மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை

matruthiranaligal katturai

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை குறைபாடுடையவர்களாக கருதும் மனப்போக்கை மாற்ற வேண்டும். இங்கு சாதிப்பதற்கு ஊனம் ஒரு குறை இல்லை என்பதை உணர்ந்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மாற்றுத்திறனாளிகள்
  3. மாற்றுத்திறன் வகைகள்
  4. சோதனைகளை வென்ற சாதனையாளர்கள்
  5. எதிர்கொள்ளும் சவால்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகியல் அம்சங்கள் நிறைந்தவை.

மனிதனும் அது போலவே.  ஒவ்வொரு மனிதரும் தோற்றம், குணம், திறமை எனப் பல்வேறு விஷயங்களில் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபடுகின்றனர். யாரும் நூறு சதவீதம் முழுமையானவர்களாக படைக்கப்படுவதில்லை.

ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதனைப் பெரிதாக எண்ணி வருந்தாமல் எதிர்த்துப் போரிடுபவர்களே வெற்றியாளர்கள் ஆகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளும் அவ்வாறாக தங்களது உடலில் உள்ள குறைகளை துச்சமென மிதித்து மீண்டெழுந்து சாதனை படைக்க வேண்டியவர்களாவர்.

மாற்றுத்திறனாளிகள்

பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. மண்ணில் பிறக்கும் ஒரு குழந்தையானது எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எப்படியான தோற்றத்தோடு பிறக்கும் வேண்டும் என்பதை அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை.

அவ்வாறாகவே மாற்றுத்திறனாளிகள் எவரும் அப்படி விரும்பிப் பிறப்பதில்லை. உடலிலோ அல்லது உள ரீதியாகவோ ஏற்பட்ட குறைபாட்டினால் சில செயல்களை ஆற்ற முடியாதவர்களையே மாற்றுத்திறனாளிகள் என்கிறோம்.

மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் பிறப்பிலேயே ஏற்படும் குறைபாடுகள், கருவில் இருக்கும் போது தாய் நோய்களுக்கு ஆளாகுதல், விபத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணிகள் ஒருவரை மாற்றுதிறனாளி ஆக்குகின்றன.

அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கித் வைக்காமல் அவர்களையும் இணைத்து வாழ வேண்டியது இந்த சமுகத்தின் கடமையாகும்.

மாற்றுத்திறன் வகைகள்

மாற்றுத்திறனாளிகளை உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.

உடல் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடும் போது சற்று இயலாத்தன்மை உள்ளவர்களையே மாற்றுத்திறனாளிகள் என்கிறோம்.

ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாக கருதப்பட்டாலும் தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாக, மற்றவரில் தங்கி நிற்காமல் வாழ்க்கையில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த சமூகம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சோதனைகளை வென்ற சாதனையாளர்கள்

உலகில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனைகளை விட மாற்றுத்திறனாளிகள் படைக்கும் சாதனைகள் பல.

சாதனைகளை படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாகப் பலர் திகழ்கின்றனர்.

அமெரிக்க பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லர் இளம் வயதில் ஏற்பட்ட மர்மக்காய்ச்சலால் பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தாலும் தன் அசாத்திய திறமையால் மாற்றுத்திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார்.

அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாகிங் 21 வயது முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். நோபல் பரிசு பெற்ற கணிதவியலாளர் ஜான் நேஷ்,  சைசோப்ரேனியா எனும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்.

இசை உலகின் பிதா மகனாக கருதப்பட்ட பியானோ இசைக்கலைஞர் பீத்தோவன் தனது 26வது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்.

இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல இன்னும் பலரும் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றி சோதனைகளை சாதனைகளாக்கி வருகிறார்கள்.

எதிர்கொள்ளும் சவால்கள்

வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் மற்றும் ஏழை நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் கூடுதலாக எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய முதல் அறிக்கை குறிப்பிடுகிறது.

மாற்றுத்திறனாளில் வெறும் 49 சதவீதம் மாற்றுத்திறனாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவையாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன.

அவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கான சிறப்பியல்பு வாய்ந்த ஆசிரியர் இல்லாத நிலையும் காணப்படுகிறது. வேலைவாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றவர் எண்ணிக்கை 66 சதவீதமாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகளை குறைபாடுடையவர்களாக கருதும் மனப்போக்கை மாற்றியமைக்க வேண்டும். ஓர் உறுப்பு ஊனமுற்றால் மற்றைய நல்லுறுப்புக்கள் சிறந்த முறையில் செயற்படும் என்பதை உணர வேண்டும்.

முடிவுரை

“எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பது தான் முக்கியம் “ என்றார் ஸ்டீபன் ஹாகிங். அதுவே வாழத்தெரிந்தவர்களின் தெரிவு ஆகும். இழந்ததை மறந்து விட்டு சவால்களை சாதனைப் பயணங்களாக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளைக் கண்டுபிடித்து பட்டை தீட்டி பரந்து விரிந்த இவ்வுலகில் சிறகு விரித்து பறக்க தன்னம்பிக்கை ஒன்றே போதும். துணிந்தவன் தோற்றதில்லை.