும் ஒருவர் வீதியின் வலப்புறமாகவும், வாகனங்களில் பயணிக்க கூடியவர்கள் வீதியில் இடப்புறமாகவும் செல்ல வேண்டும். இங்கு நடந்து செல்பவர் அவருக்கு எதிரே வரக்கூடிய வாகனங்களை அவர் கண்ணினால் பார்த்து அதற்கு ஏற்றவாறு நடந்து செல்ல முடியும் என்பது முக்கியமானதாகும்.

மேலும் வாகனங்களில் பயணிக்க கூடியவர்கள் வீதிச் சமிக்ஞைகள், குறியீடுகள் என்பவற்றினை மிகுந்த கவனத்துடன் அவதானித்து செயற்படுதல் வேண்டும். இவ்வாறாக வீதியின் ஒழுக்க நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதானது வீதி விபத்துக்களை குறைப்பதற்கு உதவும்.

வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

இன்று அதிகமான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு வாகன சாரதிகளின் கவனயீனமே முக்கியமான காரணமாக அமைந்து விடுகின்றன.

அதாவது போக்குவரத்து சட்ட திட்டங்களை மதிக்காமை, தூக்கம் இன்றி தொடர்ச்சியாக வாகனம் செலுத்துகின்றமை, போதை பொருட்களை பாவித்து விட்டு வாகனம் செலுத்துகின்றமை, தமக்கு முன்னால் செல்லக்கூடிய வாகனங்களை முந்தி செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையுடன் பயணிக்கின்றமை, தொலைபேசி பாவனையோடு வாகனம் செலுத்துகின்றமை மற்றும் பாதசாரிகள் முறையாக வீதி சட்ட முறைகளை பின்பற்றாமை போன்ற காரணங்களினால் அதிகமாக வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வழிமுறைகள்

இன்றைய காலகட்டங்களில் வாகன விபத்துகளை அதிகமாக இடம்பெறுவதனால், வாகனங்களை செலுத்தக்கூடிய ஒவ்வொரு சாரதிகளையும் பொறுப்புடையவர்களாக மாற்ற வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு உயிர்களினதும் பெறுமதி பற்றி சாரதிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் விதி ஒழுக்க நெறிமுறைகளை மீறக்கூடிய சாரதிகளை கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துதல் வேண்டும்.

அத்தோடு பாதுகாப்பான வீதி கடவைகள், வீதிச் சமிஞைகள் என்பவற்றை பயன்படுத்துதல் வேண்டும். வீதிகளில் அதிகமான வாகனங்கள் பயணிப்பதும் வீதி விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமையும்.

எனவே பொது போக்குவரத்து வாகனங்களை அதிகமாக உபயோகிப்பது இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு உதவியாக அமையும்.

முடிவுரை

தற்காலங்களில் அதிகமான இளம் வயதினர்கள் தங்களது உயிர்களை இழப்பதற்கு, இந்த வீதி விபத்துகளே மிக முக்கிய காரணமாக அமைகின்றன.

எனவே நாம் ஒவ்வொருவரும் வீதியின் சட்ட திட்டங்கள், ஒழுக்க நெறிமுறைகள், வாகனச் சாரதிகளுக்கான சட்ட திட்டங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு எமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமானதாகும்.

You May Also Like:

தீ விபத்து கட்டுரை

தொற்று நோய் பற்றிய கட்டுரை