நல்ல எண்ணங்களே உயர்வு தரும் கட்டுரை

nalla ennangal uyarvu tharum

எண்ணங்கள் அழகானால் எம் வாழ்க்கையும் அழகாக மாறும் என்ற கூற்றிற்கிணங்க நல்ல எண்ணங்களே எம் வாழ்வை சிறப்பாக கொண்டு செல்வதற்கான வழியாகும். அந்த வகையில் நாம் எண்ணும் எண்ணங்கள் நேர்மறையாக இருத்தல் வேண்டும்.

நல்ல எண்ணங்களே உயர்வு தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நல் எண்ணங்களின் அவசியம்
  • நேர்மறை சிந்தனை
  • கற்பக மரத்தின் கதையும் நல் எண்ணத்தின் உயர்வும்
  • நல் எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

எமது வாழ்வானது வெற்றியை நோக்கி செல்ல வேண்டுமாயின் எமது உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். அந்த வகையில் நாம் எண்ணுபவையே செயல்களில் வெளிப்படுகின்றன. நாம் எண்ணும் எண்ணங்கள் எப்போது சிறப்பாக அமைகின்றதோ அன்று எம் வாழ்வும் சிறப்பாக மாறும்.

நல் எண்ணங்களின் அவசியம்

மனித மனதில் பல்வேறு வகையான எண்ணங்கள் தோன்றி மறையும். அந்த வகையில் நல்ல எண்ணங்களை எண்ணுவதன் மூலமே எமது வாழ்க்கை சிறந்ததாக அமையும்.

அதாவது எண்ணம் போல் வாழ்க்கை என்பதனூடாக எமது எண்ணமே எம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. நாம் வாழ்வில் வெற்றியடையவும், பல சாதனைகளை படைக்கவும் நல்ல எண்ணங்களை எண்ணுவது முக்கியமானதாகும்.

நேர்மறை சிந்தனை

நாம் எண்ணும் நல் எண்ணங்களே நேர்மறை சிந்தனைக்கு வழிவகுக்கும். அந்த வகையில் நாம் நேர்மறையாக சிந்திக்கும் போதே எமது வாழ்க்கை அழகாக மாறும்.

அதாவது எதிர்மறையாக நினைக்காமல் நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும் என்று நேர்மறையாக சிந்திக்கும் போதே எம் வாழ்வு வளம் பெறும். மேலும் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து அனைத்திலும் நம்பிக்கையான நேர்மறை எண்ணங்களை எண்ணுவதே எம் வாழ்வின் உயர்வாகும்.

கற்பக மரத்தின் கதையும் நல் எண்ணத்தின் உயர்வும்

காட்டு வழியாக சென்று கொண்டிருந்த ஒரு மனிதனானவன் தாகத்தின் காரணமாக தள்ளாடிய நிலையில் சென்று கொண்டிருந்தான். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஓர் மர நிழலில் இளைப்பாறுவதற்காக சென்று அந்த மரத்தின் கீழாகவே உறங்கினான். இவ்வாறு அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது குளிர் காற்று வீசியது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் குளிர்ந்த நீர் கிடைத்தால் தாகம் தணியும் என எண்ணினான். அவன் முன்னால் குளிர்ந்த நீர் தோன்றியது. உடனே தண்ணீரை குடித்து விட்டு பின்னர் பசியின் காரணமாக பலகாரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான் சுவையான பலகாரங்களும் கிடைத்தன அதனையும் சாப்பிட்டான்.

இதற்கு காரணம் கேட்டதை கொடுக்கும் கற்பக மரத்தின் கீழ் இருந்தமையாகும். திடீரென அவனுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக காட்டிலுள்ள புலி வந்து என்னை கொன்று விடுமோ என பயந்தான். இதன் காரணமாக இவன் முன்னால் புலி தோன்றி இவனை அடித்து கொன்றது.

இக்கதையின் மூலமாக கற்பக மரமானது எமது மனதைத்தான் சுட்டிநிற்கின்றது. அந்த வகையில் எம் மனமானது நாம் விரும்புபவற்றை வழங்கும் ஆற்றலுடையதாகும்.

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதனூடாக நல் எண்ணங்களை மனதில் விதைப்பதன் மூலமே வாழவில் உயர முடியும் என்பதே இக்கதையின் மூலமாக தெளிவுபடுத்தப்படுகின்றது.

நல் எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிகள்

நாம் சந்தோசமாக வாழ்வதற்கு நல் எண்ணங்களை எண்ணுவது அவசியமாகும். அந்த வகையில் நல் எண்ணங்களை வளர்ப்பதற்கான வழிகளாக மகிழ்ச்சியாக இருத்தல், உயர்வு, தாழ்வு மனப்பான்மையை இல்லாதொழித்தல், வெற்றியை பற்றி எண்ணுதல், தோல்வியின் போது துவண்டு விடாமல் தோல்வி கற்றுத் தந்த பாடத்தின் மூலமாக வெற்றியை நோக்கி செல்லல், நம்பிக்கை என நேர்மறையாக சிந்திப்பதன் ஊடாகவே நல் எண்ணங்களானவை எம் மனதில் தோன்றும்.

முடிவுரை

எம் வாழ்வை அழகாக மாற்றுபவையே நல் எண்ணங்களாகும். நல் எண்ணமே எமது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும். விவேகானந்தரின் கூற்றுப்படி நாம் வலிமையானவராக திகழ வேணுண்டுமாயின் வலிமையாக நினைத்தல் அவசியமாகும். சிறப்பான வாழ்க்கையை வாழ நல் எண்ணங்களை மனதில் விதைப்போம்.

You May Also Like:

சுற்றுலா பயணம் கட்டுரை

நிலவளம் பாதுகாப்பு கட்டுரை