வாசித்தேன் வளர்ந்தேன் கட்டுரை

vasithen valarnthen katturai in tamil

இந்த உலகில் சாதனைகள் படைத்த ஒவ்வொரு மனிதனும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அதாவது ஒரு மனிதனுடைய எண்ணத்தையும், அறிவையும் விருத்தி செய்வதில் வாசிப்பு மகத்தான பங்கை ஆற்றுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய அறிவு, சிந்தனை, எண்ணம் என்பவற்றில் மாறுபட்டு காணப்படுகின்றனர். வாசிப்பு என்பது ஒரு மனிதனுக்கு எப்பொழுதும் உயர்வை தரக்கூடியதாகவே காணப்படும்.

வாசித்தேன் வளர்ந்தேன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாசிப்பின் நோக்கம்
  • வாசிப்பின் மகத்துவம்
  • வாசிப்பின் பயன்கள்
  • வாசிப்பு திறனை தூண்டும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

“வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” என்ற சான்றோர்களின் கருத்தானது வாசிப்பின் முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்திக் காட்டுகின்றது.

உலகில் காணப்படக்கூடிய எல்லா உயிரினங்களையும் விட மனிதனே அறிவாற்றல் மிக்கவனாக காணப்படுகின்றான். அவனுடைய அறிவியல் வளர்ச்சியினை மென்மேலும் உயர்வடையச் செய்யும் ஒன்றாகவே இந்த வாசிப்பு காணப்படுகின்றது.

சிறு வயது முதலே வாசிப்பு பழக்கத்தை பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்துவது பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். வாசிப்பு என்பது வளர்ச்சியின் அடிப்படை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வாசிப்பின் நோக்கம்

ஒரு மனிதன் வாழ்வில் உயர்வடைவதற்கு மகத்தான பங்களிப்பு செய்யும் வாசிப்பானது பல்வேறு நோக்கங்களுக்காக இன்றைய மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் பொழுதுபோக்குக்காக வாசித்தல், ஓய்வு நேரங்களை கழிப்பதற்காக வாசித்தல், தகவல்களை சேகரிப்பதற்காக வாசித்தல், அறிவை விருத்தி செய்வதற்காக வாசித்தல் மற்றும் புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்காக வாசித்தல் போன்றவாறாக பல்வேறு நோக்கத்திற்காக வாசிக்கப்படுகின்றது.

வாசிப்பின் மூலம் வளர்ச்சி அடைந்தவர்கள் அறிவை தேடவும், தகவல்களை திரட்டவும் மற்றும் புதிய விடயங்களைப் பற்றிய அறிவைப் பெறவுமே வாசிப்பை அதிகமாக மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாசிப்பின் மகத்துவம்

“கண்டது கற்க பண்டிதன் ஆவான்” என்ற பழமொழியானது வாசிப்பின் மகத்துவத்தை மிகவும் எளிதாக உணர்த்துவதாக காணப்படுகின்றது.

அதாவது உயர்வான நிலையை ஒருவன் அடைவதற்கு வாசிப்பு மிகவும் அடிப்படையானதாகும் என்ற கருத்தையே இந்த பழமொழி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் மிகவும் சிறந்ததொரு மனநிலையை உருவாக்குவதற்கும், நன்மை தீமைகளை பிரித்து நோக்கவும், நன்னெறிகளை கற்றுக் கொள்ளவும், அறிவினை விருத்தி செய்யவும் வாசிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றமை வாசிப்பின் மகத்துவத்தையே எமக்கு உணர்த்துகின்றது.

வாசிப்பின் பயன்கள்

ஒரு மனிதனுக்கு சிறந்ததொரு வழிகாட்டி, நல்லதொரு ஆசான் புத்தகமாகும். இவ்வாறான வழிகாட்டிகளின்படி வாழ்க்கையை நடத்துவோமேயானால் வெற்றிப் பாதையை எட்ட முடியும். அதற்கு நாம் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாசிப்பதன் மூலம் புதிய விடயங்களை கற்றுக் கொள்ளுதல், ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளுதல், ஆக்கத் திறன்களை பெற்றுக் கொள்ளல், அறநெறிகளை கற்றுக்கொள்ளல், உலகியல் சார் உண்மைகளை புரிந்து கொள்ளுதல், மற்றும் வாழ்வில் உயரிய இலட்சியங்களை அடைந்து கொள்ளுதல் போன்றவாறான பல்வேறு பயன்களை எமக்கு வழங்குகின்றது.

வாசிப்பு திறனை தூண்டும் வழிமுறைகள்

இன்று நம் சமூகங்களுடைய குறைந்து வரும் பழக்கங்களில் ஒன்றாகவே வாசிப்பு காணப்படுகின்றது. இதை மாற்றியமைத்து வாசிப்பை எமது வாழ்வியலோடு இணைந்த ஒரு பகுதியாக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற இலக்கை ஒவ்வொரு மனிதனும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிறு வயது முதலே பிள்ளைகளை வாசிப்பில் ஈடுபட வைத்தல், அதற்கான வழிவகைகளை செய்து கொடுத்தல், பிள்ளைகள் மத்தியில் வாசிப்பை ஊக்கப்படுத்துதல், மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகளின் வாசிப்பில் ஆர்வம் காட்டுதல் போன்றவாறான செயல்பாடுகள் வாசிப்புத் திறனை தூண்ட கூடியனவாகும்.

முடிவுரை

ஒரு தனியனுடைய வளர்ச்சிப் பாதையின் அடிக்கல் வாசிப்பு ஆகும். அதாவது ஒரு தனியன் தன்னுடைய வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கையில் அவனுக்கு பக்கபலமாக இருப்பது இந்த வாசிப்பு தான் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே வாசிப்பின் மகத்துவங்களை மற்றும் முக்கியத்துவங்களை நம் சந்ததியினருக்கு உணர்த்தி, வாசிப்பு பழக்கம் கொண்ட சிறந்ததொரு சந்ததியினை எதிர்காலத்தில் கட்டியமைப்பது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

You May Also Like:

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை