ஒள்வாள் அமலை என்றால் என்ன

புறப் பொருள் வெண்பா மாலையில் தும்பத்திணையின் ஒரு துறையாகவே ஒள்வாள் அமலை துறை காணப்படுகின்றது.

ஒள்வாள் அமலை என்றால் என்ன

ஒள்வாள் அமலை என்பது வாள் வீரர்கள் ஆடுதல் ஒள்வாள் அமலையாகும். அதாவது போரில் இறந்த பகையரசனை சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுதலினையே ஒள்வாள் அமலையாக கொள்ளலாம்.

வலி கொழுதோள் வாய்வயவர்
ஒலிகழலான் உடன் ஆடின்று

விளக்கம்: வலிமை நிறைந்த தோள்களையுடைய வாளை ஏந்திய வீரர்கள் ஒலி எழுப்பக் கூடிய கழலை அணிந்த தும்பை வீரர்கள் ஆடுதலை குறித்து நிற்கின்றது. அதாவது உரம் பொருந்திய தோளினையுடைய வாள் வீரர்கள் ஆரவாரிக்கும் கழலினை உடையானை சூழ்ந்து அவனுடன் கூத்தாடுவதே ஒள்வாள் அமலை ஆகும்.

ஒள்வாள் அமலை பாடலடிகள்

வாளை பிறழும் கயங்கடுப்ப வந்தடையார்
ஆளமர் வென்றி யடுகளத்துத் – தோள் பெயராக்
காய்த்தடு துப்பிற் கழன் மறவர் ஆடினார்
வேத் தொடு வெள்வாள் விதிர்த்து

விளக்கம்: வீரர்கள் ஆடும் நிலையைக் குளத்தில் மீன்கள் பிறழ்வது போல கூரிய வாள்களைச் சுழற்றிக் கொண்டு வென்ற மன்னன் வீரர்கள் அவனுடன் கூடி ஆடினர் என்று வெண்பா கூறுகின்றது. அதாவது போர்க்களத்தில் வாள்களை உயர்த்தி ஆட்டும் தோற்றம் வாளை பிறழும் கயங்கடுப்ப இருப்பதாக வெண்பா குறிப்பிடுவது நயம். தொல்காப்பியர் இதனை வாளோர் ஆடும் அமலை என்கிறார். களிற்றோடு பட்ட பகைவேந்தனை சுற்றி அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை என்பது தொல்காப்பியருடைய கருத்தாகும்.

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழுவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன், வாழ்க அவன் கண்ணி
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே

விளக்கம்: தெருவில் கோடியர் எனும் யாழிசை கலைஞர்களோடு சேர்ந்து ஆடுபவன் மட்டும் அல்லன் சேரலாதன் போர்க்களத்தில் வெற்றி முரசு முழங்க ஆடுபவன் வெற்றி வாளை உயர்த்தி கொண்டு ஆடுபவன் ஆவான். கோட்டைகளை தாக்கி வென்ற மகிழ்ச்சியில் உழிஞை பூவையும் மின்னும் போர் அணிகலன்களையும் சூடிக் கொண்டு ஆடுபவன் பகை வேந்தர்கள் இறந்து விடுகின்ற போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன் ஆதலால் இவள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆயினான். அவன் தலையில் அணிந்திருக்கும் பனம் பூ மாலை வாழ்க என ஒள்வாள் அமலையானது விளக்கப்பட்டுள்ளது.

ஒள்வாள் அமலை துறையின் சிறப்புக்கள்

ஒள்வாள் அமலையில் போரில் வெற்றியீட்டிய வீரனின் சிறப்பு பாடப்படுகிறது. அதாவது போரில் வெற்றியீட்டிய வீரனானவன் தான் பகைவனை வீழ்த்தியதையிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் ஆடுகின்றான் என்பதினூடாக வீரச் சிறப்பானது வெளிப்படுத்தப்படுகின்றது.

உவமைகளை கையாண்டு வீரர்களுடைய வெற்றியானது பாடப்படுகின்றது. அதாவது வீரர்கள் ஆடும் நிலையை குளத்தில் மீன்கள் பிறழ்வது போல் என்ற உவமையினூடாக விளக்கப்படுகின்றது.

மேலும் வீரர்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக் காட்டி அவர்களுடைய வீரச் செயல்கள் விளக்கப்பட்டுள்ளமையினையும் கூறலாம். அதாவது உரம் பொருந்திய தோள், வாளினை உடைய வீரர்கள் என்பதினூடாக ஒரு வீரனின் பெருமை எடுத்துக்காட்டப்படுகின்றது.

You May Also Like:

செங்கீரைப் பருவம் என்றால் என்ன

சைபர் கிரைம் என்றால் என்ன