நூலகத்தின் சிறப்பு கட்டுரை

noolagathin sirappugal katturai in tamil

“புத்தகமே சிறந்த ஆசான்” இந்த வகையில் வாசிப்பு தாகத்தினை மக்கள் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இடமாகவே இந்த நூலகம் காணப்படுகின்றது.

ஏழை, பணக்காரன் என்று எந்தவித பாகுபாடு எதுவும் இன்றி, அனைத்து மக்களும் சென்று தங்களுக்கான கல்வி தாகத்தினையும், பொது அறிவு, இலக்கியம், இலக்கணம், கணிதம், விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகள் சார்ந்த அறிவினையும் விருத்தி செய்வதற்கான ஒரு தளமாக இந்த நூலகம் விளங்குகின்றது.

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நூலகத்தின் தேவை
  • நூலகத்தின் சிறப்புகள்
  • நூலகத்தின் வகைகள்
  • நூலகத்தின் பயன்கள்
  • முடிவுரை

முன்னுரை

“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது” என பேரறிஞர் விக்டர் கியூகோ குறிப்பிடுகின்றார். அந்த வகையில் எவ்வளவு அதிகமாக தேடி கற்கின்றானோ அந்த அளவுக்கு அவனுடைய வாழ்வியலும், அறிவும் சிறப்புறும்.

ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலம் நூலகம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

நூலகத்தின் தேவை

“வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” ஆகவே மக்கள் வாசிப்பதற்கான அனைத்து வகையான நூல்களையும் உள்ளடக்கிய நூலகம் ஒரு சமூகத்திற்கு மிகவும் அவசியமான தேவையாக காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் ஒரு சமூகத்தை வளர்ப்பதற்கும், அழிப்பதற்கும் ஆயுதமாக நூலகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது பண்டைய கால மன்னர்கள் தங்களுடைய சமூகத்தை வளர்ப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு கல்வி சாலைகள், நூலகங்கள் என்பவற்றை அமைத்திருந்தனர்.

அதுபோலவே, எதிரிகள் ஒரு சமூகத்தை தாக்கும் போது முதலில் புத்தகங்களையும், நூலகங்களையுமே அழித்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும். நூலகத்தின் தேவை ஒரு சமூகத்துக்கு இன்றியமையாததாகும்.

நூலகத்தின் சிறப்புகள்

“பல நூறு நண்பர்களை விட ஒரு நூல் சிறப்பு வாய்ந்தது” என்ற வாசகத்துக்கு ஏற்ப பல இலட்சக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே வைத்திருக்கும் நூலகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

மக்களுக்கு எழுத்தாற்றல், கேள்வி ஞானம், படைப்பாற்றல், வாசிப்புத் திறன், விவேகம் மற்றும் தேடல் போன்ற உயர்ந்த திறன்களை வழங்கக்கூடிய ஒரு களஞ்சியமாகவே நூலகம் செயற்படுவதானது அதன் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் அறிவுத்தாகம் உடையவர்களுக்கு தாகம் தீர்க்கும் ஒரு இடமாக நூலகம் விளங்குகின்றமை அதன் சிறப்பை எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

நூலகத்தின் வகைகள்

நூலகங்களின் நிர்வாக கட்டமைப்புகளுக்கு ஏற்ப நூலகங்கள் பல்வேறு விதமான வகைகளில் காணப்படும்.

அந்த வகையில் பொது நூலகம் என்பது எல்லா துறை சார்ந்த நூல்களை உள்ளடக்கியதாகவும்,

கல்வி நூலகம் என்பது மாணவர்கள் ஆசிரியர்களுடன் தொடர்புடைய கற்றலுடன் கூடிய நூல்களை உள்ளடக்கியதாகவும்,

பாடசாலை நூலகங்கள் என்பவை மாணவர்களுக்கு தேவையான நூல்களை உள்ளடக்கியதாகவும்,

விசேட நூலகங்கள் குறிப்பிட்ட சில தேவைகளுக்கான நூல்களை மாத்திரம் உள்ளடக்கியதாகவும் காணப்படும்.

அத்தோடு தற்காலங்களில் இணைய வழி நூலகங்களின் உருவாக்கமும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறாக நூலகங்களின் அளவுக்கும், தொழிற்பாட்டுக்கும் ஏற்ப நூலகங்களை மேற்கண்டவாறான வகைப்பாடுகளுக்குள் பிரித்து நோக்க முடியும்.

நூலகத்தின் பயன்கள்

“கண்டது கற்க பண்டிதன் ஆவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதன் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது நூலகம் ஆகும்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் என அனைத்து பிரிவினரும் உலகளாவிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வழி வகுப்பதும் நூலகத்தின் ஒரு பயனாகும்.

சிறந்த சமூகத்தை கட்டி எழுப்புதல், அறிவு தாகத்தை தீர்த்தல், புதிய விடயங்கள் தொடர்பான அறிவை உருவாக்குதல், பல்சுவை சார்ந்த நூல்களையும் வழங்குதல் போன்றவாரான பல்வேறு பயன்களையும் நூலகத்தின் மூலம் நாம் அடைந்து கொள்ள முடியும்.

முடிவுரை

ஒவ்வொரு நாட்டினுடைய சிறப்பும், மேன்மையும் அந்நாட்டு மக்களின் கல்வி அறிவிலேயே தங்கியுள்ளது. ஆகவே சிறந்ததொரு நாட்டை கட்டி எழுப்பும் பெருமை நூலகங்களுக்கு உரித்தானதாகும்.

தற்போதைய நவீன காலங்களில் மக்களின் வாசிப்பு பழக்கமானது வெகுவாக குறைந்துள்ளமையினால், நூலகங்களின் தேடலும் குறைந்த அளவிலேயே உள்ளது.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் நூலகங்களின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள், நன்மைகள் என்பவற்றை உணர்ந்து கொண்டு நூலகங்களை அதிகமாக நாடக்கூடியவர்களாக மாறுவது அவசியமானதாகும்.

You May Also Like:

புத்தகம் பற்றிய கட்டுரை

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்