ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி இளைஞர்களிடமே காணப்படுகின்றது. அதாவது இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக விளங்குவார்கள். எனவே ஒவ்வொரு இளைஞரும் தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்தே ஆக வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தற்கால இளைஞர்கள்
- இளைஞர்களது உத்வேகம்
- இளைஞர்களது சமூக அக்கறையும், அரசியல் ஈடுபாடும்
- இளைஞர்களது சாதனைகள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் அதிகமான இளைஞர்கள் வாழும் நாடான இந்தியாவில், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கும் அதிகமாகவே தேவைப்படுகின்றது.
அதாவது “என்னிடம் துடிப்புள்ள 100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகின்றேன்” என சுவாமி விபுலானந்தர் குறிப்பிட்டதற்கு அமைய நாட்டுப்பற்றும், வேகமும், துடிப்பும் உள்ள இளைஞர்கள் ஒன்றினைவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் துரிதமடையும் என குறிப்பிடலாம்.
தற்கால இளைஞர்கள்
“நம் நாட்டின் எதிர்காலம் நம் நாட்டில் இளைஞர்களின் கைகளிலே காணப்படுகின்றது” என்ற அப்துல்கலாமின் கருத்துக்கு அமைய தற்காலத்தில் இளைஞர்களின் செல்வாக்கு முக்கியமானதாகவே காணப்படுகின்றது.
இன்றைய இளைஞர்கள் அறிவுத்திறனிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளதைப் போலவே மருத்துவம், வானவியல், அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் திறமை மிக்கவர்களாக வளர்ந்து வருகின்றனர்.
இது இன்று இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு காரணமாகவும் அமைகின்றது.
இளைஞர்களது உத்வேகம்
இளைஞர்களது வாழ்வில் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை இலகுவாக தகர்த்தெறிய கூடிய திறன் அவர்களிடம் காணப்படுவதனால், அத் திறன்களை பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்கள் பங்காற்ற வேண்டியுள்ளது.
“குன்றென நிமிர்ந்து நில் ஏறு போல் நட” என்று ஔவையாரின் கருத்துக்கு இணங்க இளைஞர்கள் சுறுசுறுப்பானவர்களாக இருக்க வேண்டும்.
நாட்டின் முதுகெலும்பு பொருளாதாரம் ஆகும். இந்த பொருளாதாரத்தினை அதிகமாக வளர்க்கக்கூடிய உத்வேகம் மிகுந்தவர்களாகவே இளைஞர்கள் காணப்படுகின்றனர்.
இளைஞர்களது சமூக அக்கறையும், அரசியல் ஈடுபாடும்
தற்காலத்தில் அதிகமான இளைஞர்கள் போதைப்பொருள் பாவணியிலும், சினிமா துறையிலுமே அதிகமான நேரத்தை செலவழிக்கின்றனர்.
ஆனால் சில நாட்டுப் பற்றும், நேர்மையும் கொண்ட இளைஞர்கள் சமூக அக்கறை உணர்வுடன் சமூகத்தில் எழக்கூடிய பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வழிவகைகளை செய்யக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
மேலும் சில இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் பாராட்டத்தக்கதாகும். தற்காலத்துக்கு தேவையான அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதனை நோக்காக கொண்டு பல்வேறு இளைஞர்கள் இன்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தும் ஓர் செயல்பாடாகும்.
இளைஞர்களது சாதனைகள்
இந்திய இளைஞர்கள் இன்று புவியியல், வானவியல், மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து, உலகில் கால் தடங்களை பதித்து வந்துள்ளனர்.
இதற்கு கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த இளைஞரான சுந்தர் பிச்சை அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் இந்திய இளைஞர்களின் சாதனைகள் நிகழ்ந்தேறிய வண்ணமே காணப்படுகின்றன.
முடிவுரை
இன்றைய இளைஞர்கள் பலம் வாய்ந்த ஆயுதங்களை போன்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே நாட்டின் இளைஞர்கள் அனைவரும் உத்வேகத்துடனும், தன்னம்பிக்கையும், பொறுப்புணர்வுடனும் செயற்படுவார்களாயின் அப்துல் கலாம் அவர்கள் எதிர்பார்த்த இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவினை நனவாக்க முடியும்.
You May Also Like: