புதிய புதிய அனுபவங்களை பெறுவதால் தான் மனிதனின் பிறப்பின் மகத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறாக மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒன்றே சுற்றுலா பயணமாகும்.
இன்று காணப்படக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் சுற்றுலாப் பயணம் என்பது மனதுக்கு ஒரு அமைதியையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும். சுற்றுலா பயணம் என்பது இன்று அதிகமான மக்களால் விரும்பப்படும் ஒன்றே ஆகும்.
சுற்றுலா பயணம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுற்றுலா பயணம் என்றால் என்ன
- சுற்றுலாவின் முக்கியத்துவம்
- சுற்றுலாவின் வகைகள்
- சுற்றுலா பயணங்களின் நன்மை, தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழக்கூடிய உலகமானது பல்வேறு ஆச்சரியங்களையும், அதிசயங்களையும், இயற்கை அழகையும் பல பகுதிகளிலும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாகும். இந்த உலகின் புதுமைகளையும் அதிசயங்களையும் பார்த்து ரசிப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாகவே சுற்றுலாப் பயணம் காணப்படுகின்றது.
ஒருவனுக்கு கிடைக்கும் அனுபவமே அவனுக்கு மிகப்பெரியதொரு பாடமாக அமையும். இந்த அனுபவத்தை தரக்கூடிய சுற்றுலா பயணத்தை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
சுற்றுலா பயணம் என்றால் என்ன
சுற்றுலா பயணம் என்பது நாம் வாழக்கூடிய சூழலில் இருந்து விலகி புதியதொரு சூழலுக்குச் சென்று அந்த சூழலை உணர்ந்து கொள்ளுதல் என சாதாரணமாக வரையறை செய்து கொள்ளலாம்.
சுற்றுலா என்பதற்கான சர்வதேச வரையறையை நோக்குமே ஆனால் ஒருவர் தான் வாழும் இடத்தில் இருந்து, ஓய்வு மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக வேறொரு நாட்டுக்கோ அல்லது வேறொரு இடம் நோக்கியோ சென்று, சுமார் ஒரு வருட காலத்துக்குள் பயணித்து, பயணித்த காலப்பகுதியில் அங்கிருந்து எந்தவித ஊதியமும் பெற கூடாத தன்மையே சுற்றுலா பயணம் எனப்படும்.
சுற்றுலாவின் முக்கியத்துவம்
ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுலாத்துறை என்பதை மிகவும் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் சுற்றுலாத்துறை மூலம் ஒரு நாடு தன்னை ஏனைய உலக நாடுகளின் முன் பெருமைப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் முடியும்.
ஒரு நாட்டினுடைய வரலாற்றுச் சின்னங்கள், மரபுகள், கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்பவற்றை வெளி உலகங்களுக்கு எடுத்துக்காட்டவும், அவற்றை பாதுகாப்பதற்குமான ஒரு அடித்தளமாகவே இந்த சுற்றுலா துறை விளங்குகின்றது.
மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அந்நிய செலாவணியை இட்டுக் கொடுக்கும் ஒன்றாகவும் இந்த சுற்றுலா விளங்குவதனால் இதன் முக்கியத்துவம் அளப்பெரியதாக காணப்படுகின்றது.
சுற்றுலாவின் வகைகள்
சுற்றுலாவானது எந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகின்றதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகளாக பிரித்து நோக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையிலே அனைவராலும் விரும்பப்படும் மிகவும் பொதுவான ஒரு சுற்றுலாவாக பொழுதுபோக்கு சுற்றுலாவாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் கலாச்சாரங்களை அறிய மேற்கொள்ளும் சுற்றுலா கலாச்சார சுற்றுலாவாகவும், இயற்கை அம்சங்களை பார்ப்பதற்கு செல்லும் சுற்றுலா இயற்கைச் சுற்றுலா எனவும், விளையாட்டு ரீதியான முக்கியத்துவங்களை அறிய செல்லும் சுற்றுலா விளையாட்டு சுற்றுலா எனவும், மதரீதியான தளங்களையும், மத அறிவையும் வளர்ப்பதற்கான நோக்கில் செல்லும் சுற்றுலா மதச் சுற்றுலா என்றும் பல்வேறு வகைப்படுத்தி நோக்கப்படுவதைனைக் காணலாம்.
சுற்றுலா பயணங்களின் நன்மை, தீமைகள்
தற்கால பொருளாதரங்களில் முதன்மை வகிக்கக்கூடிய சுற்றுலா பயணங்களின் மூலம் எமது சமூகங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பது போலவே பல்வேறு தீமைகளும் கிடைக்கின்றன.
அந்த வகையில் சுற்றுலா பயணங்களில் நன்மைகளாக பொழுதுபோக்கு, அந்நியச் செவணி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சேவை துறையின் வளர்ச்சி, கலாச்சாரங்கள் பரிமாற்றப் படல், புதிய அனுபவங்களை பெற முடிதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
அவ்வாறே அதிகமான பண விரயம், அதிகமாக நேரம் செலவழிக்கப்படுகின்றமை, சூழல் மாசுபாடுகள் அதிகமாக நிகழ்தல் மற்றும் சில கலாச்சார பழக்க வழக்கங்கள் மாற்றி அமைக்கப்படுதல் போன்றவாறான தீமைகளையும் சுற்றுலாப் பயணங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன.
முடிவுரை
சுற்றுலா பயணங்கள் ஆனது இந்த உலகுக்கு சில தீமைகளை தந்தாலும் கூட, உள ஆரோக்கியம், மன அமைதி என்பவற்றுக்கு ஒரு முக்கியமான தீர்வாக இந்த சுற்றுலா பயணங்கள் தான் அமைகின்றன.
நாம் எமது உள ஆரோக்கியத்தின் பொருட்டு சுற்றுலாக்களை மேற்கொள்வதோடு அப்பயணங்கள் மூலம் சூழலுக்கு விளைவிக்கப்படக்கூடிய தீமையான செயல்களில் இருந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்வதும் அவசியமானதாகும்.
You May Also Like: