இயற்கையின் நன்மைகள் கட்டுரை

iyarkaiyin nanmaigal katturai in tamil

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

எமது முன்னோர்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு இயற்கையின் நன்மைகள் பற்றிய அறிவும், அனுபவமும் காணப்பட்டுள்ளது.

ஆனால் இன்று நாம் செயற்கையுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே இயற்கையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வது எமது கடமையாக உள்ளது.

இயற்கையின் நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கையின் சிறப்பு
  3. இயற்கைச் சூழல்
  4. இயற்கையின் பயன்கள்
  5. தற்காலத்தில் இயற்கையும் மனிதனும்
  6. முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் இவ்வுலகானது பல்வேறு இயற்கையின் அருட்கொடைகளை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனது வாழ்வாதாரமும் இந்த இயற்கை வளங்களை அடியொட்டி இருப்பதனை காணலாம்.

எனவே நாம் ஒவ்வொருவரும் இயற்கையின் நன்மைகளைப் பற்றி அறிந்து, அதனை பாதுகாப்பது எமது கடமை என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் சிறப்பு

உலகில் வாழக்கூடிய மனித இனம் செழிப்புற்று வாழ்வதற்கு இயற்கை உதவி புரிகின்றன.

அதாவது பரந்து விரிந்த இந்த பூமி, நான்கு பக்கங்களாலும் சூழப்பட்ட கடல், பச்சை பசேல் என அடர்ந்த காடுகள், சலசல என ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் விலங்குகள், பறவைகள்

இவை அனைத்தும் வாழ்வதற்கு தேவையான பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், தீ, ஆகாயம் போன்றவற்றினையும் இந்த இயற்கை எமக்கு அள்ளித் தருகின்றது. இது இயற்கையின் சிறப்புகளை எடுத்துக்காட்டுகின்றது.

இயற்கை சூழல்

உலகில் வாழக்கூடிய எல்லா உயிரினங்களும் இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. அந்த வகையில் நாம் இயற்கை சூழலுடன் ஐக்கியமாகியுள்ளோம்.

எமது சூழலில் அன்றாடம் நாம் இயற்கை உணவு, இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம் போன்றவற்றினை பயன்படுத்துவதனைக் காணலாம்.

மேலும் எம்மைச் சூழ இயற்கை காடுகள், நதிகள், நீர், நிலம் போன்ற இயற்கை வளங்கள் எமக்கு நன்மை பயப்பதனையும் காணலாம்.

இயற்கையின் பயன்கள்

மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான காற்று, நீர், உணவு, உடை, உறையுள் போன்றவற்றில் நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள் என்பன தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும், இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மீன்கள் போன்றன உணவு தேவையை பூர்த்தி செய்வதாகவும் காணப்படுகின்றன.

மேலும் இயற்கை வனங்கள் பூமியின் வெப்பநிலையை சீர் செய்வதுடன், மண்ணரிப்பையும் தடுத்து, உலகிற்கு மழையையும் பொழியச் செய்கின்றன.

இவ்வாறாக இயற்கையின் அருட்கொடைகள் அனைத்துமே எமக்கு பயனளிக்க கூடியதாகவே காணப்படுகின்றன.

தற்காலத்தில் இயற்கையும் மனிதனும்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதனின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு பாதிப்பாகவே அமைந்துள்ளது.

அதாவது நகரமயமாக்கும், தொழிற்சாலைகளின் உருவாக்கம், செயற்கையான விவசாய முறைகள் போன்றவற்றினால் இயற்கை சூழலில் பல்வேறு இரசாயனங்களும், நச்சுப் பதார்த்தங்களும் கலந்து நீர், காற்று, நிலம் என அனைத்துமே மாசுபடுகின்றன.

இதனால் உலகில் சீரற்ற காலநிலை உருவாவதோடு மனித இனம் பாரிய சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.

முடிவுரை

தற்காலங்களில் பொருளாதார வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை பல சிதைவுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. தனிமனித இலாபங்களுக்காக ஒட்டுமொத்த மனித இனமும் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே உலகை சீராக இயக்கும் இயற்கை அன்னையின் அருட்கொடைகளை நாம் உணர்ந்து கொண்டு, இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

அதாவது இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை எம்மை பாதுகாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை எனலாம்.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை