நம் இந்திய தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இத்தேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.
அந்த வகையில் எம்முடைய நாட்டுக்காக உழைத்த நல்லவர்களுள் காமராஜரும் மிகவும் முக்கியமான ஒருவராவார். இந்திய நாட்டிற்கான அவரது பணி மிகவும் ஆழமானதாகவே அறியப்படுகின்றது.
நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளமைப் பருவம்
- சுதந்திரப் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு
- கல்விக்கான பணிகள்
- நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள்
- முடிவுரை
முன்னுரை
இளம் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகவும் இந்திய வரலாற்றில் கால் பதித்தவர்களாகவும் பல்வேறு தலைவர்கள் காணப்படுகின்றனர்.
அவர்களுள் “கர்மவீரர்” என போற்றப்படுபவரும், தமிழகத்துக்கு பல்வேறு தலைவர்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக செய்யப்பட்டவரும், மனிதாபிமானம் நிறைந்த ஒருவருமாகவே காமராஜர் விளங்குகின்றார். இவருடைய வாழ்க்கை மற்றும் இவர் ஆற்றிய பணிகளை பின்வருமாறு நோக்கலாம்.
இளமைப் பருவம்
1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி குமாரசாமி- சிவகாமி தம்பதியினருக்கு விருதுநகரில் மகனாக பிறந்தவரே காமராஜர் ஆவார்.
இளம் வயதிலேயே தன்னுடைய தந்தை இறந்தமையினால் தன்னுடைய கல்வியை முழுமையாக தொடர முடியாத இவர் இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு குடும்ப பொறுப்பை தாங்கும் பொருட்டு தன்னுடைய மாமனாரின் கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியல் ஆர்வம் மிக்கவராக திகழ்ந்ததோடு, நாட்டுப் பற்றினையும் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொண்டார்.
சுதந்திரப் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்துக்கு உட்பட்டிருந்த பொழுதே காமராஜர் பிறந்தமையினால், அவர் சிறு பராயம் முதலே இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டினார்.
அதாவது 1919 ம் ஆண்டு தன்னுடைய 16 வது வயதில் சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டிய காங்ரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொண்டார்.
1931 உப்பு வரி போராட்டம், காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரகம், வாள் சத்தியாகிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கல்விக்கான பணிகள்
1954 இல் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தடுக்கப்பட்டதோடு மூன்று தடவை இப்பதவியில் இருந்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் கல்விக்காக புதிய சில கொள்கைகளையும் நடைமுறைப் படுத்தினார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் மதிய உணவுத் திட்டம், திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்மாணம் மேலும் அனைத்து சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள மக்களுக்கும் கல்வியை அணுகக்கூடிய வகையில் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் என்ற வகையில் கல்வித்துறை சார்ந்து பல பணிகளை மேற்கொண்டார்.
நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள்
காமராஜர் அவர்களின் நாட்டிக்கான பணி இன்றளவிலும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது பல அணைகளைக் கட்டி நீர் வளத்தை பெருக்கியதோடு மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தினார்.
தொழில் துறைகளில் முன்னேற்றத்தை ஏட்படுத்த பல புதிய தொழிற்சாலைகளை அறிமுகம் செய்தார். அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம், காப்புறுதி போன்ற திட்டங்களை அறிமுகம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மலை கிராமங்களுக்கு நீர் வழங்குதல் என்பது படித்த பல பொறியாளர்களுக்கே சவாலாக இருக்க, மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க, பலரும் வியக்கும்படி மாத்தூர் தொட்டிப் பாலத்தை கட்டினார். இதனால் காமராஜரை மக்கள் “படிக்காத மேதை” எனப் போற்றுகின்றனர்.
முடிவுரை
சாதாரண ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய விடா முயற்சியால் முதலமைச்சர் வரை வளர்ந்த காமராஜர் அவர்கள் 1975ஆம் ஆண்டு இவ் உலகை விட்டு பிரிந்திருந்தாலும் கூட அவருடைய செயல், பண்பு மற்றும் நல்லாட்சி என்பவற்றால் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்துள்ளதோடு, போற்றத்தக்க மாமனிதராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You May Also Like: