எப்போது ஒரு நாட்டின் அரசாங்கத்தின்கீழ் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் என்பது பெறாது தமது பணிகளை சிறப்புற செய்கின்றார்களோ அப்போதுதான், அந்த நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை நிலையும் வளர்ச்சி போக்கினை அடையும்.
லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- லஞ்சம்என்றால் என்ன
- இந்தியாவில் லஞ்சம்
- லஞ்சத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்
- லஞ்ச ஒழிப்பு
- முடிவுரை
முன்னுரை
தற்காலத்தில் உலக நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பாரிய பிரச்சினைகளுள் ஒன்றாக லஞ்சம் என்பது காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஒரு பிரச்சனையில் இருந்து குற்றம் செய்தவர் தப்பிப்பதற்காக லஞ்சம் கொடுத்தனர்.
ஆனால் தற்காலத்தில் மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.
லஞ்சம்என்றால் என்ன
லஞ்சம் என்பது அரச பணியிடங்களில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவர் தான் மேற்கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வமான பணிக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் சட்டப்படியான ஊதியம் தவிர முறைதவறிய வழியில் பணமாகவோ, பொருளாகவோ அல்லது வேறு வடிவத்திலோ ஆதாயத்தை கேட்பதும், பெறுவதும் ஆகும். இது ஊழல் என்றும் கூறப்படுகின்றது.
இந்தியாவில் லஞ்சம்
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின்படி, உலகில் லஞ்சம் காணப்படுகின்ற 178 நாடுகளில் 95 ஆவது இடத்தை பெறும் நாடாக இந்தியா காணப்படுகிறது.
“ஊழல் தடுப்பு சட்டம் -1988”, “பண மோசடி தடுப்பு சட்டங்கள்” என பல சட்டங்கள் காணப்பட்ட போதிலும், இன்று வரை இந்தியாவில் லஞ்சம் என்பது பெரும் பிரச்சனையாகவே காணப்படுகிறது.
இந்தியாவில் அதிக லஞ்சம் பெறப்படும் மாநிலங்களாக இராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம், லூர்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடக, தமிழ்நாடு, மற்றும் கேரளா என்பன காணப்படுகின்றன.
லஞ்சத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்
லஞ்சம் என்பது ஒரு தனி மனிதரை மட்டுமின்றி ஒரு நாட்டின் முழு வளர்ச்சியையும் முற்றிலும் தடுக்கும் ஓர் விடயமாகும். லஞ்சத்தினால் அரசினால் கிடைக்கும் நன்கொடைகள் மற்றும் சலுகைகள் என்பன வறிய மக்களுக்கு சென்றடைவது தடுக்கப்படுகிறது.
திறமை இருந்தும் உரிய தொழில் வாய்ப்புகள் வறிய இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை. தற்காலத்தில் சிறுவர்கள் சிறந்த கல்வியை பெறுவதிலும் லஞ்ச முறைமையின் தாக்கம் அதிகரித்துள்ளமை கல்வி முறைமையில் பாரிய தாக்கமாக அமைந்துள்ளது.
அரச ஊழியர்கள் லஞ்சத்தை பெற்று தகுதியற்றவர்களுக்கு பல உரிமைகளை கொடுப்பதன் விளைவாக பாரிய குற்றச்செயல்கள் இடம் பெறுகிறது. இதனால் நாட்டினுடைய வளர்ச்சி நிலை என்பது பிற்போக்கான நிலையில் செல்கின்றது.
லஞ்ச ஒழிப்பு
லஞ்சம் என்பது இப்போது தோன்றிய ஒன்றல்ல, 1500 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட மோசேயின் சட்டம் லஞ்ச ஊழலை கண்டனம் செய்கிறது. அப்போதும் பல லஞ்ச ஒழிப்பு சட்டங்களும் ஏராளமாக ஏட்டில் காணப்படுகின்றன. இருப்பினும் லஞ்சம் என்பது தற்காலம் வரை அணையிட்டு தடுக்க முடியாத காட்டாறாகவே காணப்படுகிறது.
லஞ்சம் என்பது ஒரு நாளில் ஒழிவடையும் ஒரு விடயம் அல்ல. தனி நபர்கள் முதல் அரசு வரை இணைந்து செயல்படுவதனால் மாத்திரமே, இதனை ஒரு நாட்டில் இருந்து முற்றுமுழுவதாக ஒழிக்க முடியும்.
லஞ்சம் பெறுபவர்களை காட்டிலும் லஞ்சம் வழங்குபவர்களுக்கு அதிக தண்டனைகள் வழங்கப்படும் வகையில், சட்டங்களை வகுத்தல் வேண்டும். லஞ்சம் பெறுபவர்களுக்கு எதிராக தகவல் தருபவர்களுக்கு அரசாங்கம் மதிப்பு மற்றும் பாராட்டுகளை வழங்குதல் வேண்டும்.
லஞ்சத்தினால் ஏற்படும் எதிர்கால பொருளாதார பிரச்சினைகளை மக்கள் மத்தியில் விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
முடிவுரை
மக்கள் அனைவரும் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்கு உரிய காரியங்கள் சிறப்புற நடைபெறும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் ஏற்படுத்துதல் வேண்டும்.
மக்களும் லஞ்சம் கொடுக்காமல் அவர்கள் உரிமைகளை சட்டப்படி பெற முயலுதல் வேண்டும். எதிர்கால சமூகம் தொடர்பான சிந்தனையுடன் ஊழல்களை தடுப்பதன் விளைவாக நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்வடைய செய்யலாம்.
You May Also Like: