இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி விவசாய துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இது பல வேலைகளை சுலபமாக்கியுள்ள அதேவேளை சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.
விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தின் அவசியம்
- பாரம்பரிய விவசாயமுறை
- விவசாயத்தின் இன்றைய நிலை
- இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
- முடிவுரை
முன்னுரை
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றில் முதலிடம் பிடிப்பது உணவு ஆகும்.
உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் எல்லோர்க்கும் உணவளிக்கும் மேன்மையான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரம், மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தொழில் ஆகும்.
இன்றைய உலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப நாகரிக மாற்றங்களினால் விவசாயமும் மாற்றங்களைக் கண்டுள்ளது.
விவசாயத்தின் அவசியம்
“சுழன்றும் ஏர் பின்னது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு. உலகின் இயக்கத்திற்கு இன்றியமையாதது உணவு. விவசாயம் இல்லாமல் போனால் பசி, பட்டினி, பஞ்சம் என்பன அதிகரித்து மக்கள் உணவின்றி திண்டாடும் நிலையே உண்டாகும்.
ஆகையால் மனிதனுக்கு பசி என்ற உணர்வு இருக்கும் வரையில் விவசாயம் அழிவடையாது. சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப உணவு உற்பத்தியும் இடம்பெற வேண்டியது அவசியமாகும்.
இன்று உலகின் பல நாடுகளில் மக்கள் பசியால் வாடுகின்றனர் இதனை நீக்குவதற்கு விவசாயமே அவசியமாகின்றது.
பாரம்பரிய விவசாய முறை
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கை விவசாயத்திலேயே ஈடுபட்டு வந்தனர். இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட கழிவுகளை முற்றிலுமாக தவிர்த்து மக்கிய குப்பை, கால்நடைக்கழிவுகள் ஆகியவற்றை நிலத்தில் விளையும் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துவது ஆகும்.
பக்கவிளைவுகளற்ற இத்தகைய விவசாய முறையினால் இயற்கையைப் பாதுகாப்பதோடு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களும் மனிதனுக்கு நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான தூய உணவுப் பொருட்களாக இருந்தன.
நிலத்தை பண்படுத்துவதற்கு கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் மக்கள் நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழ்ந்தமைக்கு இத்தகைய பாரம்பரிய இயற்கை விவசாய முறையே காரணமாக அமைந்தது.
விவசாயத்தின் இன்றைய நிலை
உலகில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக விவசாயத்திலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
விவசாய நடவடிக்கைகளில் இயந்திரங்கள் நிலத்தை பண்படுத்த பயன்படுத்தப்படுவதோடு விளைச்சலை அதிகரிப்பதற்கும் பயிர்களின் நோய்களை நீக்குவதற்கும் இரசாயன உரங்களும் இரசாயன கிருமிநாசினிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அதைவிட இயற்கை விதைகளுக்கு மாற்றீடாக மரபணுக்கள் மாற்றப்பட்ட விதைகளும் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இன்று பாரிய பிரச்சனையாக இருப்பது விவசாய விளைநிலங்களின் ஆக்கிரமிப்பு ஆகும்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்ததால் பாரம்பரியமாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வெளியே வந்துள்ளதால் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும் தொழிற்சாலைகளாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன.
இயற்கை விவசாயத்தின் நன்மைகள்
இன்று தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக அதிக பரப்பளவில் பயிரிட முடிவதுடன் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் ஈட்டுவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்ற நவீன கிருமிநாசினிகள் உணவை நஞ்சாக்குவதுடன் ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றது.
இரசாயனப் பொருட்களினதும் இயந்திரங்களினதும் அதீத பாவனையினால் சூழலும் மாசடைகின்றது. மாறாக இயற்கை விவசாயத்திலே ஆரோக்கியமான உணவு மக்களுக்கு கிடைத்ததுடன் சூழலும் ஆரோக்கியமாக இருந்தது.
“அடி காட்டிற்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு” என்ற இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்திற்கிணங்க நடைமுறைக்கு சாத்தியமான இயற்கை விவசாய முறையினால் நம்மையும் நம் சூழலையும் ஆரோக்கியமாக பேண முடியும்.
முடிவுரை
“தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என விவசாயத்தின் மகத்துவத்தை கூறும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க பழமையான விவசாயத் தொழிலை பாதுகாத்து எம் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.
இளம் வயதிலேயே இன்று பலரும் நோயாளிகள் ஆகியமைக்கு காரணம் எமது விவசாய முறைகளிலும் உணவுப்பழக்க வழக்கங்களிலும் ஏற்பட்ட மாற்றமாகும்.
ஆகையால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பேணி வந்த இயற்கை விவசாயமுறையினை நடைமுறைப்படுத்தி எம்மையும் எம் எதிர்கால சந்ததியையும் சூழலையும் ஆரோக்கியமான பேணுவோமாக.
You May Also Like: