இயற்கை வளங்கள் கட்டுரை

iyarkai valam katturai in tamil

இயற்கை வளங்கள் கட்டுரை

உயிர்களின் பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உலகின் நிலைத்தன்மையை பேணுவதாகவும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

இன்று இயற்கை வளங்கள் அழிந்து வருவதை பார்க்கும் போது பெரும் மனவருத்தத்தை தருகின்றது.

இயற்கை வளங்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கை வளங்கள்
  3. இயற்கை வளங்களின் முக்கியத்துவம்
  4. இயற்கை வளங்களின் அழிவு
  5. இயற்கை வளங்களின் பாதுகாப்பு
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கை எமக்கு அளித்த அரிய கொடை இயற்கை வளங்கள் ஆகும். ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை மனித வாழ்க்கை இயற்கை வளங்களையே சார்ந்துள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தார்கள்.

ஆனால் இன்று அதிகரித்த நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. இதனால் மொத்த உயிரினங்களின் வாழ்வியலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள்

இயற்கையில் இருந்து கிடைக்கப் பெறும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். உயிர்கள் படைக்கப்பட்ட போதே அவற்றுக்கு தேவையான இயற்கை வளங்களும் சேர்த்து படைக்கப்பட்டுள்ளன.

இயற்கை வளங்களுக்கு எடுத்துக்காட்டாக காடுகள், நீர், கடல், கனிம வளங்கள், மலைகள், சமவெளிகள், சூரிய ஒளி போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இவை மனித தலையீடுகளின்றி தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதியில் காணப்படுவனவாகும். இவை மனிதனால் உருவாக்க முடியாத அரிய வளங்கள் ஆகும். இவையின்றி மனிதனால் தனித்து இயங்க முடியாது.

இயற்கை வளங்களின் முக்கியத்துவம்

மனித நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் இயற்கை வளங்களின் பங்களிப்பு இருக்கின்றது. இயற்கை மூலதனமாக, உணவுக்காக, தங்குமிடத்திற்காக, மருத்துவத்திற்காக, வேலைவாய்ப்புக்காக, தேசிய வளர்ச்சிக்காக என இயற்கை வளங்கள் மனித வாழ்வியலோடு ஒருமித்துள்ளது.

அவ்வாறே அனைத்து உயிரினங்களினது வாழ்வும் இயற்கையை சார்ந்தே இருக்கிறது. பல நாடுகளில் அங்குள்ள இயற்கை வளங்களைப் பொறுத்தே அந்த நாட்டின் பொருளாதார நிலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆதலால் அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களின் அழிவு

அறிவியல் வளர்ச்சி காரணமாக இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. அருமையான இயற்கை வளங்களை அருங்கொடைகளாக எண்ணி பயன்படுத்தாமல் சுயநல நோக்குடன் பயன்படுத்தி அவற்றின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம்.

பசுமரக் காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்சாலை கழிவுகளால் சூழலை மாசுபடுத்தி இயற்கையின் தட்ப வெப்ப நிலைகளையும் சீர்குலைத்து உயிரினங்கள் வாழ தகுதி இல்லாத சூழலாக இப்புவியை மாற்றியமைத்து எமது மற்றும் எதிர்கால சந்ததியினுடைய வாழ்வை கேள்விக்கு உட்படுத்தியுள்ளோம்.

பூகோளமயமாதலால் புவி வெப்பமடைதல், நீர்நிலைகள் மாசடைதல், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வியலை சீர்குலைத்தல் என இயற்கையின் வளங்களை சுரண்டி இயற்கையின் சீற்றங்களாலும் அல்லலுறுகிறோம்.

இயற்கை வளங்களின் பாதுகாப்பு

மனிதன் இப்புவியில் உயிர் வாழ மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை நிகழ்த்தித்ததந்த இயற்கையின் கொடைகளை பாதுகாத்து எம் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

நீர், மின்சாரம், கடதாசிகள், பெற்றோலியம் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வருங்கால தலைமுறையை கருத்தில்கொண்டு பசுமையான மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள், நீர்வளம், நிலவளம்,  கனிய வளம் ஆகியவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கல்லும் மண்ணும் உள்ள பாலைவனம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் திகதி  உலக இயற்கை வள பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

முடிவுரை

இயற்கை வளங்கள் நமக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்து அல்ல. எம்மை தொடர்ந்து வரும் எதிர்கால சந்ததியும் பயன்படுத்த இடமளிக்கும் வகையில் அவற்றை சிக்கனமாக நுகர வேண்டும்.

அளவுக்கு மீறி நுகர்வது சட்டவிரோத செயல் ஆகும். இவ்வாறாக இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிப்பதன் மூலமாக மட்டுமே இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.

இயற்கையின்றி மனிதனால் வாழ இயலாது, மனிதகுல வாழ்வே இயற்கையை நம்பித்தான் இருக்கிறது என்ற நிதர்சனத்தை புரிந்து இயற்கை வளங்களை பாதுகாப்பை எம் தலையாய கடமையாக கொண்டு செயற்படுவோமாக.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை