ஒரு மனிதனை முழுமையாக்கும் கருவியாகவே வாசிப்பு காணப்படுகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் சிறுவயதிலிருந்தே வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிப்பதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இன்று வீட்டில் இருந்து கொண்டே இணையதளங்களில் சிறந்த புத்தகங்களை வாசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாசிப்பின் சிறப்பு
- வாசிப்பின் நன்மைகள்
- வாசிப்பால் உயர்ந்தவர்கள்
- வாசிப்பும் இன்றைய சமூகமும்
- முடிவுரை
முன்னுரை
வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துவதோடு, சிறந்த அறிவுத்திறனையும், நுண்ணறிவினையும் வழங்குகிறது.
பரந்துபட்ட உலக அறிவினைப் பெற்றுக் கொள்ளவும், புதிய புதிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இந்த வாசிப்பு எமக்கு உதவுவதாகவே காணப்படுகின்றது. எனவே மனித வாழ்வில் வாசிப்பு இன்றியமையாததாகும்.
வாசிப்பின் சிறப்பு
“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔவையாரின் வரிகள் இந்த உலகில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு நூல்களை வாசிக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் அறிவினை பெற்றுக்கொள்கிறான் என கூறுகின்றது.
மேலும் வாசிப்பதன் மூலம் வெறும் புத்தக அறிவினை மாத்திரம் பெற்றுக் கொள்ளாமல், எம்மை சூழ உள்ள சமூகம் பற்றியும், உலகத்தின் நிலை பற்றியும் பொது அறிவினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதாவது வாசிப்பு ஒரு மனிதனை பூரணப் படுத்துகின்றது என்ற வாசகம் இதனாலே சொல்லப்படுகின்றது.
வாசிப்பின் நன்மைகள்
வாசிப்பு என்பது மனிதனுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கையும் மன அழுத்தத்துக்கான அமைதி தன்மையையும் வழங்குகின்றது.
பல்வேறு புதிய விடயங்களையும், வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் கற்றுக் கொள்வதற்கு வாசிப்பு உதவுவதோடு, பல்வேறு தலைவர்களின் உருவாக்கத்திற்கு காரணியாகவும் இந்த வாசிப்பு அமைந்துள்ளது.
மேலும் கற்பனை ஆற்றல், பொறுமை, படைப்பாற்றல் போன்ற பல்வேறு நன்மைகளை தருவதாகவும் வாசிப்பு காணப்படுகின்றது.
வாசிப்பால் உயர்ந்தவர்கள்
வாசிப்பு மனிதனை மேன்மை அடைய செய்கின்றது இந்த வாசிப்பினால் உயர்ந்தவர்கள் உலகில் பலர் உள்ளனர்.
அந்த வகையில் வறுமை குடும்பத்தில் பிறந்து, புத்தக வாசிப்பினால் உலகைப் பற்றி அறிந்து அமெரிக்காவின் தலைசிறந்த தலைவராக திகழ்ந்த ஆபிரகாம் லிங்கன்,
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் விளைவாக உருவாகிய மாட்டின் லூதர் கிங், பல அறிவியல் நூல்கள் உருவாக்கிய அணு விஞ்ஞான அப்துல் கலாம், மேலும் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின் போன்ற அறிஞர்களையும் குறிப்பிடலாம்.
வாசிப்பும் இன்றைய சமூகமும்
இன்றைய உலகம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் நவீனமடைந்துள்ள சமூகங்களை கொண்டுள்ளதாகும். எனவே இச்சமுகங்களில் வாசிப்பு என்பது குறைவடைந்து ஏனைய பல புதிய அம்சங்களில் பொழுதுபோக்குகளை மக்கள் கழிக்கின்றனர்.
குறிப்பாக இளம் வயதினர் இணையதளங்களில் மூழ்கி இணைய விளையாட்டுகளிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். எனவே நாம் எமது சமூகத்தை சீர்படுத்த வேண்டுமாயின் வாசிப்பு பழக்கத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முடிவுரை
“ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது” எனவே எம்மால் எந்த அளவுக்கு வாசிக்க முடியுமோ அந்த அளவுக்கு எமது அறிவும் விருத்தி அடையும் என்பதனை புரிந்து கொண்டு, இணையதளங்களில் வீணாக நேரத்தை கழிக்காமல் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையதளங்களிலேயே கூட நூல்களை வாசித்துக் கொள்ள முடியும். ஆகவே வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகும் என்பதனை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
You May Also Like: