சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
- சாலை விதிமுறைகள்
- வாகன ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு
- நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளதுடன் பலரையும் அங்கவீனர்களாக்கியுள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாமையினாலேயே இத்தகைய அசாம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
உலகில் வாழும் மக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பாக தெளிவான விளக்கம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
வீட்டில் இருந்து ஏதேனுமொரு தேவைக்கு வீதிக்கு வந்த ஒருவர் திரும்பவும் வீட்டிற்கு உயிரோடு திரும்புவாரா என்ற ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளளது அசுர வேகத்தில் சாலையில் திரியும் வாகனங்கள்.
இத்தகைய அவசர கதியில் பயணிக்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இவை நொடிப்பொழுதில் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் போன்ற பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான அலட்சியம், அவசரம், விழிப்புணர்வின்மை போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கு சாலை பாதுகாப்பு அவசியமாகிறது.
சாலை விதிமுறைகள்
சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். அவ்விதிமுறைகளை நாட்டின் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த விதிகளை பின்பற்றுவதற்கு மக்களை அறிவுறுத்துவதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். அவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு தண்டனைகளை வழங்குவர்.
பொதுவாக சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் சாலையில் பயணம் செய்யும் பாதசாரிகளுக்கும், வாகனங்கள் ஓட்டும் சாரதிகளுக்கும் தனித்தனியாக காணப்படுகின்றன.
வாகன ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு
சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பலருக்கு அதை எப்படி ஓட்ட வேண்டும் என்று தெரிவதில்லை. வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பாக வாகனத்தின் பகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சாலை விதிமுறைகள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளைகளை சரியான முறையில் பின்பற்றி பயணிக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிந்து கொள்வது
- வாகனங்களில் பயணிப்பவர்கள் இருக்கைப்பட்டி அணிவது
- இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்யாமல் இருப்பது
- மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது
- அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது
என்பன மூலம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும்.
நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு
சாலைகளில் வாகனங்களை ஓட்டுபவர்களைப் போல பாதசாரிகளும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் வாகனங்கள் வரலாம் என்ற எண்ணத்துடன் அவதானமாக நடைபாதைகளிலே நடக்க வேண்டும்.
சாலைகளை அதற்காக கோடுகள் இடப்பட்ட இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும். தொலைபேசியில் உரையாடிக் கொண்டு அல்லது பாடல்களை கேட்டு கொண்டு செல்லும் போது கவனம் குலையும் வாய்ப்புள்ளதால் சாலையில் நடக்கும் போது அவற்றை தவிர்த்தல் நல்லது.
முடிவுரை
சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தனிநபர்கள் அக்கறையோடு செயல்பட்டால் மாத்திரமே விபத்துக்களை தடுக்க முடியும்.
பெறுமதி வாய்ந்த உயிர்கள் நொடிப்பொழுதில் விபத்துக்களில் பறிபோவது கவலைக்குரிய விடயமாகும்.
சாலை விபத்துக்களால் தமது வாழ்வை இழந்தவர்கள் அதிகம் ஆதலால் சாலையில் பயணிக்கும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் தமது உயிரையும் மற்றோரின் உயிரையும் காக்கும் முகமாக பிரயாணம் செய்தால் மட்டுமே பாதுகாப்பான சாலைகளை உருவாக்க முடியும்.
பாதுகாப்பான சாலைகளை உருவாக்கி பயணங்களை அழகாக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.
You May Also Like: