பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும், ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்நடை செல்வங்களும் நிறைந்த இடங்களாக கிராமங்கள் அமைந்திருக்கும்.
மண்ணில் மணமும், கண்ணில் கருணையும் உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே ஆகும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று எத்தனையோ நல்ல பண்புகள் கிராம மக்களின் வாழ்வில் பதிந்து கிடக்கின்றன.
கிராமங்கள் வாழ்ந்தால் மட்டுமே நகரங்கள் வாழ முடியும். நமக்கான உணவை மட்டுமல்ல, உணர்வுகளைத் தருவதும் கிராமங்கள் மட்டுமே என்றால் அது மிகையல்ல.
கிராமம் என்றால் என்ன
செயற்கை அதிகம் நுழையாத, இயற்கை மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்ற இடம்தான் கிராமம் ஆகும்.
மேலும் கிராமம் என்பது ஒரு நாட்டுப் பகுதியில் உள்ள இயற்கை வளங்களுடன் கூடிய வீடுகளையும் பாரம்பரியங்களை அதிகமாக கடைபிடிக்கும் மக்கள் குழுக்களையும் கொண்ட சுவாதித்துடன் கூடிய இடத்தை கிராமம் என வரையறை செய்து கொள்ளலாம்.
கிராமப்புற வாழ்க்கையின் நன்மைகள்
நகரத்திற்கு வெளியே வாழ்வதன் முக்கிய நன்மை சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பதாகும். கிராமப்புறங்களில் காற்று தூய்மையானதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் குறைவானதாகவும், காற்று மாசு குறைவானதாகவும் உள்ளது.
பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய், சுவாச நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருக்கும் காற்று மாசுபாடு கிராமப்புறத்தில் அதிகம் இருப்பதில்லை.
உறவுகள் மற்றும் நட்புக்களுடன் மிக நீண்ட நேரம் செலவிட வாய்ப்புக்கள் கிராமத்து வாழ்க்கையில் அதிகமாகவே உள்ளன.
பொதுவாக அனைத்து கிராம மக்களும் அவசியமான சில கால்நடைகளை வளர்த்து வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
கிராமப்புறங்களில் வாழ்க்கைக்கு செலவிடும் பணம் குறைவு. குழந்தைகள் அக்கம்பக்கத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இங்கே அனைவருக்கும் அனைவரையும் தெரியும், எனவே தொலைந்து போவது சாத்தியமில்லை.
கூட்டுக்குடும்ப உறவுகள் மறைந்து வரும் இன்றைய காலச்சூழலில் கிராமங்களில் கூட்டுக்குடும்ப உறவு முறை நிலைத்து நிற்கின்றது. நகரங்களை விட கிராமத்து மக்கள் கலாசாரத்தோடு வாழ்கிறார்கள்.
நகரமாகும் கிராமங்கள்
இன்று நகரங்களுக்கு இணையாகக் கிராமங்களில் சீமெண்டால் கட்டப்பட்ட வீடுகளைப் பார்க்க முடிகின்றது. கிராமங்களில் முன்பெல்லாம் பனை ஓலைகளினால் வேய்ந்த வீடுகளும் தென்னங் கீற்றுக் கொட்டகைகளும், ஓட்டு வீடுகளுமாகவே இருந்தன. ஆனால் இப்போதெல்லாம் கனிசமான அளவு இவற்றைப் பார்க்க முடிவதில்லை.
உழவுத் தொழிலின் பாரம்பரியத்தையும், உழைப்பையும், நீர் மேலாண்மையையும் ஒன்றாகப் பார்க்க விரும்புபவர்கள் கிராமத்தின் பக்கம் சென்று பார்க்கலாம்.
உழைப்பாளிகளைக் கொண்ட இயற்கையோடு போராடி ஊருக்கே உணவளிக்கும் கிராமத்து சமூகம் இன்று கிராமத்தை மறந்து நகரில் முடங்கி வருவது விவசாய வரலாற்றினை பேராபத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதற்கு இணையாக உள்ளது.
உலகிலேயே அதிக கிராமங்களைக் கொண்ட இந்தியா நாட்டில் 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 31%மான மக்கள் கிராமங்களை மறந்து நகர வாழ்க்கைக்கு மாறிவிட்டனர் என்பதனை அறிய முடிகின்றது.
அத்தோடு இந்நிலை நகரவாசிகளின் நகர வாழ்க்கையை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருப்பதுடன் உணவு, நீர்ப்பற்றாக்குறை போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. இந்நிலை மாற வேண்டும்.
நமது பாரம்பரியம் கிராமத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பதனை அனைவரும் உணர வேண்டும். பசுமை மற்றும் அமைதி நிறைந்த கிராமப்புற வாழ்க்கையை என்றும் இனிமையானது. கிராமங்கள் செழிக்கட்டும் அதனால் நாடு நலம் பெறட்டும்.
You May Also Like: