உலகில் காணப்படக்கூடிய பல்வேறு நாடுகளுள், பாரிய நிலப்பரப்புகளையும், அதிகமான மக்கள் தொகையையும் கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானதொரு நாடாகும்.
உலக நாடுகளோடு போட்டி போட்டுக் கொண்டு, வளர்ச்சி பாதையில் துரிதமான நடை போட்டுக் கொண்டிருக்கின்றது நம் நாடு.
உலக அரங்கில் முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுவே தற்கால இந்தியாவின் குறிக்கோளாக காணப்படுகின்றது.
வளர்ச்சி பாதையில் இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிவியல் துறை வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சி
- இந்திய வளர்ச்சி பாதையில் இளைஞர்களின் பங்கு
- புதிய திட்டங்கள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழக்கூடிய இந்திய தேசமானது ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு நாடாகவே காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு புரட்சிகளின் பிற்பாடு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து இன்றுவரையிலும் பல்வேறு சவால்களை முறியடித்துக் கொண்டு வளர்ச்சி பாதையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவை இன்று நாம் காண முடியும்.
மருத்துவம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், வணிகம், சுற்றுலா, அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று வரும் ஓர் நாடாகவே இந்தியா காணப்படுகிறது.
அறிவியல் துறை வளர்ச்சி
ஒரு நாட்டில் அறிவியல் துறையில் வளர்ச்சி ஏற்படும் போது அந்நாட்டில் ஏனைய துறைகளும் வளர்ச்சி அடைவது சாதாரணமானதாகும்.
இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி ஆய்வு நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிலையங்கள் என பல்வேறு அறிவியல் துறை வளர்ச்சிக்கான அடிப்படைகளை காண முடியும்.
அணு ஆராய்ச்சி நிலையம் மாத்திரம் இந்தியாவில் ஐந்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றமையும் அறிவியல் துறையின் வளர்ச்சியையே எமக்கு உணர்த்துகின்றது.
மேலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அத்தியாவசியத்தன்மையும், இணைய கல்வி முறைகளும் இன்று இந்தியாவின் அறிவியல் துறையில் பாரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
ஆசிய கண்டத்தில் பொருளாதார வல்லமை கொண்ட ஒரு நாடாக இந்தியா காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் இந்திய மக்களின் முதன்மை தொழிலாகவும், பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் வேளாண்மை காணப்படுவதோடு, சீமந்து உற்பத்தி, போக்குவரத்து வாகனங்களின் உற்பத்தி, உரம் உற்பத்தி, தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தி மற்றும் உலர் உணவு பண்டங்களின் உற்பத்தி போன்றன இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், கைத்தொழில்கள் என பல்வேறு தொழில்கள் வளர்ச்சி கண்டிருப்பதன் மூலமாகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் துரிதமான முறையில் அபிவிருத்தி அடைந்து வருவதனைக் காண முடியும்.
இந்திய வளர்ச்சி பாதையில் இளைஞர்களின் பங்கு
உலக அரங்கில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள இந்திய நாட்டின் வளர்ச்சி பாதையில் பாரிய பங்காற்றக் கூடியவர்களாக இளைஞர்கள் காணப்படுகின்றனர்.
அதாவது துடிப்பு மிக்க இளைஞர்களின் கையில்தான் நாட்டின் எதிர்காலம் காணப்படுகின்றது. புதுமை புரிபவர்கள், மனம் தளராத முயற்சி படைத்தவர்கள், கலைஞர்கள் போன்ற பலர் நாட்டின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர்.
இந்த வகையில் மருத்துவம், பொறியியல், வானவியல், தொழில்நுட்பவியல், இசை, நாடகம், விளையாட்டு, அரசியல் போன்ற அனைத்து துறைகளிலும் இளைஞர்களின் பங்கு அதிகமாக காணப்படுகின்றமையினாலேயே இந்தியாவின் வளர்ச்சியும் துரிதமாகி உள்ளது.
புதிய திட்டங்கள்
இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய பல்வேறு புதிய திட்டங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவனவாகவே காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை ஈடு செய்யும் பொருட்கள் முத்ரா திட்டம், மக்களது வீட்டுக்கனவே நடவாக்கும் நோக்கில் யோஜனா திட்டம், மூன்று வருடங்களுக்கு வறுமை கோட்டின் கீழ் வாழக்கூடிய பெண்களுக்கான எரிவாயுகளை வழங்கும் உஜ்வலா திட்டம், ஒவ்வொரு குடிமகனும் மின்யுக சேவை மூலம் தகவல் மற்றும் அறிவு பெறுவதனை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான திறன் சார் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திறன் இந்தியா திட்டம் போன்றவாறான பல்வேறு புதிய திட்டங்கள் ஆனது இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளமையை குறிப்பிடலாம்.
முடிவுரை
உலக நாடுகளின் வரிசையில் அபிவிருத்திப் பாதையில் துரிதமான வளர்ச்சியை பெற்றுள்ள நாடுகளில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தில் காணப்படுகின்றது. அதாவது ஏனைய நாடுகள் பலவும் வியந்து பார்க்கும் அளவுக்கு இந்தியா பல்வேறு வளர்ச்சிகளை எட்டி உள்ளது.
ஆகவே இந்திய தேசமானது மென்மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து உலக அரங்கில் ஒரு சிறப்பான நாடாக விளங்குவதற்கான முயற்சிகளை அளிப்பது இந்திய குடிமகன்களான ஒவ்வொரு இளைஞர்களும் கடமையாகும்.
You May Also Like: