ஒரு நாட்டின் இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக வலம் வருவார்கள். ஆகவே அந்த குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதாகும்.
பாதுகாப்பான சூழலில் வளரக்கூடிய குழந்தைகளே சிறந்த செயற்திறன், ஆரோக்கியமான சிந்தனை, சிறந்த கல்வி மற்றும் தேக ஆரோக்கியம் போன்றவற்றில் சிறந்து விளங்க முடியும். குழந்தைகள் பாதுகாப்பு சமூகத்தில் இன்றியமையாததாகும்.
குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- குழந்தை பாதுகாப்பு என்றால் என்ன
- குழந்தைகள் எதிர்நோக்கும் சவால்கள்
- குழந்தைகளை பாதுகாப்பதில் சமூகத்தின் பங்கு
- குழந்தை பாதுகாப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்று நாம் வாழும் நவீன சமூகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பாரியதொரு அச்சுறுத்தலாகவே விளங்குகின்றது. குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் என்பன பாதிக்கப்படுவதை நாம் கண் முன்னே காண முடிகின்றது.
எதிர்காலத் தலைவர்களான மற்றும் எதிர்கால சந்ததியினை வழிநடத்தக்கூடிய இந்த குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
குழந்தை பாதுகாப்பு என்றால் என்ன
குழந்தை பாதுகாப்பு என்றால் என்ன என்பதனை நோக்குவமே ஆனால் சமூகங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சட்ட விரோத செயல்களில் இருந்து அவர்களை பாதுகாப்பதே ஆகும்.
சமூகங்களில் நடக்கக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், சுரண்டல்கள், புறக்கணிப்புகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் குழந்தைகளை தொழிலில் ஈடுபட வைத்தல் போன்றவாறான செயற்பாடுகளில் இருந்து குழந்தைகள் ஆரோக்கியமாகவும் எவ்வித கொடுமைகளுக்கும் ஆளாகாமலும், தனித்தன்மையுடனும் வளர்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதனையே குழந்தைகள் பாதுகாப்பு என வரையறை செய்து கொள்ள முடியும்.
குழந்தைகள் எதிர்நோக்கும் சவால்கள்
தற்கால சமூகங்களில் அதிகமான குழந்தைகள் பல்வேறு சவாலான சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுவதனை நாம் காண முடிகின்றது. பெற்றோர்களின் கவனயீனம் மற்றும் அவர்களின் ஒற்றுமையின்மை காரணமாக பல்வேறு குழந்தைகள் தனிமைப்படுத்தப்படல், புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு ஆளாகின்றனர்.
மேலும் பசி, பட்டினி, பஞ்சம் என்பவற்றின் காரணமாக பல குழந்தைகள் கூலித் தொழிலாளர்களாகவும், யாசகம் கேட்பவர்களாகவும் மாறுகின்றனர்.
குழந்தைகள் கடத்தப்படுதல், உறுப்புக்கள் திருடப்படுதல், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தப்படுதல் போன்றவாரான பல்வேறு சவால்களை இன்றைய குழந்தைகள் அனுபவிப்பதனைக் காண முடிகின்றது.
குழந்தைகளை பாதுகாப்பதில் சமூகத்தின் பங்கு
சமூகம் என்பது எம்மைச் சூழ உள்ள மக்களை குறித்து நிற்கின்றது. அதில் குழந்தைகளை பாதுகாப்பதில் முதன்மையான பங்கு பெற்றோர்களிலேயே சாரும்.
குழந்தைகளுக்கான சிறந்த சூழல், உணவு, கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை வழங்குவது பெற்றோர்களின் கடமையாகும்.
அவ்வாறே ஆசிரியர்கள் சிறந்த பழக்கவழக்கங்களையும், சிறந்த கல்வியையும் வழங்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
உறவினர்கள், அயலவர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கான சரியான சூழலையும், பாதுகாப்பையும் வழங்குவது அவர்களது கடமையாகும்.
மேலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய அனைத்து வன்முறைகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் எதிர்க்கக் கூடியவர்களாகவும், அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதும் அவசியமானதாகும்.
குழந்தை பாதுகாப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சட்ட நடவடிக்கைகளும் அமுலில் உள்ளன. அதாவது குழந்தைகளுக்கு எதிரான சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றது.
அதன் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அறிவிப்பதற்கான தனியான தொலைபேசி இலக்கம், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறைகளுக்கு எதிராக புகார் செய்வதற்கான காவல் அதிகாரிகள் என பல்வேறு ஏற்பாடுகளை அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ளமையானது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகளாகவே காணப்படுகின்றன.
முடிவுரை
ஒரு நாட்டினுடைய நாளைய எதிர்காலமாகவே குழந்தைகள் விளங்குகின்றனர். ஆகவே எமது நாடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் விளங்க வேண்டுமாயின் நாம் எமது குழந்தைகளை சிறந்த முறையில் தயார்படுத்த வேண்டும்.
அந்த வகையிலேயே தான் அரசாங்கம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.
ஆகவே சமூகம் என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் எம்முடைய சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்பாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அது எம் ஒவ்வொருவரதும் கடமை என்பதன் உணர்ந்து செயல்படுவோமாக.
You May Also Like: